மாவை ஒரு மாபெரும் சரித்திரம்! – பாகம் – 4

– காலிங்கன் –

‘கொடி பிடித்தவர்கள், கொம்பிழுத்தவர்கள்’ எல்லாம் தம்மைப் போராளிகள் என்றும் அரசியல் பிரமுகர்கள் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கையில் என்றைக்கும் போல ஆரவாரமின்றி இருக்கும் ஒரு பெரும் சரித்திரம் மாவை.சோ.சேனாதிராஜா. முகப்புத்தகப் பதிவுகளுக்காகவும், மேடை முழக்கங்களுக்காகவும் தமிழ்த் தேசியம் பேசும் பலரிடையே சிறுவயது முதலே மூர்க்கமான போராட்ட குணமும், தீர்க்கமான தமிழ்த் தேசியச் சிந்தனையும் கொண்ட ஒருவர் தமிழரசுக் கட்சியின் தலை
வரான மாவை. சேனாதிராஜா.

தனது சிறு பராயம் முதல் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டு, அதற்கெதிராகப் பல போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு சிறை சென்று, பல இன்னல்களை அனுபவித்த அவரிடம், அவரது வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எங்கள் எண்ணத்தை வெளிப்படுத்திய போது, வழக்கம் போல சிரித்தபடியே மறுத்து விட்டார். ஆனாலும் நாங்கள் விடுவதாயில்லை. ‘ஐயா, இது உங்களுக்காக அல்ல – எங்களுக்காக அல்ல, நாளைய நமது சந்ததிக்காக’ என்றோம். உடன்பட மறுத்தாலும், நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் உடன்பட்டுக் கொண்டார்.

இற்றைக்கு 62 வருடங்களுக்கு முன்னரே – தமிழ் இயக்கங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே – அவரது அடக்கு முறைக்கெதிரான பயணம் ஆரம்பித்திருக்கிறது. அவருடைய அரசியல் பிரவேசம் பற்றி அவருடன் அளவளாவியதன் வெளிப்பாடாக அவரது மொழி நடையில் ‘மாவை ஓர் மாபெரும் சரித்திரம்’ தொடரின் நான்காவது பகுதி இந்த இதழில் வெளிவருகிறது.

 

1968 ஆம் ஆண்டு திருமலையில் தமிழர் நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களுக்கும், ஆக்கிரமிப்புக்களுக்கும் எதிராக நாம் இளைஞர் போரட்டங்களை நடத்திய காலத் தொடர்ச்சியாகும். திருமலையில் உவர்மலைப் பிரதேசத்தை இலங்கை அரசு உதவியோடு கடற்படை ஆக்கிரமிக்க எடுத்த நடவடிக்கைகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் பாரதி விவசாயக் கழகத்தினருடன் நாமும் பங்கு கொண்டிருந்தோம்.

அப்பொழுது உயர் தர மாணவனாக நான் இருந்த காலம். உயர் தரத் தேர்வைக் கூட எழுத முடியாமல் தவறவிட்டிருந்தேன். காடுகளில் – நிலங்களில்; – நாம் குடில் அமைத்து இருந்தமையால் நெருப்புக் காய்ச்சலுக்கு இலக்கானேன். உடலால் சுகவீனமுற்ற போதிலும் – உடல் களைத்துச் சோர்வுற்றிருந்தாலும், உவர்மலைப் போராட்டத்தால் கடற்படை ஆக்கிரமிப்பைத் தடுத்த சந்தோசமும், கன்னியா – பன்குளம் பகுதிகளுக்கு இடையிலுள்ள கித்துலூற்று சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து இளைஞர்கள் குடியேறியமையாலும் மனதளவில் திடமாயிருந்தோம். அதனால் போராட்ட வரலாற்றில் தடம் பதித்தோம்.

