ஓர் இனத்தின் உரிமைகளை இன்னோர் இனம் தடுக்க இயலாது! – கோடீஸ்வரன்

ஓர் இனம் உரிமைகளை பெற்றுக்கொள்வதில் மற்றைய இனம் அழுத்தத்தை கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமசேவையாளர் பிரிவுகளில்  கோடீஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்று வருகின்ற கம்பெரெலிய வேலைத்திட்டத்தினை மற்றும் வாழ்வாதார உதவிகள் குறித்து  தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஓர் இனத்தின் மீது மறு இனம் அழுத்தத்தினை கொடுத்து உரிமைகளை தடுக்கின்ற செயற்பாட்டில்  ஏனைய இனம் செயற்படுகின்ற விடையத்தை அங்கீகரிக்க முடியாது.

நாட்டிலே நடைபெற்ற பிரச்சினை கூட இன்னோர் இனத்திற்கான அங்கீகாரம், உரிமை கிடைக்கப்பெறாமல் தடுக்கப்படுகின்ற பொழுதுதான் நாட்டிலே பலதரப்பட்ட பிரச்சினைகள் எழத்தொடங்குகின்றன.
உண்மையாக கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது அல்லது செயற்பாட்டை தடுக்கின்ற விடயத்தில் தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பு பாரிய பங்காற்றியுள்ளது.

இந்த தேசிய தௌபீக் ஜமாத் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கூடாது. கல்முனை வாழ் தமிழ் மக்கள் உரிமைகளை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக மூன்று பக்க அறிக்கைகளை வாசித்து பிரகடனத்தை அறிவித்திருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் பல அரசியல்வாதிகள், பேரினவாத சக்திகளும் செயற்பட்டனர் என்பதை மறைக்க முடியாது. தேசிய தௌபீக் ஜமாத்திற்கு பின்னால் நின்ற நபர்கள் அரசியல்வாதிகள் குற்றவாளிகளாக அடயாளப்படுத்தப்பட்டு தகுந்த தண்டனை வழங்கவேண்டுமென்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுக்க  40 வருடங்களாகத் தமிழ் மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தவர்களாக இருக்கின்றனர்.  அதற்கான வரலாறுகளும் இருக்கின்றன. பல உரிமைப்போராட்டத்தை நடத்திய தமிழர்களுக்கு கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில் பின்னடைவை சந்தித்து வருகிறோம் . இதற்கு பின்னால் பல அரசியல்வாதிகளும் பேரினவாத சக்திகளும் செயற்படுவதை கண்கூடாக  காண்கின்றோம்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக எல்லைப்பிரச்சினை, சகோதர இனங்களாலே ஒடுக்கப்படுகின்ற அழுத்தங்கள், நில ஆக்கிரமிப்பு,கல்வி,விளையாட்டு, கலைகலாசாரம்,பொருளாதார ரீதியான புறக்கணிப்பு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்டு தான்  வருகின்றது.

கூடுதலான தமிழ் மக்கள் தங்கிவாழுகின்றவர்களாகத்தான் இருக்கிறார்கள்.  இந்நிலை மாற வேண்டும். சுய தொழிலை மேற்கொண்டு எமது பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்ற ஆளுமைமிக்கவர்களாக மாற வேண்டும்.
தமிழ் சமூகம் உயர்ந்த அந்தஸ்த்தை அடையவேண்டும் என்றால் கல்வி,பொருளாதாரம் வலுப்பெற வேண்டும்.எனவே பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்குட்பட் பகுதிகளில் நூறு (100)மில்லியன் ரூபாய்களுக்கு மேற்பட்ட அபிருத்தி திட்டங்கள் தனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெற்றுவருவதாக இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன் பின் ஆலையடி சித்தி விநாயகர் ஆலய 650 மீற்றர் தார் சாலைக்கு தனது 97  இலட்ச்சம் நிதி ஒதுக்கீட்டில்  மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் ,தொடர்மாடிக்கான கொங்கிறிட் வீதி திறந்துவைக்கப்பட்டது, பொது மைதானத்திற்கான புனர்நிர்மான பணி  போன்றன பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால்  பெரியநீலாவணைக்கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளுக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஜெ. அதிசயராஜ் அவர்களும், கல்முனை மாநகர சபையின்தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், பயனாளிகள் பொதுமக்கள்,விளைட்டு கழகங்கள், ஆலய நிருவாகத்தினரும் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like