புதிய அரசமைப்பு வராவிடின் நாடு பேரழிவையே சந்திக்கும் – நாடாளுமன்றில் சுமந்திரன் கடும் எச்சரிக்கை

“தமிழர் பிரதேசத்தில் அபிவிருத்திகளைச் செய்வது அவர்களின் அரசியல் அதிகாரத்துக்குப் பதிலாகாது. புதிய அரசமைப்புத் திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்தாது விட்டால் நாடு முன்னொருபோதும் கண்டிராத பெரிய அழிவை எதிர்கொள்ள நேரிடும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“13ஆவது திருத்தத்துக்கு மேலாக 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது அந்த விடயத்தில் 180 பாகை முரணாக திரும்பிவிட்டார். புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் அவர் வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டு தற்போது அவர் தனது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து முற்றாக மாறி விட்டார் என்பதை அவர் இன்று (நேற்று) நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை உறுதிப்படுத்துகின்றது.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தேசிய பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசமைப்பு போன்றவை தொடர்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் நாம் இது தொடர்பில் தொடர் பேச்சுக்களை அவருடன் மேற்கொண்டோம். நாம் பல பேச்சுக்களில் கலந்து கொண்டோம். எனினும், அது தொடர்பில் ஆராய நீண்ட கலந்துரையாடல் தேவை, கால அவகாசம் தேவை அதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் எனப் பல காரணங்கள் கூறப்பட்டு அப்போது அந்த விடயம் தட்டிக்கழிக்கப்பட்டது. 13 பிளஸ் தருவேன் என்றவர்கள், மாகாண பொலிஸ் அதிகாரம் பற்றிய விடயத்தை பூதாகாரமாக்கினர்.

தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அரசின் இறுதிக் காலத்தில் நாம் புதிய அரசமைப்புத் தொடர்பான விவாதத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதாகவும் அதில் பிரயோசனம் இல்லை என்றும் கூறுகின்றார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் நாம் பல யோசனைகளை முன்வைத்தோம். பல கட்டப் பேச்சுக்கள் நடைபெற்றன. அதில் முன்னேற்றம் எதுவும் காணப்படாததால் பேச்சுக்களைக் கைவிட்டோம்.

பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் ஐந்து ஆவணங்களை அடிப்படையாக வைத்து பேச்சுக்கள் நடத்தப்பட்டன. மங்கள முனசிங்க அறிக்கை, சந்திரிகா பண்டாரநாயக்க கால அறிக்கை, அரசியல் சட்டவரைவு 2000 மற்றும் அனைத்துக் கட்சி அறிக்கை என்ற அடிப்படையில் ஆராயப்பட்டன. அதன் பின்னர் டிசம்பரில் மீண்டும் பேச்சு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. மூன்று தினங்கள் அந்தப் பேச்சு நடைபெற இருந்த நிலையில் அந்த மூன்று தினங்களும் நாம் கலந்துகொண்டோம். எனினும், அந்த மூன்று தினங்களிலும் அரச தூதுக்குழு இதில் கலந்துகொள்ளவில்லை.

நிலைமை இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதியான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச சபையில் குறிப்பிடும்போது நாமே அந்த பேச்சுக்களில் பங்கேற்காது இடையில் விலகியதாகக் கூறுகின்றார்.

உண்மையில் நாம் இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். எமது எதிர்பார்ப்புகளை வீணடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே தற்போது நாம் தவறிழைத்ததாக எம் மீது குற்றம் சாட்டுகின்றார்.

தற்போதைய அரசின் ஆட்சிக் காலம் இன்னும் ஒரு வருடமாக உள்ள நிலையில் அரசுக்கு முழுமையான ஆதரவை நாம் வழங்குவோம். புதிய அரசமைப்பு செயற்பாடுகளை வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாம் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

புதிய அரசமைப்பு தொடர்பில் வாத விவாதங்களுடன் பல்வேறு பேச்சுக்கள் நடத்தப்பட்டன. பெரும்பாலான விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளன. சிறு விடயங்களிலேயே இணக்கப்பாடுகள் காணப்பட வேண்டியுள்ளன. குறிப்பாக அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் நிலைப்பாடும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிப்பு போன்ற விடயங்களிலேயே இணக்கப்பாடு காணப்படாதுள்ளது.

எமது மக்களுக்கான அதிகாரத்தை அவர்கள் கைகளில் வழங்குமாறு நாம் கேட்கின்றோம். அவ்வாறு இல்லை அனைத்து அதிகாரங்களும் எமது கையில்தான் இருக்க வேண்டும் என்று ஒருபோதும் பெரும்பான்மை மக்கள் கேட்கமாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன்.

இந்த நாட்டில் நாம் சிறுபான்மை அல்ல. நாம் எண்ணிக்கையில் குறைந்தவர்களே. நாம் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும். எமக்கான அரசியல் உரிமை வேண்டும். எமது மக்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

புதிய அரசமைப்புத் திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்தாது விட்டால் நாடு முன்னொருபோதும் கண்டிராத அழிவை எதிர்கொள்ள நேரிடும். புதிய அரசமைப்பின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே, புதிய அரசமைப்புத் திருத்தத்துக்கு அரசு மதிப்பளித்து விரைவாக அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.

Share the Post

You May Also Like