கித்துலூற்றுப் போராட்டங்களின் போது நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை பற்றியும், அந்த நேரத்தில் வழக்கறிஞராக இருந்த திரு.சம்பந்தன் எம்மை விடுவிக்க நீதிமன்றில் வாதாடியிருந்தார் என்பது பற்றியும் முன்னைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

இந்தக் காலகட்டத்தில் 1965 இல் டட்லி சேனநாயக்கா பிரதமரானார். தமிழரசுக் கட்சி டட்லி -செல்வநாயகம் உடன்படிக்கையை நிறைவேற்ற தந்தையின் ஆலோசனைப்படி இராணி வழக்கறிஞர் (QC) திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சரானார். அவரால் கொண்டுவரப்பட்ட மாவட்டசபைத் திட்டத்தை இளைஞர் அணி எதிர்த்தது. அப்பொழுது அமைச்சர் திருச்செல்வம் திருக்கோணேஸ்வரப் பிரதேசத்தைப் புனித நகராக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார். சேருவாவிலப் பௌத்த துறவி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். பிரதமரும் பின் வாங்கி விட்டார். நாம் இளைஞர்களைத் திரட்டி திருமலைத் திருக்கோணேஸ்வரப் பகுதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தோம்.

அதே நேரத்தில், தமிழரசுக் கட்சி அமைச்சராக இருந்த திருச்செல்வத்தைப் பதவி துறக்குமாறு தீர்மானித்தமையையடுத்து 1968 செப்ரெம்பர் 16 ஆம் திகதி அமைச்சர் பதவியை அவர் துறந்தார். 1969 ஏப்ரலில் உடுவில் மாநாடு இடம்பெற்றது. ஐ.தே.கட்சி அரசிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேற வேண்டும் என நாம் தீவிரமாக இருந்தோம். இனி வரும் காலங்களில் அமைச்சர் பதவிகளைப் பொறுப்பேற்கக் கூடாது என்று வாதிட்டோம். வாலிபர்களின் அழுத்தம் காரணமாகத் தெரிவு செய்யப்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் எவரும் அமைச்சுப் பதவி ஏற்கவில்லை.

ஆனால், திரு.திருச்செல்வம் செனட் சபைக்கு நியமிக்கப்பட்டு அமைச்சராக்கப்பட்டிருந்தார். உடுவில் மாநாடு அரசிலிருந்து விலகுவதென்று தீர்மானித்தது. 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறிமாவோ தலைமையில் சுதந்திரக்கட்சி இடதுசாரிக் கட்சியினர் வெற்றி பெற்று ஆட்சியமைத்தனர்.

1971 இல் ஜனதா விமுக்தி விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யினர் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் பல ஆயிரம் போராளிகள் சிறையிலடைக்கப்பட்டனர். விஜேவீரா முதலான தலைவர்கள் பொரளை மற்றும் போகம்பரைச் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
1973 இல் கைது செய்யப்பட்ட நான், பொரளைச் சிறையில் விஜேவீரா முதலானோரைச் சந்தித்துப் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறேன். சிறிமாவோ அரசு 1972 இல் புதிய அரசமைப்பை உருவாக்கிய அதே நேரத்தில் தமிழரசுக் கட்சி சமஷ்டி அரசியல் திட்டமொன்றை முன்வைத்தது. அரசு அதனை நிராகரித்து விட்டது.

அதனால் 1972 மே 14 இல் திருமலையில் கூட்டப்பட்ட மாநாட்டில் தமிழ்க் கட்சிகள் பல கூடின. இந்த மாநாட்டில் வைத்து, புதிய அரசமைப்பை எதிர்த்துப் போராடுவது என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இளைஞர் அமைப்பின் சார்பாக நானும் பங்கு கொண்டிருந்தேன். அந்த மாநாட்டில் எமது வகிபாகம் முக்கியம் பெற்றிருந்தது.
இன ஐக்கியம் ஏற்பட வல்வை மாநாடு வழி வகுத்தது. 1971 அரசமைப்பு சபையிலிருந்து தமிழர் பிரதிநிதி – தந்தை செல்வா வெளியேறினார். வெளியேற மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இளைஞர்களாகிய நாம் தமிழர் பிரதேசங்களி;ல் போராட்ட அமைப்புக்களை உருவாக்கினோம். அரசமைப்புக்கு எதிராக ஜனநாயக வழிப் போராட்டங்கள், கிளர்ச்சிகள் என்பனவற்றில் ஈடுபட்டோம். 1973 மார்ச் 9 ஆம் திகதி நிதி அமைச்சர் டாக்டர் என்.எம்.பெரேரா யாழ்ப்பாணம் வந்தபோது எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட நானும் ஏனைய 42 இளைஞர்களும் கைது செய்யப்பட்டோம்.

