குருட்டாட்டம் கூடாது….!

 

  • – தெல்லியூர் சி.ஹரிகரன்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சில சில காரணங்களை முன்வைத்துஇராணுவத்தினராலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டம், அதனுடன் தொடர்புடைய ஒழுங்கு விதிகள், அவசரகாலச் சட்ட விதிகள், சிவில் உரிமைகளுக்கான சர்வதேச பட்டயச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த கைது ஒரு சாதாரண விடயமன்று. மிகவும் சிக்கல்வாய்ந்த விடயம். அவர்கள் கைதுசெய்யப்பட்டமை பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ். அந்தச் சட்டத்தின் சரத்துக்கள் மிகவும் காத்திரமானவை. நீதிமன்றம நினைத்தால்கூட இவர்களை விடுதலைசெய்வது கடினமான காரியமாகும்.

மாணவர்கள் மீதான கைதுக்கு தற்போது எம்மிடம் இருக்கின்ற ஒரே ஆயுதம் மென்வலு மட்டுமே! எந்தப் பெரிய சட்ட அறிவும் – சட்ட ஆளுமையும் – சட்டப் புலமையும் – இந்தக் கைதுவிடயத்தில் உபயோகப்படமாட்டா. அரச தரப்பு நினைத்தால் மாத்திரமே அவர்களை விடுதலை செய்யமுடியும்.

இலங்கை அரசமைப்புக்கு முரணாக ஜனாதிபதி மைத்திரிபால ஒக்ரோபரில் செயற்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த இரா.சம்பந்தனை பிரதான மனுதாரராகக் கொண்டு, அவரது பெயரில் முதலாவது மனுவை உயர்நீதிமன்றில் தாக்கல்செய்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கனக ஈஸ்வரன் முதலான சட்ட வல்லுநர்கள் சிறப்பாக வாதாடி எவரும் எள்ளளவும் எதிர்பார்க்காத ஓர் இமாலய வெற்றியைப் பெற்று அரசமைப்பைத் தூக்கி நிறுத்தினார்கள். இலங்கைச் சட்டத்துறையை சர்வதேசமே வியந்துபோற்றுமளவுக்கு, ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, அனைத்தையும் செய்யும் ஆற்றல்கொண்ட இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியையே ஆட்டங்காண வைத்தனர்.

இவ்வாறான ஒரு பெரும் சாதனையை எம் தமிழ் சட்ட வல்லுநர்கள் படைக்க, அதைப் பலரும் ஏத்த, குறுகிய அரசியல் லாபங்கொண்ட – குறுகிய மனம் படைத்த –  சிலர், புரிந்தும் புரியாத மாதிரி, ”ரணிலுக்காக முண்டுகொடுத்த சுமந்திரன், அரசியல் கைதிகள் விடுதலைக்காக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து வாதாடி அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்கலாமே! ஏன் செய்யவில்லை? அவருக்கு தமிழ்மக்கள் நலனைவிட ரணிலின் நலன்தான் பெரிது!” என்று பொய்வதந்திகளை மக்கள் நம்புமளவுக்கு உண்மைபோல் பரப்பினார்கள். மக்களில் சிலரும் இவர்கள் பேச்சைக்கேட்டு சுமந்திரனைக் கடிந்தார்கள்.

உண்மை நிலைவரம் இதுதான். அரசியல் கைதிகள் அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்கள்மீது அரசாங்கம்தான் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. ஒரு வழக்குக்கு எதிராக இன்னொரு வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்கள் மிகவும் காத்திரமானவை. ஒருவர் பயங்கரவாதி என்று தெரிந்தாலோ அல்லது அவர் செய்த குற்றம் தொடர்பில் தெரிந்திருந்தாலோ பாதுகாப்புத் தரப்புக்குத் தகவல்கொடுக்கத் தவறினால் அவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யலாம்.  அவ்வளவுக்கு மிகவும் சட்டச் சிக்கலானதுதான் பயங்கரவாதத் தடைச் சட்டம். இதனால், நாட்டின் ஆட்சியாளர்களுடன் அரசியல் ரீதியில் பேசி, மென்போக்கின் ஊடாகத்தான் இந்த விடயத்தைக் கையாளவேண்டும்.

மிகவும் சுருங்கக் கூறின், அரச தரப்பு இவர்களை விடுவிக்க ஆட்சேபம் தெரிவிக்குமாயின், நீதிமன்றம் நினைத்தால் என்ன, சுமந்திரன், கனக ஈஸ்வரன், தவராஜா போன்ற புகழ்பெற்ற சட்ட வல்லுநர்கள் எவ்வளவு திறமையாக வாதாடினாலும் இவர்களை விடுவிக்க இயலாது; விடுவிக்க முடியாது. ஆகவே, அரசுத் தரப்புடன், குறிப்பாக சட்டமா அதிபர் திணைக்களத்துடன், சமரசத்தை ஏற்படுத்துவதன்மூலமே இவர்களை விடுவிக்க முடியும்.

மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட வழக்கு நேற்று நீதிமன்றுக்கு வந்துள்ளது. அவர்களின் விடுதலை தொடர்பில் பொலீஸார் ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றனர். மக்களால் நிராகரிக்கப்பட்ட – மக்களை உசுப்பேத்தி படுகுழியில் தள்ளும் சில கூத்தாடிகள், தம்மால் எதையும் இந்த வழக்கில் சாதிக்கமுடியாது என்று தெரிந்திருந்தும், கறுப்புக்கோட்டை மாட்டிக்கொண்டு, நீதிமன்றுக்குச் சென்று குருட்டாட்டம் ஆடியிருக்கின்றார்கள். தமது ஏமாற்று அரசியலுக்காக முகநூல் பதிவு வேறு.

இந்த மாணவத் தலைவர்கள் விடயத்தில் இந்த நேரத்தில் எதைச் செய்யவேண்டுமோ அதை கனகச்சிதமாகச் செய்து முடித்திருக்கின்றார் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விடயங்களைக் கையாளுந்திறமை சுமந்திரனிடத்தில் மட்டும்தான் உண்டு என்றுணர்ந்து, சுமந்திரனிடத்தில் இந்த விடயங்களைக் கையாள்கின்ற முழுப் பொறுப்பையும் ஒப்படைத்திருக்கின்றது. அவரும் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை – தன்மேல் நம்பிக்கைவைத்து பல்கலைக்கழகம் ஒப்படைத்த வேலையை – மிக நிதானமாகக் கையாள்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் உரையாடக் களம் அமைத்தாற்போல் நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வைபவரீதியான அமர்வு அமைந்திருந்தது. இந்த அமர்வில் ஜனாதிபதி சட்டத்தரணி, பதில் சட்டமா அதிபர் டப்புல டி லீவேராவுடன், பல்கலைக்கழக மாணவர்கள் கைதுதொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துபவரல்லவா சுமன். இந்தச் சந்திப்பில் பதில் சட்டமா அதிபர் இந்த விடயம் தொடர்பில் நேற்று மாலை 3.30 மணிக்கு சட்டமா அதிபர் அலுவலகத்தில் விரிவாக உரையாடுவதற்கு ஏற்ற ஒழுங்குகளை அமைத்துக் கொடுத்தார். இந்தச் சந்திப்பில் பதில் சட்டமா அதிபர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் அஸாத் நவாவிம் கலந்துகொண்டார். சுமார் 30 நிமிடங்கள் பேச்சுக்கள் நடைபெற்றன.

நேற்றுக் காலை மேல்நீதிமன்ற அமர்வில் பதில் சட்டமா அதிபருக்கு, சுமந்திரன் இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியவுடன், பதில் சட்டமா அதிபரின் பிரதிநிதிகள் கோப்பாய் பொலீஸாருடன் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட வழக்கின் கோவைப் பிரதிகளைத் தயார்படுத்தியிருந்தனர்.

பல்கலை மாணவர் கைது தொடர்பாக பதில் சட்டமா அதிபர் – சுமந்திரன் ஆகியோருக்கிடையான சந்திப்பில் இரு நிலைப்பாடுகள் பதில் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்டது. அதில் ஒன்றை விரைந்து தான் எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

முதலாவது – சம்பந்தப்பட்டோருக்கு எதிராக வலுவான சாட்சியங்களும் குற்றங்களும் இல்லாதவிடத்து அவர்களுக்கு எதிரான வழக்கைக் கொண்டு நடத்தத் தேவையில்லை. எனப் பொலீஸாருக்குப் பரிந்துரைத்தல். (அதாவது வழக்கைக் கைவிடும் முடிவை எடுத்தல்)

இரண்டாவது – வழக்கைத் தொடர்வதாயின், சம்பந்தப்பட்டோரைப் பிணையில் விடுவிக்க அரசுத் தரப்பு எதிர்க்காமல் இருத்தல். – ஆகியவையே.

இந்த விடயத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டோர் பொலீஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் பிரதிகள் இதுவரை (நேற்றுவரை) தமக்குக் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்த பதில் சட்டமா அதிபர், அவை கைக்குக் கிடைத்ததும் மிக விரைவில் – மேற்கூறப்பட்ட இரண்டு நடவடிக்கையில் ஒன்றைத் தாம் எடுப்பார் என சுமந்திரனுக்கு உறுதியளித்தார் என்றும் தெரியவருகின்றது.

இதேவேளை, நேற்றுப் பகல் மேற்படி வழக்குத் தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபர் திணைக்களம் அவசரமாகக் கோரிப் பெற்றுக்கொண்டது என்ற தகவல் கோப்பாய் பொலீஸ் தரப்பால் நீதிமன்றுக்கு அறியப்படுத்தப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

ஆக, பல்கலை மாணவர்கள் விடுதலை விடயத்தில் சுமந்திரன் கையாள்கின்ற மென்வலு உத்தி நிச்சயம் நல்ல ஒரு விடிவைப் பெற்றுத்தரும். அதற்கிடையில், இந்த நந்தவனத்து ஆண்டிகள், வெண்ணெய் திரண்டுவரத் தாழியை உடைத்த கதைபோல், தமது சுயநல அரசியலுக்காகக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைக்காமல் விட்டால் சரி. குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழாதுவிட்டால் சரி.

 

Share the Post

You May Also Like