விக்னேஸ்வரனின் தடுமாற்றம்?

-கபில்

‘முழுமையான அரச எதிர்ப்பு அரசியலே எம்முன்னே இருக்கும் ஒரே வழி.” என்று வடக்கின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான, சி.வி.விக்னேஸ்வரன் கடந்தவாரம் வெளியிட்டிருந்த கருத்து பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது.

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்து விட்டு அங்கு பௌத்த விகாரை அமைக்கும் முயற்சிகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது. கலாசார ரீதியாக தமிழினத்தைப் அழிப்பதற்கான ஒரு முயற்சியாக, ஒரு கலாசார இனப்படுகொலையாக வெளிப்படுத்திய அந்த அறிக்கையில் தான் அவர், இப்போது முழுமையான அரச எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதே இருக்கின்ற ஒரே வழி எனக் கூறியிருந்தார்.

“அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், எமது இனத்தின் எதிர்கால இருப்பு ஆபத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து, தமக்கிடையிலான காழ்ப்புணர்வுகளை, அரசியல் போட்டிகளை மறந்து, ஒன்றுபட்டு முழுமையான அரச எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க ஆயத்தமாக வேண்டும்’ என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர் வரை, கொள்கைசார் அரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்த சி.வி.விக்னேஸ்வரன் திடீரென, அரச எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்திருக்கிறார். அது தான் ஆச்சரியமானது.

அவரது இந்த அறிக்கை வெளியாக சில நாட்களுக்கு முன்னர் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து – மாற்று அணி ஒன்றை உருவாக்கும் பேச்சுக்களுக்கான ஏற்பாடுகள் முறிந்து போயிருந்தன.

அந்தப் பேச்சு ஏற்பாடுகள் முறிந்து போனதற்கு விக்னேஸ்வரனின் நிபந்தனையே காரணம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

ஈபிஆர்எல்எவ்வையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விதித்த நிபந்தனை தான் பேச்சுக்கான முயற்சிகள் முளையிலேயே கருகிப் போவதற்குக் காரணம் என்றும் அவர் விளக்கியிருந்தார்.

இந்தப் பின்னணியில் தான், விக்னேஸ்வரன் இப்போது, முழுமையான அரச எதிர்ப்பு அரசியலைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்.

விக்னேஸ்வரன், ஆரம்பத்தில், அரச எதிர்ப்பு அரசியல் மனோநிலையுடன் அரசியலுக்குள் வந்தவரில்லை.

அதனால் தான், கடுமையான எதிர்ப்புகள் விமர்சனங்களுக்கு மத்தியிலும், 2013ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் வடக்கின் முதலமைச்சராக பதவியேற்றிருந்தார்.

அவ்வாறான பதவியேற்பின் மூலம் அவர், அரசுடன் இணைந்து செயற்படுவதற்கான சமிக்ஞைகளை காண்பித்திருந்தார். எனினும், அவரது அந்த நல்லெண்ணத்துக்கு சரியான பிரதிபலிப்பு தெற்கில் இருந்து வரவில்லை.

வடக்கின் ஆளுநராக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறியைப் பயன்படுத்தி, விக்னேஸ்வரனுக்கு தொல்லை கொடுக்கின்ற வேலையையே மகிந்த ராஜபக்சஅரசாங்கம் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஓரளவுக்கு விக்னேஸ்வரன், ரணில்- மைத்திரி கூட்டுடன் இணங்கிச் செயற்பட்டாராயினும், பிற்காலத்தில் அவர் மத்தியுடன் முரண்படும் அரசியலையே முன்னெடுக்க விரும்பினார்.

அவர் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரச எதிர்ப்பு அரசியலை தீவிரமாக முன்னெடுக்காமல், ஓரளவுக்கு இணக்க அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்த போது, அதில் தனது தனித்தன்மையை நிலைநாட்ட, அரச எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்திருந்தார்.

அவர் முன்னெடுத்த அரச எதிர்ப்பு அரசியல் தான் அவரை புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினரிடம் அவரை ஹீரோ நிலைக்கு உயர்த்தியது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட, அவரை வைத்து கூட்டமைப்பை தோற்கடிக்க எத்தனித்தமைக்கும் அவரது அரச எதிர்ப்பு அரசியல் தான் காரணம்.

எனினும், தீவிரமான அரச எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன், அரச எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் விக்னேஸ்வரனால் இன்று வரை இணைய முடியவில்லை.

