சிங்கள, பெளத்த மேலாண்மையின் பெறுபேறுதான் இங்கு தீவிரவாதம்!

பெளத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய பெளத்த பிக்கு ஒருவர் சாகும் வரையில் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு போராட்டத்தை ஆரம்பித்து விட்டாலோ -அல்லது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமிழைத்து ஆறு ஆண்டு கால சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலையில், ஜனாதிபதியின் விசேட கருணையில் வெளியே வந்த ஒரு பிக்கு அரசியல் அட்டகாசம் மேற்கொண்டாலோ – அதற்காக இந்த நாட்டின் சிறுபான்மை இனத்து அரசியல் தலைவர்கள் தங்களது அமைச்சர் பதவிகளைத் துறந்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிலைமை நாட்டில் நிலவுகின்றது.

இது ஒரு பேராபத்தான சூழல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
துரதிஷ்டவசமாக இந்த நாடு ஒரு சில சிங்கள, பெளத்த பேரினவாதிகளினால் இயக்கப்படுகின்றமையையும், அத்த கைய சக்திகளுக்கு எதிராக சிங்களத் தலைவர்கள் செயற்படாமல் இருக்கின்றமையும் மிகவும் வருந்தத்தக்க விடயம் என ஐ.நா. உயர்மட்டத்துக்கும் சுட்டிக்காட்டியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்றுக் குழுவின் நிறைவேற்று அதிகாரியுமான மிலேல் கோனின்சஸை நேற்று முன்தினம் கொழும்பில் சந்தித்துப் பேசியபோதே இந்த விடயத்தை அவர் விளக்கியிருக்கின்றார்.

முப்பது ஆண்டு கால கோர யுத்தத்தின் முடிவில், நின்று, நிலைத்து, நீடிக்கக் கூடிய – நீதியான – கெளரவமான – நல்லிணக்கத் தீர்வு ஒன்றை இந்த இலங்கைத் தீவு எட்டுவதற்கான ஓர் அபூர்வ வாய்ப்பு – அரிய சந்தர்ப்பம் கிட்டியிருக்கின்றது.

வழக்கம் போல இதுவரை அடங்கியிருந்த பெளத்த, சிங்கள மேலாதிக்கச் சிந்தனைப் போக்கு திடீரெனக் கிளர்ந்தெழுந்து அந்த அரிய சந்தர்ப்பத்தை அழித்தொழித்து நிர்மூலமாக்குவதன் மூலம் இந்தத் தீவின் எதிர்காலத்தையும் நாசமாக்குவதற்கு இடமளித்துப் பாபார்த்திருக்கின்றது நாட்டின் ஆட்சிப் பீடம். தங்களுடைய எதிர்கால அரசியல் வாழ்வு மற்றும் நலன் பற்றி மட்டுமே சிந்திக்கும் தலைவர்களின் கைகளில்தான் இந்த நாட்டின் ஆட்சிப் பீடம் தொடர்ந்து சிக்குண்டு வந்திருக்கின்றது.

தீர்க்கமான அரசியல் பார்வையோ, தூரதிருஷ்டியோ, தலை மைத்துவத் தைரியமோ, இல்லாத இந்தத் தலைவர்கள், தொடர்ந்து கிடைத்து வரும் வாய்ப்புகளைத் தமது சுயநல அரசியலுக்காகக் கோட்டை விடும் அவலம்தான் எமது நாட்டைப் பீடித்திருக்கும் பெரும் துரதிஷ்டம்.

அதிகாரத்தை – ஆட்சியை – கைப்பற்றுவதற்கான ஒரு முக்கிய மார்க்கமாக பேரினவாதத்தை சிங்கள, பெளத்த மேலாதிக்கத் திமிரை – பிரயோகிக்கும் பரவணி அரசியல் பழக்கம் தென்னிலங்கையை நிரந்தரமாகப் பீடித்து நிற்கின்றது. அந்தப் போக்குத் தொடருமானால் இந்த நாடு நிரந்தரமாக அவலத்துக்குள் மூழ்கிப் போவது தவிர்க்க முடியாததாகும்.

ஐ.நா. அதிகாரிக்கு சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கின்றமை போன்று “” தமிழ் மக்கள் தமது நியாயமான உரிமைகளுக்காக அகிம்சைப் போராடங்களை நடத்தியபோது 1950கள், 1960 கள், 1970களில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. இவை புலிகள் இயக்கம் தோற்றம் பெறுவதற்கு முன்னர் இடம்பெற்றவை.” என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

பின்னர் இந்த நாடு பேரழிவாகக் கண்ட கொடூர இன யுத்தத்துக்கான வரலாற்றுப் பிறப்பாக்கத்துக்கு இந்த சிங்கள, பெளத்த பேரினவாதமே முழுக் காரணம் என்பதும் வெள்ளிடைமலை. தமிழர்கள் மத்தியில் பிரபாகரன் என்ற விடுதலை வீரரின் உருவாக்கத்துக்குப் பிரதான காரணமாக அமைந்தது இந்தப் பேரினவாத மேலாதிக்கக் கொடூரம்தான்.

“”வடக்கில் ஒரு பிரபாகரனினால் பட்டது போதும். இன்னொருமுஸ்லிம் பிரபாகரன் வேண்டவே வேண்டாம்” என்று கூறும் ஜனாதிபதி மைத்திரிபால உண்மையில் அந்த விருப்பத்தில்தான் இருப்பராயின் தமிழ் பிரபாகரன்களும், முஸ்லிம் பிரபாகரன்களும் மீள உருவாகாமல் இருப்பது தமது கையில்தான் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பெளத்த, சிங்களப் பேரினவாதமே, தமிழ்ப் பிரபாகரன்களையும், முஸ்லிம் பிரபாகரன்களையும் உருவாக்கக் காரணம் என்பதையும் அவர் உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஆபத்தான – உணர்ச்சிபூர்வமான – இஸ்லாமிய தீவிர வாதத்தை நாடு எதிர்கொண்டு பேரிழப்புக்களைச் சந்தித்து நிற்கின்றது. இச்சமயத்தில் அத்தகைய மதத் தீவிரவாதப் போக்குடையோரை மிகக் கவனமாகக் கையாளவேண்டும். மேலும் மேலும் பேரினவாத இனமேலாண்மையை, சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீதும் காட்டுவது இஸ்லாமியத் தீவிரவாதத்தை இங்கு வெற்றிலை வைத்து அழைக்கும் செயலாகும்.

பெளத்த, சிங்களப் பேரினவாத சக்திகளுக்குப் பயந்து அவற்றுக்கு இடமளித்து நிற்பது இஸ்லாமிய திவிரவாதத்தை வரவேற்கும் முட்டாள்தனமான செயல் என்பதை அரசு புரியாதவரை திருந்த இடமில்லை என்பதே உண்மை. (நன்றி – காலைக்கதிர் ஆசிரிய தலையங்கம் – யூன் 11, 2019)

 

Share the Post

You May Also Like