விக்னேஸ்வரனின் சுயநல சிந்தனையே மாகாணசபை தோற்றமைக்குக் காரணம்!

  பல தனியார் முதலீடுகளுக்கூடாக பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்திருக்கலாம்;. இதற்கான திட்டங்களெதுவும் உருவாக்கப்படவில்லை.

 சிலர் ஆர்வமிகுதியால் மேற்கொள்ள இருந்த சில தொழில் முயற்சிகளை வேண்டுமென்றே புறக்கணித்தமை அல்லது காலங்கடத்துவதினூடாக அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியமை.

 போரால் பாதிக்கப்பட்டோர் விடயமாக எதுவித உதவித் திட்டங்களையும் செயற்படுத்த வழிதெரியாதிருந்தமை. அப்படி சில திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுத்த அமைச்சருக்கெதிராக வேண்டுமென்றே ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி சட்டமுரணாக பதவி நீக்கியமை.

 ஊழல் செய்த இன்னொரு அமைச்சருக்கு நற்சான்று வழங்கி தனது நேர்மையற்ற தன்மையைப் பறைசாற்றியமை.

 அரசால் பெரும் பொருட்செலவில் கொண்டுவரப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையத்தை இல்லாமல் செய்தமை. அதில் முரண்டுபிடித்தமையினூடாக சபை உறுப்பினர்களிடையே கன்னை பிரித்து மோதவிட்டமை.

 அரசமைப்பினூடாகப் பல அதிகாரங்களைப் பெறக்கூடியதான நியதிச்சட்டங்களை உருவாக்க வழியிருந்தும் அதில் போதிய கரிசனை காட்டாதிருந்தமை.

 நிர்வாகத் திறனுடைய நேர்மையான பல உயர் அதிகாரிகள் தனக்குச் சாதகமாக செயற்படவில்லை என்பதற்காக பழிவாங்கியமை.  அதனால் நிர்வாகங்களில் பல குழறுபடிகள் ஏற்படக் காரணமாயிருந்தமை.

 ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் வழங்கப்படவிருந்த பெருந்தொகை அபிவிருத்தி நிதியைக் கையாள தனக்கு நெருக்கமான ஒருவரை பெருந்தொகை சம்பளத்துக்கு நியமிக்க வேண்டுமென நிபந்தனை விதித்தமையினூடாக அந்தநிதி கிடைப்பதற்கு தடையாக இருந்தமை.

 

வடக்கு மாகாண சபையின் கடந்தகால வினைத்திறனற்ற செயற்பாடுகளுக்கான காரணங்கள், வலி.கிழக்கு பிரதேசத்தின் அபிவிருத்தி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மக்கள் மயப்பட்ட பாங்கு, எதிர்காலத் தேர்தலில் கூட்டமைப்பு எவ்வாறான செயற்பாடுகளை எடுக்கவேண்டும் என்பவை தொடர்பாக விவரமாகவும், மிகத் தெளிவாகவும் ‘புதிய சுதந்திரன்’ பத்திரிகைக்கு விசேட செவ்வி வழங்கியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி. அவர் வழங்கிய செவ்வி இங்கு முழுமையாகப் பிரசுரிக்கப்படுகின்றது.