இதற்குப் பிரதான தடையாக .இருப்பது, அரச எதிர்ப்பு அரசியல் என்ற புள்ளி அல்ல. கொள்கை சார் அரசியல் என்ற விடயம் தான் இரண்டு தரப்புகளையும் பிரித்து வைத்திருக்கிறது,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொள்கைசார் அரசியலை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

ஈபிஆர்எல்எவ்வை தமது கூட்டில் உள்வாங்குவதில்லை என்ற தெளிவானதும் உறுதியானதுமான நிலைப்பாட்டில் இருக்கிறது,

அதன் உறுதியான நிலைப்பாட்டை அசைப்பதற்கு அரச எதிர்ப்பு அரசியல் மாத்திரம், விக்னேஸ்வரனுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இதுதான் இப்போதுள்ள சிக்கல்.

விக்னேஸ்வரன் கொள்கை அரசியல் பற்றியே அதிகம் பேசி வந்தார். ஒத்த கொள்கையுடைய தரப்புகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற கருத்தை அவர் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனாலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவரது கொள்கை அரசியலுடன் முரண்பட்டு நிற்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் விக்னேஸ்வரன் ஒத்த கொள்கையுடைய தரப்புகள் என்பதற்கு பதிலாக, அரச எதிர்ப்பு அரசியல் என்ற புதிய கூட்டை உருவாக்க எத்தனிக்கிறார் போலத் தெரிகிறது,

அதாவது, கன்னியா தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர், ஒத்த கொள்கையுடைய தரப்புகளை சேர்த்துக் கொள்வது பற்றிப் பேசவில்லை. அவர், அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அரச எதிர்ப்பு அரசியலுக்குள் வர வேண்டும் என்றே அழைத்துள்ளார்.

முன்னதாக விக்னேஸ்வரன், ஈபிடிபி தவிர்ந்த வேறெந்த கட்சியையும் தன்னுடன் கூட்டுச் சேர முடியும் என்று அறிவித்திருந்தார்.

இப்போது அவர் அனைத்து தமிழ் கட்சிகளையும் தீவிர அரச எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க ஒன்றுபடுமாறு அழைத்திருக்கிறார்.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரச எதிர்ப்பு அரசியலுக்குள் வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பு மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை சார் அரசியலுக்கு சவால் விடும் விடயமும் கூட.

கொள்கை அரசியலை காரணம் காட்டி, விக்னேஸ்வரனின் கூட்டில் இணைய மறுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அவர் ‘செக்’ வைக்க முற்படுகிறாரோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமது நலனுக்காக எல்லா தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். கொள்கை ரீதியாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், எந்தவொரு காலத்திலும் எல்லா தமிழ் கட்சிகளும் அவ்வாறு ஒரே அணியில் இணைந்ததுமில்லை. ஒன்றாக நின்றதும் இலலை.

விக்னேஸ்வரனும் கூட அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. அவரும் அவ்வாறான முயற்சிகளைக் குழப்பியவர் தான்.

அரச எதிர்ப்பு அரசியல் என்ற அடிப்படையை வைத்துக் கொண்டு அவர் இப்போது, தன்னைப் பலப்படுத்துவதற்கான ஒரு கூட்டுக்கு வழி தேடுகிறாரோ என்ற சந்தேகம் எழுவது இயல்பு. ஏனென்றால் இது தேர்தல் காலம்.

கட்சிகள் ஒவ்வொன்றும் தமது தேர்தல் நலன்களைப் பற்றியே சிந்திக்கும். வெற்றிக்கான வாய்ப்புகளை மையப்படுத்தியே முடிவுகளை எடுக்கும். விக்னேஸ்வரனும் அவ்வாறான நிலையில் இருந்து ஒருபோதும் விலக முடியாது.

இப்போதைய நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் இருந்து எட்ட விலகி நிற்கும் அவர், தன்னைப் பலப்படுத்திக் கொள்ள ஒரு பலமான கூட்டு தேவை. அதற்கு அவர், அரச எதிர்ப்பு அரசியலை ஆயுதமாக தூக்க நினைக்கிறார் போலும்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் தீவிரமான அரச எதிர்ப்பு அரசியலுக்கு எப்போதும் மதிப்பளித்து வந்திருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட அதனைத் தான் முன்னெடுத்தது, அண்மைக்காலத்தில் தான் அது, ஓரளவுக்கு இணக்க அரசியலின் பால் நகர்ந்தது.

அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்ளவே விக்னேஸ்வரன், அரச எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்க நினைக்கிறார்.

விக்னேஸ்வரன் கொள்கை வழி அரசியலில் உறுதியாக நிற்பார் என்று நம்பியவர்களுக்கு அவர் வெறும் அரச எதிர்ப்பு அரசியலின் அடிப்படையில் செயற்பட முனைவது ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது.

Share the Post

You May Also Like