யாழ்.தேர்தல் தொகுதியில் 51 வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைத்தார் மாவை!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் முன்மொழிவில் மேற்கொள்ளப்படவுள்ள 232 திட்டங்களில் முதலாவது கட்டமாக விலைமனு கோரப்பட்டு ஒப்பந்ததாரரிடம் கையளிக்கப்பட்ட 51 திட்டங்கள் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டதன.

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவருமாகிய கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

200 மில்லியன் ரூபாய்க்கான வேலைத்திட்டங்களில் முதற்கட்டமாக (நேற்று) 31 வீதிகள் 21.84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், 16 வடிகான்கள் 21.43 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், 3 விளையாட்டு மைதானங்கள் 2.5 மில்லியன் ரூபாயிலும், 1 சிறுவர் பூங்கா 0.5 மில்லியன் ரூபாயிலும் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

இவற்றுள் தெரிவுசெய்யப்பட்ட 17 வீதிகளுக்கும், 3 விளையாட்டு மைதானங்களுக்கும் அடிக்கல் நாட்டி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா அவர்கள் மேலும் 1 சிறுவர் பூங்காவிற்கான வேலைகளையும் ஆரம்பித்துவைத்தார்.

இதனைவிட கடந்த மாதம் ஒரு விளையாட்டு மைதானத்தை 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், ஒரு ஆலயத்திற்கான வேலைகளை ரூபாய் 0.5 மில்லியன் ஒதுக்கீட்டிலும் ஏற்கனவே ஆரம்பித்து வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் வட்டாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், முதல்வரின் வட்டார இணைப்பாளர்கள், யாழ் பிரதேச செயலர் திரு.சா.சுதர்சன் அவர்கள், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பிரதம பொறியியலாளர், மாநகர பொறியியலாளர்கள், மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அந்தந்தப் பிரிவுகளின் கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்சியின் வட்டார கிளை நிர்வாகிகள், கட்சி அங்கத்தவர்கள், குறித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

Share the Post

You May Also Like