கேள்வி: வடக்குமாகாண சபையின் மக்களாட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர்; உங்களது அரசியல் செயற்பாடு எவ்வாறு உள்ளது?
பதில்: உண்மையில் மக்களைச் சந்திப்பதற்கும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கு வதற்குமான ஒரு திறந்த களம் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றேன். அதன் மூலமாக மக்களுடன் நெருங்கிப்பழகுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி கட்சியின் செயற்பாடுகள் சம்பந்தமான விமர்சனங்களுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளித்து மக்களை விழிப்படைய வைக்கமுடிகிறது. இதைப்பயன்படுத்தி கட்சிக்காக மக்களை அணிதிரட்டி கட்சித் தீர்மானத்துக்கு அமைவாகக் கிராமந்தோறும் கட்சிக் கிளைகளை ஸ்தாபித்துள்ளோம். எமது வலி.கிழக்குப் பிரதேசத்தில் 31 கிராம
சேவகர் பிரிவுகளும் அவற்றை உள்ளடக்கி 22 வட்டாரங்களும் இருக்கின்றன. இதில் 21 கிராமியக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பிரதேச ரீதியான இளைஞர்களை உள்ளடக்கி வாலிப முன்னணியையும் மாதர்களை ஒன்று கூட்டி மாதர் முன்னணியையும் அமைததுள்ளோம். இந்தக் கிராமிய மற்றும் பிரதேசக் கிளைகளினூடாக அந்தந்த பிரதேசங்களில் செய்யவேண்டிய அபிவிருத்தி வேலைகளை இனங்கண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களினூடாக நிதிகளைப்பெற்று அவற்றை நிவர்த்தி செய்ய முயன்று வருகின்றோம்.

கேள்வி: கோப்பாய் தொகுதி அல்லது வலிகாமம் கிழக்குப் பிரதேசசபையின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன? மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதனுடைய செயற்பாடுகள் இருக்கின்றனவா?

பதில்: வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை என்பது வருமானம் குறைந்த பிரதேச சபையாக இனங்காணப ;பட்டுள்ளது. அத்துடன் 104 சதுர கிலோ மீற்றர்களை கொண்ட மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டது. தற்போதைய சனத்தொகையைப் பொறுத்தளவில் சுமார் 25000 குடும்பங்களை உள்ளடக்கிய 75000 பேர் இங்கே நிரந்தரமாக வசிக்கிறார்கள். தொகுதி ரீதியாகப் பார்த்தால் 56000 வாக்காளர் வரை பதிவுசெய்யப்பட்டுள்ளார்கள். ஆனால், இந்த தொகுதியில் 2015 தேர்தலுக்குப் பின் 2018 ஆம் ஆண்டுவரை எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களதும் கடைக்கண்பார்வை கூடப் பட்டதில்லை. இதற்கான காரணம் இந்த தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்த நாடாளுமன்றப் பிரதிநிதி இல்லாமையே. 2015 ஆம் ஆண்டின் பின்னர் தேர்தல்கள் தொகுதி வாரியாக நடைபெறும் எனக் கருதியதால் பலர் தாம் வாழும் பிரதேசங்களுக்கே கூடுதலான நிதி ஒதுக்கீடுகளைச் செய்து வந்தனர். இதனால் மிவும் பாதிக்கப்பட்டது வலிகாமம் கிழக்குப் பிரதேசசபையே. தற்போதைய நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத் தக்கது.

பிரதேச சபையைப் பொறுத்தவரை மொத்தமாகவுள்ள 38 உறுப்பினர்களில் 15 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சோர்ந்தவர்கள். வினைத் திறனான செயலாளர் இருக்கின்றார். பிரதேச சபைகள் முக்கியமாக மக்களின் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அடிமட்ட நிறுவனமாக இருக்கிறது. இந்தப் பிரதேச மக்களுக்கு கூடுதலாக குடிதண்ணீர் தேவையாக உள்ளது. அந்தத் தேவைகளை வழங்க சபையிடம் போதிய வாகன வசதிகள் இல்லை. அதைப் பெற்றுக் கொடுப்பதற்கு இதுவரை எவரும் முன்வரவில்லை. கழிவகற்றல் நிலையும் அவ்வாறே உண்டு. கட்டட அனுமதிகளும் மந்த கதியிலேயே வழங்கப்படுகின்றன. மாகாணசபையில் நடைபெற்றதைப் போல இங்கேயும் கூட்டங்களில் அரசியல் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிகிறது. இந்தச் சபையின் வருமான இழப்புக்கு இதுவரை ஆதன வரி பெறப்படாமையும் மிக முக்கியமான காரணமாகும். அதற்கான முயற்சியும் மந்தகதியிலேயே நடைபெறுகிறது. அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களின் தாமதங்களுக்குத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை நோக்கி கையை நீட்டுகிறார்கள். தற்போது இங்கே ஐந்து தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகிறார்கள். ஆனால், பல அபிவிருத்தி வேலைகள் மதிப்பீடுகள் செய்யப்படாமல் தாமதமடைகின்றன. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செய்ய அரசியல் அழுத்தம் தேவை. அது வழங்கப்படுமானால் வேலைகள் தங்குதடையின்றி நடக்க வாய்ப்புகளுண்டு. மக்களுக்கு அவர்களது எதிர்பார்ப்பை ஈடுசெய்ய உறுப்பினர்களதும் ஊழியர்களதும் அர்ப்பணிப்பான சேவையும் வளங்களும் தேவை. அது கிடைக்குமா?

