ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வரையிலான நிதி

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தன்னால் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

கம்பரலிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைவீடுகளை திருத்தம் செய்து பூர்த்தி செய்வதன் பொருட்டு 477 பயனாளிகளுக்கான காசேலை வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று(09) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசேலைகளை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் செயலாளர் ரி.சுரேன் மற்றும் இணைப்பாளர் ம.காளிதாசன் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தார் ஆ.சசீந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் ஆலையடிவேம்பில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்காக 6 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்நிதியை பயன்படுத்தி ஆலையடிவேம்பில் உள்ள பிரதான வடிகான்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் வெள்ளப்பெருக்கு காலத்தில் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கும் நிலைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அது மாத்திரமன்றி ஆலையடிவேம்பில் 25 கோடி ரூபா தொடக்கம் 30 கோடி ரூபா வரையிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இதுவரையில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 477 குறை வீட்டுப்பயனாளிகளுக்கான காசேலைகளையும் பிரதம அதிதி உள்ளிட்டவர்கள் வழங்கி வைத்தனர்.

Share the Post

You May Also Like