இராணுவத்தின் வசமிருந்த பாடசாலை காணிகள் கோடீஸ்வரனின் முயற்சியால் விடுவிப்பு

வி.சுகிர்தகுமார்

வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமிருந்த பாடாசாலை காணிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் முயற்சியால் பல பாடசாலை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திருக்கோவில் விஸ்வதுளசி வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியும் கட்டடங்களும் இன்று(10) பாடசாலை சமூகத்திடம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டதுடன் குறித்த காணியில் அமைந்துள்ள சகலகலையம்மன் முன்பள்ளியும் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் அ.கலாநேசன் தலைமையில் இடம்பெற்ற பாடசாலை காணிகள் கையளிக்கும் நிகழ்விலும் முன்பள்ளியினை திறந்து வைக்கும் நிகழ்விலும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் பிரதேச சபை உறுப்பினர் எஸ்..சதீஸ்குமார் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.கலைவாணி திருக்கோவில் சிவில் பாதுகாப்பு குழ தலைவர் பி.புனிதராஜ் இராணுவ உயர் அதிகாரிகள் பொலிசார் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் … கடந்த காலத்தில் .குறித்த பாடசாலையின் கட்டடத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு படையினர் நிலை கொண்டிருந்தனர். ஆனர்லும் ஜனாதிபதியிடம் நாங்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மாணவர்களின் கல்வி வளர்ச்சி கருதி இன்று இப்பாடசாலை கட்டடம் விடுவிக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் நான் ஜனாதிபதிக்கும் நன்றி சொல்லும் அதேநேரம் இராணுவத்தினருக்கும் நன்றி சொல்ல விரும்புகின்றேன்.

கடந்த காலத்தில் குறித்த இடத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தமிழ் மக்களின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் மாணவர்களின் உண்மையான கல்வித்தேவைப்பாட்டை உணர்ந்த அவர்கள் இந்த இடத்தில் இருந்து வெளியேறி பிறிதொரு இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்களது இப் பெருந்தன்மையை நாங்கள் பாரட்டுகின்றோம்.

இதே நேரம் குறித்த பாடசாலையின் கட்டங்களையும் பாடசாலை மைதானத்தினையும் புனரமைப்பதற்காக புனரமைப்பு அமைச்சினால் 4 மில்லியன் வரை நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share the Post

You May Also Like