1973ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இரண்டரை ஆண்டுகள் சிறையிலடைத்தார்கள். கொழும்பு தடுப்புக் காவல் சிறை, பொரளை சிறைச்சாலை, நீர்கொழும்பு சிறைச்சாலை, போகம்பரை, வெலிக்கடைச் சிறைச்சாலைகள் என்பவற்றில் எம்மை அடைத்தார்கள். அக்காலத்தில் தான் ஜே.வி.பி போராளிகளை சிறைகளில் சந்தித்தோம். பொரளைச் சிறைச்சாலையில் கடும் பாதுகாப்பிலிருந்த விஜேவீராவைச் சந்திக்கவும் முடிந்தது. ஜே.வி.பி தலைவர் ளாயிருந்தவர்கள் பலரைச் சந்தித்தோம். ஒரே இடங்களிலும் அடைக்கப்பட்டிருந்தோம். கியூபாவில் நடைபெற்ற 11ஆவது இளைஞர் மாநாட்டிலும் ஜே.வி.பி விஜேவீரா முதலான தலைவர்களைச் சந்திக்கவும், கலந்துரையாடவும் முடிந்தது.

1972 மார்ச்சில் கைது செய்யப்பட்ட என்னை கொழும்பு 4ஆம் மாடிக்கு அடிக்கடி அழைத்துச் சென்று விசாரித்தனர்;. விசாரணைகளின் போது கடும் சித்திரவதைக்கு உள்ளாகவும் நேர்ந்தது. அரசமைப்புக்கெதிரான போராட்டங்களினிடையே வன்முறைகளும் குண்டு வீச்சுக்களும் இடம்பெற்றமையை அறிந்திருந்தேன். அரசமைப்பை எதிர்த்தமை, குண்டு வீச்சுக்கள் இடம்பெற்றமை, ஆகியவற்றைத் தூண்டினேன், தூண்டும் வகையில் பேச்சுக்களைப் பேசினேன் என்பது தான் என் மீதான குற்றச்சாட்டுகள். துப்பாக்கி அடிப்பாகத்தினாலும், எஸ்.லோன் பைப் தூண்களாலும் நான் தாக்கப்பட்டேன். சிகரெட் நெருப்பால் சூடுபட்டேன். ஒரு முறை நாலாம் மாடியிலிருந்த ஒரு மேசையின் முன் ஒரு கதிரையில் இருத்தி வைக்கப்பட்டிருந்தேன். நீண்ட நேரம் விசாரணை ஏதும் இடம்பெறவில்லை. தண்ணீர் கூடத் தரவில்லை. எனக்கு வேறு வேலையிருக்கவில்லை. அந்த மேசையில் சிங்களத்தில் பல சொற்கள் வடிவமைத்து எழுதப்பட்டிருந்தது. அதில் ஓர் இடைவெளியில் இருந்த கூர் ஆணியால் ‘தமிழ் வாழ்க’ என செதுக்கி வடிவமைத்துவிட்டேன்.

