கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா?

நக்கீரன்

கோத்தபாய இராஜபக்ஷ ஸ்ரீலங்கா  பொதுசன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்றுதான். ஜனாதிபதி வேட்பாளராக  இராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நிறுத்தப்படுவார் எனபதில் யாருக்கும் ஐயம் இருந்ததில்லை. சமல் இராஜபக்ஷ மற்றும் பசில் இராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் அடிபட்டாலும்  தொடக்க முதல் கோத்தபாயாவின் பெயரே இராஜபக்ஷ குடும்பத்தின் தெரிவாக இருந்தது.

இப்போது மட்டுமல்ல இன்னும் இரண்டு சகாப்தங்களுக்கு சிறிலங்காவின் ஆட்சி அதிகாரம் இராஜபக்ஷ குடும்பத்துக்குச் சொந்தமாகப் போய்விட்டால் அதில் வியப்புக்கு இடமில்லை.  ஒரு காலத்தில் அரசியலில் கொடிகட்டிப் பறந்த பண்டாரநாயக்க குடும்பம் இன்று  இராஜபக்ஷ குடும்பத்தால் சீர்குலைக்கப் பட்டுவிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பண்டாரநாயக்க குடும்பத்தின் பிடிக்குள் இருந்து  நழுவி விட்டது.

பண்டாரநாயக்கா குடும்பத்தின் பிறப்பிடமான அத்தனக்கல பிரதேச ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியின் தலைமை கூட சந்திரிகா குமாரதுங்காவின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை.இதனை நினைக்கும் போது  அதிவீரராம பாண்டியன் எழுதிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து அயல் ஊர் நண்ணினும் நண்ணுவர்
சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக் கூழ் சாலை அடையினும் அடைவர்.  (வெற்றி வேற்கை)

போரில் விடுதலைப் புலிகளைப் புறங்கண்ட பெருமை மூவருக்கு உண்டு என்பார்கள். மகிந்தஇராஜபக்ஷ, இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய இராஜபக்ஷ. போர் வெற்றியை வைத்தே மகிந்தா 2010 ஆம் ஆண்டில் நடந்த சனாதிபதி தேர்தலில் 58.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டினார். ஆனால் 2015 இல் நடந்த தேர்தலில் 47.58 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அவரே எதிர்பாராத வகையில்  தோற்றுப் போய்விட்டார்.

இருந்தும் விடுதலைப் புலிகளை புறங்கண்ட ‘வீரர்கள்’ என்ற நினைப்பு சிங்கள – பௌத்த மேலாண்மைப் மனப்பாங்குடையவர்களிடம் தொடர்ந்து இருக்கிறது.  தென்னிலங்கையில்  சரிபாதி சிங்கள – பௌத்தர்களது ஆதரவு இன்றும் இராசபக்ச குடும்ப அரசியலுக்கு  இருக்கிறது.

ஓகஸ்ட் 11, 2019 இல் கொழும்பு சகததாச உள்ளரங்கில் நடந்த ஸ்ரீலங்கா  பொதுசன முன்னணியில் அடுத்த தேர்தலில் சனாதிபதி பதவிக்கு கோத்தபாய இராசபக்ச  களம் இறக்கப் பட்டது தென்னிலங்கை வாக்காளரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சிங்கள – பவுத்த மேலாண்மைச் சிந்தனையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவும் எதிர்பார்க்கப்பட்டதே.

ஆனால் வட இலங்கையில் (யாழ்ப்பாணத்தில்) ஒரு சிலர் வெடி கொளுத்தி ஆரவாரப்பட்டதுதான் வியப்பாக இருக்கிறது. தமிழ்மக்களின் விடுதலைப் போரை நசுக்கிய ஒருவர், மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள் எல்லாம் இராணுவ இலக்குகள் என்று கூறி அவற்றின் மீது குண்டுகள் வீசி ஆயிரக்கணக்கில் பொதுமக்களைக் கொன்ற ஒருவர், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த வி.புலி வீரர்களை சுட்டுக் கொல்ல கட்டளை பிறப்பித்த ஒருவர் சனாதிபதி பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கபட்டதை எப்படி தமிழர்களில் ஒரு சிலர் வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது.

