வடக்கு – கிழக்கு தன்னாட்சி அமையுமாயின் ஏனைய பகுதிகள் சிங்கள தேசமாக மாறலாம்!

ஆட்சேபனை இல்லையென்கிறார் சி.வி.கே

வடக்குக் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் ஒரு தனியான தன்னாட்சி நிர்வாக அலகு அமையுமாயின் அவை தவிர்ந்த ஏனைய பகுதிகளை சிங்கள தேசமாக மாற்றுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லையென வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அத்தோடு, தமிழர்கள் தன்னாட்சி அமைப்பதற்கான கோரிக்கையை ஞானசார தேரர் முன்னெடுப்பாரானால், இந்த விடயத்தில் எந்தவித எதிர்ப்பையும் தாம் வெளியிட மாட்டோமென்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் கடந்த 7 ஆம் திகதி  இடம்பெற்ற பௌத்த மாநாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், ”சிங்கள ஆட்சி அமைப்போம் தமிழர்கள் கோபிக்க வேண்டாமெ”னக் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஞானசாரரின் கருத்தை மறுதலிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. எம்மைப் பொறுத்தவரையில் எமது அரசியல் நீண்டகாலமாக வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தொடர்பாகவே இருந்திருக்கின்றது.

தெற்கை சிங்கள தேசம் என்றுதான் பேசியிருக்கின்றோம். தெற்கு சிங்கள தேசமாக இருப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அவரே எமக்கு இப்போது ஓர் உதவியைச் செய்யலாம். ஒரு சமாதான சூழ்நிலையை உருவாக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

”இலங்கையில் தமிழ் மக்களுக்கு தனி ஆட்சியை ஏற்படுத்தி, அது எமது தமிழ் மக்களின் பிரதேசமாக இருந்துகொண்டு ஏனைய பிரதேசங்களில் சிங்களவர்களாக இருப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like