அந்த நேரம் அங்கு வந்த பஸ்ரியம்பிள்ளை என்ற தமிழ் அதிகாரி நான் ஆணியால் செதுக்கிய ‘தமிழ் வாழ்க’வைப் பார்த்ததும் கோபமாகிவிட்டார். தமிழ் வாழ்க என்ற வாசகத்தை அழிக்கச் சொன்னார். நான் அழிக்க மறுத்துவிட்டேன். அடித்தார், உதைத்தார். தலை மயிரைப் பிடுங்கினார். தாடி மயிரைப் பிய்த்து எடுத்தமையால் முகத்தில் இரத்தம் வரத் தொடங்கி விட்டது. இப்போது கூட என்னால் அந்தக் கணத்தை மறக்க முடியாமல் உள்ளது.  சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தால் வெளியே பரீட்சை எழுதக் கொண்டு போவார்கள் என்று சொல்லப்பட்டமையால் நாங்களும் நாம் முன்னர் சித்தியடைந்த பாடங்களை விட வேறு பாடங்களுக்குப் பரீட்சை எழுத விண்ணப்பித்தோம்.

நீர்கொழும்பில் ஒரு பாடசாலைக்குப் பாதுகாப்போடு அழைத்துச் சென்று மாலை ஐந்;து மணிக்குத் திருப்பி அழைத்து வருவார்கள். உறவினர்கள், நண்பர்கள் எம்மைப் பார்க்க வருவார்கள். எமக்கு நல்ல உணவு,பழங்கள், இனிப்பு வகைகள் கொண்டு வருவார்கள். அவர்களுடன் பேசுவதற்கு அனுமதிப்பார்கள். எம்மைப் பார்க்க வருவோர் அழுதும் விடுவார்கள்.

நான் 1973 இல்; கைது செய்யப்பட்டு நாலாம் மாடிக்கு விசாரணைக்;குக் கொண்டுசெல்லப்பட்ட காலங்;களில் பஸ்ரியாம்பிள்ளையை விட இன்னொரு தமிழ் உளவுத்துறை அதிகாரியும் அங்கே கடமையாற்றியமையை பின்னாள்களில் அறிய முடிந்தது. அவர்தான் எஸ்.என்.ஜி.நாதன். தமிழ்ப் பற்றுள்ள ஒருவர் என அறிந்திருக்கிறேன். நாலாவது மாடியில் எம்மை விசாரிக்கும் சந்தர்ப்பங்களை அறிந்து பார்த்திருக்கிறார். அங்கு நடைபெற்ற விசாரணை, நாம் சித்திரவதைப்படுவதை வெளியில் தெரிவித்திருக்கிறார் போலும்;. அந் நாள்களில் சுதந்திரன் பத்திரிகைகளில் எம்மைப் பற்றிய செய்திகள் வெளிவந்திருந்தன. திரு.நாதன் அவர்கள் இளைப்பாறிய பின் வவுனியா நகரசபையின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

1974 தை 10 ஆம்; திகதி யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராட்சி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. அம் மாநாட்டை நடத்துவதற்கு அரசு அனுமதிக்கவில்லை என அறிந்தோம். யாழ். மேயராக அப்போதிருந்த அல்பிரட் துரையப்பாவும் அரசுடன் தமிழராட்;சி மாநாடு நடைபெறுவதை எதிர்த்து நின்றார் என அறிந்தோம். பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர். அவர் எமது ஊரைச் சேர்ந்தவர். போகம்பரைச் சிறையில் நாம் இருந்த காலங்களில் எம்மை வந்து சந்திப்பார். உணவுப் பொட்டலங்களும் கொண்டு வந்து தருவார். எங்களோடு மலையகத் தமிழர்களும் சிறைச்சாலை முருகன் கோவிலுக்கு வருவார்கள். பேராசிரியர் இலக்கியம், குறிப்பாக புறநானூறு பற்றியெல்லாம் எம்முன் பாடமெடுத்துச் செல்வார்.

