மன்னார் சமுர்த்திப் பயனாளிகளில் புத்தளத்தை சேர்ந்தவர்களும் இணைப்பு! குற்றஞ்சாட்டுகிறார் சார்ள்ஸ்

மன்னார் சமுர்த்தி பயனாளிகளில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் புதிய சமுர்த்தி பயனாளிகளிற்கான உரித்து படிவம் வழங்கும் நிகழ்வு மன்னார் நகரசபை மைதானத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலர் பிரிவுகளையும் சேர்ந்த 10,113 பேருக்கு உரித்து படிவங்கள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த மூதாட்டியொருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட தனக்கு சமுர்த்தி உரித்து வழங்கவில்லையென்றும், ஆனால் புத்தளத்தை சேர்ந்த 120 பேரின் பெயர்கள் சமுர்த்தி உதவிபெறுபவர்களாக காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வறுமைக் கோட்டிற்குட்பட்ட எந்த சமூகத்தினருகாவது சமுர்த்தி உதவியை வழங்குங்கள். ஆனால் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களை இங்கு சமுர்த்தி பயனாளிகளாக இணைக்க வேண்டாம்.

வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் இங்கு பயனாளிகளாக இணைக்கப்பட்டார்களா என்பதை ரிசாட் பதியுதீன் தெளிவுபடுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like