அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணைக்கு தமிழ் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் – ஜே.வி.பி தகவல்

அரசாங்கத்துக்கு எதிராக தம்மால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிக்கும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும், இந்தப் பிரேரணைக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “நாம் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவந்துள்ளோம். இந்த பிரேரணை தொடர்பான விவாதம் அடுத்த மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 11 ஆம் திகதி மாலை 6 மணிக்கு இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

260 உயிர்கள் கொல்லப்பட்டும் 600 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த குண்டுத் தாக்குதலுக்கு காரணமான இந்த அரசாங்கம் விலக வேண்டும்.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்காத, ஐக்கியத்தை ஏற்படுத்தமுடியாத ஒரு அரசாங்கம் இந்த நாட்டை ஆட்சி செய்ய வேண்டிய தேவையில்லை. இதற்காகவே நாம் பிரேரணையை கொண்டு வந்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைவரும் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று கருத்து வெளியிட்டார்கள்.

அதேபோல், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட வேண்டும் என்றே நாம் எதிர்ப்பார்க்கிறோம். கடந்த காலங்களில் பல்வேறு தடவைகள், அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கியிருந்தாலும், இந்த முக்கியமான தருணத்தின்போது அவர்கள் நடுநிலையாக செயற்படுவார்கள் என்றே நாம் கருதுகிறோம்.

இதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ரிஷாட் பதியுதீன் மட்டுமன்றி ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவியிலிருந்து வெளியேற வேண்டும்” என்று தெரிவித்தார்.

Share the Post

You May Also Like