அப்பொழுது சிறைச்சாலை மேலதிகாரி பின் சிறைச்சாலை ஆணையாளர் ஆக இருந்தவர் தர்மதாஸ். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தனின் மாணவன். அது எமக்கு வாய்ப்பாயிருந்தது. பேராசிரியரின் பேச்சுக்கள் எமக்கு உற்சாகமாயிருக்கும். பேராசிரியர் எங்களைப் பார்த்து விட்டு ஊருக்குச் செல்லும் போது எனது தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறியமையை அறிந்திருக்கிறேன். அவர் தலைமையில் 10ஆவது தமிழாராட்சி மாநாடு நடைபெற்றது. யாழ்.பொலிஸ் அதிபராயிருந்த சந்திரசேகராவின் கட்டளைப்படி மாநாட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து பத்து தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி சிறையிலிருந்த எம்மை வாட்டியது.

நாம் நீர்கொழும்புச் சிறைக்குள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். சிறை அதிகாரிகள் உண்ணாவிரதத்தைத் தடுத்த போது சிறையிலிருந்த ஜே.வி.பியினர் எமக்காக வாதாடி உண்ணாவிரதத்தை ஆதரித்து நின்றனர். எம்முடன் உண்ணாவிரதத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். நான் நீர்கொழும்புச் சிறையிலிருந்த போது சிங்கப்பூரில் தபால் துறை அதிபராயிருந்த சரவணமுத்து மாமா அவரது மகள், மருமகன் ஆகியோர் என்னைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களுடன் இளம் பெண் ஒருத்தியும் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் என்னைத் தெரிந்தவர். அவர் தான் 1980 இல் என்னைத் திருமணம் செய்த பவானி. அவரது வீட்டில் தான் தந்தை செல்வா, தம்பி பிரபாகரன், அமிர் அண்ணர் குடும்பம் உட்பட பல தமிழ்த் தலைவர்களுடனான சந்திப்புக்கள் இடம்பெற்றன.
1975 பிற்பகுதியில் நீர்கொழும்புச் சிறையிலிருந்து அநுராதபுரம் சிறைக்கு மாற்றிவிட்டார்கள். அங்கிருந்து செட்டி தனபாலசிங்கம், ரெலோ சிறி சபாரத்தினத்தின் உறவுக்காரர், இரத்தினகுமார், கண்ணாடிப் பத்மநாதன் ஆகியோர் தப்பிச் சென்றுவிட்டனர். அன்று முழுவதும் எஞ்சியிருந்த எங்களுக்கு சிறைக் காவலர்கள் கண்மூடித்தனமாக அடித்தார்கள், உதைத்தார்கள், சிலருக்கு காயங்கள், கை உடைந்தது. ஒரு நாள் முழுவதும் குடிக்கத் தண்ணீரில்லை, சாப்பிட உணவில்லை. ஒரு பெரிய அறையில் போட்டு பூட்டி விட்டார்கள்;.

மறுநாள் ‘ போகம்பரைச் சிறைக்கு மாற்றப் போகிறோம்’ என்று எமக்கு அறிவிக்கப்பட்டது. அந்தச் செய்தி எமக்கொரு தற்காலிக ஆறுதல்;. அங்கு மருத்துவமனையில் எம்மை அனுமதித்;து சிகிச்சை வழங்கினர் சிறை மருத்துவர்கள், உணவும் கிடைத்தது. வேதனை இன்னும் மாறவில்லை. அங்கு உறவுக்காரர்களும், கொழும்பு தமிழரசுக் கட்சி இளைஞர்களும் வந்து பார்த்தனர். உணவு தந்தனர். ஆறுதல் தந்தனர்.

அடுத்து போகம்பரச் சிறைகளில்; இருந்த பொழுது தான் 1976 ஓகஸ்;ட் 5ஆம் திகதி இலங்கை கொழும்பில் அணிசாரா நாடுகளின் மாநாடு இடம்பெற்றது. நாங்கள் தீர்மானமெடுத்தோம் சிறையிலிருந்தவாறே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று. அவ்வாறே போராட்டத்தை ஆரம்பித்தோம். (தொடரும்)

Share the Post

You May Also Like