சுகததாச உள்ளரங்கில் நடந்த ஸ்ரீலங்கா  பொதுசன முன்னணியின் மாநாட்டில் கடதாசி மட்டையில் (letter pad) மட்டும் உயிர்வாழும் கட்சிகளின் ‘தலைவர்களும்’ கலந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்த்தது போல வினாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) கலந்து கொண்டுள்ளார். தமிழீழப் பிரகடனம் புகழ் வரதசாரசப் பெருமாள் கலந்து கொண்டுள்ளார். இவர்கள் உதைக்கிற கால்களை முத்தம் இடுபவர்கள். மகிந்த இராசபக்சவின்’நம்பிக்கைக்குரிய தலைவர்’  இபிடிபியின் ஆயுட்காலத் தலைவர் டக்லஸ் தேவானந்தா கலந்து கொண்டாரா இல்லையா என்பது தெரியவில்லை.  அவர் கழுவும் நீரில் நழுவும் மீனைப் போன்றவர். 

சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய இராசபக்சவை நியமித்தமை மிகவும் ஆபத்தான விடயம் என முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

‘கோத்தபாய இராசபக்ச என்பவர் மிகவும் ஆபத்தானவராகும். கொலைக்கார கும்பலுக்கு நாட்டை கொடுக்க கூடாது. கடந்த மகிந்த இராசபக்சவின் ஆட்சியின் போது வெள்ளை வானில் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். ஊடகவியலாளர்கள் வீதி முழுவதும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.  நான் வென்று கொடுத்த யுத்தத்தை முடித்து வைத்தார்கள். அவ்வளவுதான்.  நான் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக ஒரு கதை பரவி வருகின்றது.   நான் ஒரு போதும் அந்தத் தரப்பிற்கு ஆதரவு வழங்கமாட்டேன். கொலைகாரக் கும்பலுக்கு என் ஆதரவு கிடைக்காது. அவர்கள் ஆட்சிக்கு வருவதென்பது மிகப்பெரிய ஆபத்தாகும்’ என சந்திரிகா குமாரதுங்கா  மேலும் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய இராசபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளரக இருந்த போது அவர் ஒரு அரச ஊழியர் போல நடந்து கொள்ளவில்லை. ஓர் அமைச்சர் போலவே -சர்வாதிகாரி போலவே நடந்து கொண்டார்.

மகிந்த மற்றும் கோத்தபாய ஆட்சியில்  (2005 -2015) 25ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்.  பலர் கடத்தல்,சித்திரவதைக்குப் பின்னர் காணாமல் போனார்கள். இவர்களில் 23 ஊடகவியலாளர்கள் தமிழர்கள்.

சண்டே லீடர் வார ஏட்டின் முதன்மை ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா கொலை தொடர்பாக கோத்தபாயவுக்கு எதிராக அவரது மகள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும் ஒரு வழக்கு கனடியரான றோய் சமாதானம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னைக் கைது செய்த  போலீசார் தன்னைச் சித்திரவதை செய்ததாகவும் பொய்யான  குற்றச்சாட்டில் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப் பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

யூன் 26, 2019 இல் மேலும் 10 ப் பேர் கலிபோர்னியா நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்துள்ளார்கள். வழக்குத் தொடுத்தவர்கள் கோத்தபாயாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இராணுவத்தினர் தங்களை சித்திரவதை, கற்பழிப்பு, பாலியல் ரீதியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்கள்.  இவற்றை கோத்தபாய மறுதலித்துள்ளார்.

கோத்தபாய இராசபக்ச  சரி, மகிந்த இராசபக்ச சரி இருவரும்  சிங்கள – பவுத்த மேலாண்மைக் கோட்பாட்டாளர்கள்.  இன,மத அடிப்படையில் சிந்திப்பவர்கள். போர்க் காலத்தில் –

