கூட்டமைப்பை வலுப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

எடுத்ததற்கு எல்லாம் விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி தங்களை முழுத் தமிழ்த் தேசியவாதிகளாக வெளிப்படுத்தி  தாங்கள் மட்டுமே தமிழ்த்தேசியம் பற்றி சிந்திப்பவர்கள் கவலைப்படுபவர்கள் என்று காட்டிக் கொண்டு – அரசியல் செய்யும் சில பிரகிருதிகள் புலிகளின் பெயரால் தமிழினத்தை நடுவீதிக்குக் கொண்டு வந்து விடுவார்களோ என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது.


ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளைப் புரிந்து கொண்டு யதார்த்தப் புறநிலைகளை உணர்ந்து , அதற்கேற்ப அரசியல் காய்களை நகர்த்துபவனே தனது மக்களை வழிநடத்துவதற்குத் தகுதியான அரசியல்  தலைவனாக முடியும்.

கள யதார்த்தைப் புரிந்து கொள்ளாமல், கொள்கைப் பற்று பற்றிய கற்பனைப் புறவுலகில் கனவு கண்டபடி , அரசியல் சித்தாந்தம் பேசுவது அபத்தமானது அர்த்த மற்றது . தமிழ்த் தேசத்தின் மீதான குரூர ஒடுக்குமுறையின் ஆபத்துக்களையும் அதன் தீவிரத்தையும் புரிந்து கொண்டு . அத்தகைய அழிவுசக்திகளுக்கு நம் தமிழர் மந்தியில் இருந்தே துணை போகும் தரப்புக்களை       முறியடிப்பதற்கு தமிழர் மத்தியில் உள்ள நேசத் தரப்புகளை ஒன்றுபடுத்தி , ஐக்கியப்பட்டு , மேலெழுவதே இன்றைய அவசர- அவசிய – கட்டாய – நிலைமை என்பதை இத் தரப்புகள் வேண்டுமென்றே உணர மறுத்து , அரசியல் நடிப்பு மேற்கொள்கின்றமை நகைப்புக்குரியது.

களயதார்த்தத்தைப் புரிந்து கொண்டமையால்தான் காலங்காலமாக பரம அரசியல் எதிரிகளாக இருந்த தந்தை செல்வாவும் , ஐ .ஜி.பொன்னம்பலமும் வேறுபாடுகளை மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாய் ஒன்றிணைந்தனர் . விடுதலைக்கான இராணுவப் போராட்டத்தில் துரோகிகளாக அடையாளம் கண்டவர்களைக்கூட தமிழ்த் தேசியக் கூட்மைப்பு என்ற அரசியல் நேச சக்திகளாக விடுத்லைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரவணைத்தமை மட்டுமல்லாமல் , அதன் மூலம் சம்பந்தப்பட்டோருக்கு தமிழர்கள் மத்தியிலே நிரந்தர அரசியல் அந்தஸ்தையும் அவர் பெற்றுக்கொடுத்தமையும்
அதற்காகத்தான்.

“ஐக்கியம் முக்கியமான” சமயத்தில் பிளவுகளுக்கும் , பிரிவுகளுக்கும் , வேறுபாடுகளுக்கும் காரணம் தேடுவதும் , விளக்கங்களை முன்வைப்பதும் அரசியல்
அற்பத்தனமும் பொறுப்பற்ற போக்குமாம் . இதனையே
ஈ.பி.ஆர்.எல்.எவ் . தலைவர் சுரேஷ்பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார் . “முரண்பாடுகளைக் கருதி கொள்ளாது , காலத்தின் தேவைக்கேற்ப , கூட்டு அணியின் அவசியம் கருதி , புலிகள்கூட்டமைப்பை உருவாக்கியமைபோலவும் , அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தந்தை செல்வநாயகம் , ஐ . ஜி . பொன்னம்பலம் இணைந்து கூட்டணியை உரு வாக்கியது போலவும் இன்றைய சூழலில் கூட்டு இன்று தேவைப்படுகின்றது.இந்தப் பாடங்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிபுரிந்து கொள்ளவேண்டும்” .என்று சுரேஷ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார் .
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான – எதிரான – ஒரு தமிழர் தலைமை தேவை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகின்றமை உண்மையானால் – தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலனைப் புறந்தள்ளி குறுகிய கட்சி நலன்களை முதன்மைப்படுத்தும் போக்கிலிருந்து அது வெளியே வரவேண்டும் அப்படி வெளியே வந்தால்தான் தமிழ்த்தேசியக் கூட் டமைப்புக்கு மாற்றான பரந்த – விசாலமான – தமிழ்க் கூட்டுத் தலைமை ஒன்று சாத்தியமாகும் .

அதைவிடுத்து,ஏட்டுச் சுரக்காய் போன்று நடை முறைக்குச் சாத்தியமில்லாத கொள்கைப் பற்றுக் குறித்துப் பீற்றித் திரிவதும் தங்களை மட்டுமே 24 கரட் தங்கம்போலவும்,ஏனைய தரப்புகள் எல்லாம் கலப்பு உலோகங்கள் எனவும் கருதி , அரசியல் கனவுலகில் தத்துவம் பேசிக் கொண்டிருப்பதும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு வலுவான சக்தியாக உருவாக இடமளிக்கமாட்டாது என்பது மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  தனித்து ஏகோபித்த சக்தியாக வளர்த்தும் விடும் . இது புரியாமல் கற்பனாவாதத்தில்  திகழ்வது அரசியல் திப்பிலித்தனம்தான்.

Share the Post

You May Also Like