கேள்வி: மாகாண சபையில் மக்களாட்சி இல்லாத நிலையில் மத்திய அரசாங்கத்தின செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன? தற்போது பல திட்டங்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் வலி.கிழக்குப் பிரதேசத்தில் எத்தகைய அபிவிருத்திகள் இடம்
பெறுகின்றன?

பதில்: 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று மக்கள் அளித்த ஆதரவால் ஓர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்ற ரணில் தலைமையிலான அரசுக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்புக் கொடுத்த ஆதரவால் எமக்கும் அபிவிருத்தியில் ஓரளவேனும் பங்குகொள்ளக்கூடிய நிலைமை கிடைத்தது. ஆனால், 2018 ஐப்பசியில் ஏற்பட்ட அரசியல் சூறாவளி அரசுக்கும் எமக்கும் ஒரு நெருக்கம் ஏற்படக் காரணமாயிற்று. ஆனால், இந்த சூறாவளியில் எமக்கான அரசியல் தீர்வுகள் அடிபட்டுப் போனமை வேறு விடயம். அதற்குப் பின்னர் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது.
நான் முன்னர் கூறியமைபோல விகிதாசாரத் தேர்தல்முறை மீண்டும் வரக்கூடிய சூழல் நிலவுகின்றபடியால் வலி.கிழக்குப் பிரதேசம் பலரை சுண்டியிழுக்கும் பழமரமாகக் காட்சியளிக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் ;கருவில் அமைந்த துரித கிராமிய அபிவிருத்தித் திட்டமானது (கம்பெரலியா) இலங்கையின் சகல தொகுதிகளுக்கும் வீதிகள், பாடசாலைகள், கோவில்கள், குளங்கள் எனப் பல வேலைத் திட்டங்களுக்காக 400மில்லியன் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றன. தமிழ் பிரதேசங்களில் அதை சிபார்சு செய்யும் கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது கிராமியத் திட்டங்கள் ஆனபடியால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சிபார்சுகளுக்கமைவாகத் திட்டங்களைச் செயற்படுத்துகின்றார்கள். ஆனால், எமது தொகுதியில் மட்டும் ஒரு கட்சி சார்ந்து பாரபட்சமாக இத்திட்டங்கள்; செயற்படுதத்தப்படுகின்றன. இவை பரவலாக்கப்படாமையால் மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். இருந்தாலும் திட்டங்கள் தொகுதிக்குள்ளேயே நடைபெறுவதால் மக்கள் ஆறுதலடை
கின்றார்கள்.

தற்போது தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா,ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரது பெரு முயற்சியால் சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான பல விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தத் தயார் நிலையிலுள்ளன. இன்னும் பல மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கோரப்பட்ட நிலையில் எதிர்பார்ப்பிலிருக்கின்றன. இந்த விசேட நிதிக்கான திட்டங்களிலே கிராமிய வீதிகள், கொங்கிறீற் வீதிகள், வீதி விளக்குகள், விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்கள், சன சமூகநிலையக் கட்டடங்கள், கிராம அபிவிருத்திச்சங்க கட்டடங்கள், கிராமியப் பாலங்கள் என்பன உள்ளடங்குகின்றன. ஆனாலும், இத்திட்டங்களுக்கான மதிப்பீடுகள் இன்னமும் செய்யப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது. ஆகவே மிக விரைவாக இந்தத் திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடைய பிரதேச சபை கூடிய கரிசனை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேள்வி: வடக்குமாகாணசபைத் தேர்தலொன்று இடம்பெறும்போது தமிழத் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பதில்: கடந்த காலங்களில் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளிடையே உறுப்பினர் தொகை பங்கிடப்பட்டதன் பின்னர் தான் பங்காளிக் கட்சிகள் உறுப்பினர் தெரிவில் ஈடுபடுவது வழக்கமானது. இந்த நிலையானது கடந்த உள்ளூராட்சித் தேர்தலிலே எமது வெற்றி இலக்கில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. பல திறமையான – துடிப்பாக செயற்படக்கூடிய – செல்வாக்கான – பலருக்கு வாய்ப்புக் கொடுக்கமுடியாது போனமையால் வாக்கு வங்கியில் பலத்த சரிவு ஏற்பட்டமையை நாம் அறிவோம். இதைப் படிப்பினையாகக்கொண்டு கட்சி ரீதியாகவன்றி உறுப்பினர்களின் தகுதியைக் கருத்தில் கொண்டு தெரிவுகள் இடம்பெறவேண்டும். இங்கே தகுதி என்பது அவர்களது ஒழுக்கம், கடந்தகால அரசியல் செயற்பாடுகள், தேக ஆரோக்கியம், செயற்படுவதில் இளமைத்துடிப்பு, செயலாற்றல், மக்கள் சேவையில் முன் அனுபவம், மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கு போன்ற விடயங்கள் ஆராயப்படவேண்டும். கடந்தகாலத்தில் பெரும்பாலும் இவை கடைப் பிடிக்கப்படாமையால் பல பிரச்சினைகளைக் கட்சி எதிர்கொண்டது. இன்றும் சில பிரதிநிதிகள் கட்சியைப்பற்றிய சிந்தனையில்லாமல் தங்களது அடுத்தகட்ட நகர்வு பற்றியே சிந்திக்கிறார்கள். இது கட்சி வளர்ச்சிக்கும் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் தடையாக இருக்கிறது. ஆனாலும், கூட்டமைப்பாகப் போட்டியிடும்போது இவற்றைச் செயற்படுத்துவது மிகவும் கஷ;டமாயிருக்கும். ஆகவே விகிதாசார அடிப்படையில் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டபின் அரசமைக்க கூட்டாக சேர்வது பொருத்தமாயிருக்கும் என எண்ணுகிறேன்.

கேள்வி: கடந்த வடக்குமாகாண சபையின்போது மக்களுக்கான பல விடயங்கள் செய்யப்படவில்லை என்பது பலரது குற்றச்சாட்டு. உங்களின் நிலைப்பாடு என்ன…?

பதில்: இலங்கையில் தமிழர்களுடைய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கமாக இலங்கை இந்திய ஒப்பந்தங்களூடாகக் கொண்டுவரப்பட்டது தான் மாகாணசபை முறைமை. ஆனால், தமிழர் தரப்பில் அப்போது எவரும் இதில் பங்காளியாக இருக்கவில்லை. அதனால், வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கட்சி தவிர்ந்த இந்திய அரசின் கையாளாகச் செயற்பட்டவர்கள் போட்டியிட்டு பதவிக்கு வந்தனர்;. வந்தசபையால் சுமார் 15 மாதங்கள் வரையுமே தமது காலத்தை ஓட்ட முடிந்தது. அதன் பின்னர் சுமார் 25 வருடங்களின் பின்னர் 2013 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்குத் தேர்தல் நடைபெற்று பெருவாரியான ஆதரவுடன் கூட்டமைப்பின் தலைமையில் மக்களாட்சி மலர்ந்தது. அரைகுறை அதிகாரங்கள் இருந்தாலும் இதற்குள் உள்ள எமக்குச் சாதகமாயுள்ள சந்து பொந்துகளைக் கண்டு பிடித்து, அவற்றினூடாகச் சரிந்து போன எமது பொருளாதாரத்தை நிமிர்த்தவேண்டியும் உயர்ந்தபட்சமாக அதிலுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தும் முகமாகவும் சட்டத்துறை வல்லுநர் ஒருவர் முதலமைச்சராகக் கொண்டுவரப்பட்டார்.

ஆனால் 5வருடங்கள் முழுமையாக பதவியிலருந்த சபையானது மக்களுக்கான பல சேவைகளை ஆற்றக்கூடிய சில அதிகாரங்களைக் கொண்டிருந்தும் அக்களது அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாது நிறைவுக்கு வந்தது. முக்கியமாக பல தனியார் முதலீடுகளுக்கூடாக பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்திருக்கலாம்;. இதற்கான திட்டங்களெதுவும் உருவாக்கப்படவில்லை. சிலர் ஆர்வமிகுதியால் மேற்கொள்ள இருந்த சில தொழில் முயற்சிகளை வேண்டுமென்றே புறக்கணித்தமை அல்லது காலங்கடத்துவதினூடாக அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியமை. போரால் பாதிக்கப்பட்டோர் விடயமாக எதுவித உதவித் திட்டங்களையும் செயற்படுத்த வழிதெரியாதிருந்தமை. அப்படி சில திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுத்த அமைச்சருக்கெதிராக வேண்டுமென்றே ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி சட்டமுரணாக பதவி நீக்கியமை. ஊழல் செய்த இன்னொரு அமைச்சருக்கு நற்சான்று வழங்கி தனது நேர்மையற்ற தன்மையைப் பறைசாற்றியமை. அரசால் பெரும் பொருட்செலவில் கொண்டுவரப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையத்தை இல்லாமல் செய்தமை. அதில் முரண்டுபிடித்தமையினூடாக சபை உறுப்பினர்களிடையே கன்னை பிரித்து மோதவிட்டமை. அரசமைப்பினூடாகப் பல அதிகாரங்களைப் பெறக்கூடியதான நியதிச்சட்டங்களை உருவாக்க வழியிருந்தும் அதில் போதிய கரிசனை காட்டாதிருந்தமை. நிர்வாகத் திறனுடைய நேர்மையான பல உயர் அதிகாரிகள் தனக்குச் சாதகமாக செயற்படவில்லை என்பதற்காக பழிவாங்கியமை. அதனால் நிர்வாகங்களில் பல குழறுபடிகள் ஏற்பட காரணமாயிருந்தமை. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் வழங்கப்படவிருந்த பெருந்தொகை அபிவிருத்தி நிதியைக் கையாள தனக்கு நெருக்கமான ஒருவரை பெருந்தொகை சம்பளத்துக்கு நியமிக்க வேண்டுமென நிபந்தனை விதித்தமையினூடாக அந்தநிதி கிடைப்பதற்கு தடையாக இருந்தமை. இப்படிப் பல விடயங்களில் தமது இயலாமையை மறைப்பதற்காக மத்திய அரசுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் முரண்பட்டு தனது நிறைவேற்ற முடியாத அரசியல் கருத்துகளை திணிப்பதனூடாக மக்கள் சேவைகளிலிருந்து விலகியிருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அப்படியிருந்த போதிலும் சலுகைகளினூடாக தனது நலன்களை பெறுவதில் குறியாயிருந்தார் அவர். எந்த முதலமைச்சருக்கும் இல்லாத கொழும்புக்கு உதவியாளருடன் போய்வர விமான சேவையை இவர் கோரிப் பெற்றுள்ளார். அத்துடன் மத்திய அமைச்சருக்கு இணையாக தனக்கும் வரியற்ற வாகனஇறக்குமதி அனுமதி பெற அரசுடன் பேரம் பேசிய போதும் பதவி இழந்தபடியால் அதைப்பெறமுடியாது போய் விட்டது. மேற்கூறப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரங்களுக்குட்பட்டவையாகும். இப்படியான பல விடயங்கள் உறுப்பினர்களால் சபைக்குக் கொண்டுவரப்பட்டு விவாதிக்கும்போது முதல்வா சபையில் இருக்கமாட்டார் அல்லது மௌனம் சாதிப்பார். மேற்கூறப்பட்ட மாகாணசபையால் சாதிக்கப்படக் கூடியவை தவிர மற்றைய அபிவிருத்திகள் செய்வதற்கு ஒரு சபை தேவையில்லை. அது சாதாரணமாக அதிகாரிகளினாலேயே செய்ய முடியும். இந்த நிலைமைகளினாலேயே வடக்கு மாகாண சபை மக்களது விருப்பத்துக்கமைவாக செயற்படமுடியாது நம்பிக்கையிழந்தது. அந்த வகையில் நான் என்றும் மக்கள் பக்கமே.

கேள்வி: அடுத்துவரும் தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சி எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்?

பதில்: இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பது மக்களது எதிர்கால அரசியல் தேவைகளை நிறைவேற்றக் கூடியதான கொள்கைகளை உள்ளடக்கி தந்தை செல்வா தலைமையில் உருவான பேரியக்கமாகும். தந்தை செல்வா ஒரு சிறந்த பேச்சாளனாக இல்லாத போதும் அவரது திடமான கொள்கைகளும் அவற்றை நிறைவேற்றுவதில் அவர் கொண்ட பற்றுறுதியும் அதைச் செயற்படுத்துவதில் அவர் தெரிந்தெடுத்த வழிமுறைகளும் அவரை மக்கள் தமது ஆபத்பாந்தவனாகக் கருதிச் செயற்பட வைத்தது. அதனால் அவரது கொள்கைகள் அழியாவரம் பெற்றவையாகத் திகழ்கின்றன. தமிழரசை மக்கள் ஒரு போராட்ட இயக்கமாகவே கருதினர். அதனால் ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்கள் அந்தச் சின்னத்துக்காக அமோகமாக வாக்களித்து வெற்றிக்கனி தந்தனர்.

ஆனால், அண்மைய காலங்களில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொள்கைகளுக்காகவன்றி தமது வெற்றியை மட்டும் கருதி செயற்படுகின்றமை போல் தெரிகின்றது. இதற்காகவே பலர் அவர்களது கடந்தகால அரசியல் செயற்பாடுகளைக் கருதாது வெற்றியை மட்டும் கருதி உள்வாங்கப் படுகின்றனர். இதனால் தந்தையின் கொள்கைகள் காலப்போக்கில் சிதைவடைந்து செல்லக்கூடிய அபாயத்தை தமிழரசுக்கட்சி எதிர்நோக்குகிறது. தற்போதைய சூழ் நிலையில் இனி எப்போதும் சமாதானமாக உள்நாட்டில் எமது அரசியல் உரிமைகளைப் பெறமுடியாது. ஆகவே, இனி நடப்பது பெரும்பாலும் விகிதாசாரத் தேர்தல் முறையாகக் கருதுவதால் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் மட்டுமல்ல சகல கட்சிகளும் தனித்தனியாக தமது கொள்கைகளின் அடிப்படையில் தேர்தல்களில் போட்டியிடலாம். தேர்தலின் பின்னர் ஒத்த கொள்கைகளின் அடிப்படையில் கூட்டாகச் சேர்வதனூடாக எமது அரசியல் உரிமைகளுக்காகப் போராடலாம். அந்த வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்து தேர்தல்கனை எதிர்கொள்வதே அதன் நலன்களுக்கு நன்மை பயக்கும் என எண்ணுகின்றேன். இதன் மூலம் தமிழரசுக்கட்சியிலுள்ள பல சிறந்த உறுப்பினர்களைக் களமிறக்கி எமது வெற்றியை உறுதிப்படுத்தலாம். இது தேசியப்பட்டியல் மூலமான உறுப்பினர் தெரிவில் பாதகத்தை ஏற்படுத்தினாலும் ஒத்த கருத்துள்ள உறுப்பினர் தெரிவில் அதிகரிப்பை ஏற்படுத்தும் எனக் கருதுகின்றேன்.

– செவ்வி கண்டவர்: எம்.தாஸ் –

Share the Post

You May Also Like