  1. ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள், செஞ்சிலுவைச் சங்க நிருவாகிகள், ஊடகவியலாளர்களை வன்னிப் போர்முனையில் இருந்து  அப்புறுப்படுத்தியவர்.
  2. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தியது முறையான இராணுவ இலக்குகள் (legitimate military targets)  எனக் கொக்கரித்தவர்.
  3. மே 18, 2009  காலை  வெள்ளைக் கொடியுடன் இராணுவத்திடம் சரணடைந்த  அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன், திருமதி வினிதா நடேசன்,சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன், கேணல் இரமேஷ் (இளங்கோ)  உட்பட சுமார் 300 க்கு மேலான வி.புலித் தலைவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு கட்டளை பிறப்பித்தவர்.
  4. மே 18, 2009  மாலை வட்டுவாகலில் சரண் அடைந்த நூற்றுக்கும் அதிகமான வி.புலிகளின் தளபதிகள், போராளிகள், துறைப் பொறுப்பாளர்கள் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்கள். சரணடைந்தவர்களை கொல்லுமாறு  கட்டளை பிறப்பித்தவர்.
  5. இராணுவத்திடம்  தனது  இரண்டு மெய்ப்பாதுகாவலர்களோடு சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவரது 12 அகவை மகன் பாலச்சந்திரன் ஈவு இரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டார். பாலச்சந்திரனை உயிரோடு விட்டால்  ஆபத்து என கோத்தபாயவுக்கு தமிழ் எட்டப்பன் ஒருவன் அறிவுறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
  6. முள்ளிவாய்க்காலில் முற்றுகைக்கு உள்ளான மக்களின் எண்ணிக்கை 70,000 மட்டுமே எனச் சொல்லி உணவு, நீர் வழங்கலை மட்டுப்படுத்தியவர். போர் முடிந்தபோது முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய மக்கள் தொகை 282,000 என அரசாங்கமே அறிவித்தது.
  7. ஸ்ரீலங்கா வின் தேசிய கீதத்தை  தமிழில் பாடக் கூடாது எனத்  தடை போட்டவர்.
  8. மாவட்டங்களின் மக்கள் தொகை  முழுத் தீவின் தேசிய விகிதாசாரத்தை ஒத்ததாக மாற்றி அமைக்க வேண்டும். தமிழ்ப் பெரும்பான்மை மாகாணங்கள் இருக்கக் கூடாது, அதாவது  வட மாகாணம் கிழக்கு மாகாணம் இரண்டிலும் சிங்களவர் தொகை 75 விழுக்காடு, தமிழர் தொகை 11.15 விழுக்காடு, முஸ்லிம்களின் தொகை 10.00விழுக்காடு ஆக மாற்றப்பட வேண்டும். இது ஒரு பாசீச சிந்தனை என்பது சொல்லாமலே விளங்கும்.
  9. அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளிவந்த போது அது ஸ்ரீலங்கா வை 9 துண்டுகளாக வெட்டும் முயற்சி என்று மகிந்த இராசபக்சா வருணித்தார். அதாவது சம்பந்தர் ஐயா”ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு”எனும் வரையறைக்குள் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மாத்திரமன்றி தன்னார்வத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இது அமைய வேண்டும் என்று விளக்கம் அளித்த பின்னரும் இடைக்கால அறிக்கை ஸ்ரீலங்கா வை 9 துண்டுகளாக வெட்டும் எத்தனம்  என மகிந்தா விமர்ச்சித்தார்.

இப்போது சனாதிபதி தேர்தல் வருகிறது என்றவுடன் “வடக்கு, கிழக்குத் தமிழர்களின் சிக்கல்களுக்கு எமது ஆட்சியில் தீர்வு கிடைக்கும்  என ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் சனாதிபதி வேட்பாளர் கோத்தபாய இராசபக்ச அறிவித்துள்ளார்.  தென்பகுதி மக்களின் வாக்குகளால் மட்டும் தன்னால் வெற்றி பெற முடியும் என்றும் எல்லா மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட சனாதிபதியாக இருக்கவே தாம் விரும்புபவதாகவும்  அதற்குத் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை  ஆதரவு தேவை எனத் தன்னிடம் சொன்னதாக சித்தார்த்தன் சொல்கிறார். இதன் தார்ப்பரியம் என்னவென்றால் “தேர்தலில்  வெற்றி ஈட்ட சிங்கள – பவுத்த வாக்காளர்களது வாக்குகளே போதும் தமிழ்மக்களது வாக்குகள் விழுந்தால் வாக்கு விழுக்காடு அதிகரிக்கும்”என்பதாகும்.

தனது பங்குக்கு மகிந்த இராசபக்ச “தேர்தலில் வெற்றி பெற்றால் நாங்கள்  13ஏ + யை நடைமுறைப் படுத்துவோம்”என்கிறார்.

இந்த 13ஏ+ பழைய பல்லவி. போர் முடிந்த கையோயோடு ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்த ஐநா அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம்  இனச் சிக்கலுக்குத் தீர்வாய் 13ஏ+ யை கொண்டுவருவேன் எனத் தெரிவித்தார். பின்னர் அந்த13ஏ+ என்ன என்று கேட்ட போது அது ஒரு மேல்சபையை (Senate) உருவாக்கி அதன் மூலம் இனச் சிக்கலுக்குத் தீர்வு  காண்பது எனத் திருவாய் மலர்ந்தார். அதே 13ஏ+ தீர்வைத்தான் இப்போதும் குறிப்பிடுகிறார்.

கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா? தேர்தல் காலத்தில் பிறக்கும் ஞானம் தேர்தல் முடிந்ததும் போய்விடும் என்பது  எல்லோருக்கும் தெரியும்.

பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.

காகத்தைக்  கங்கை நீரில் குளிப்பாட்டினாலும் அதன் நிறம் மாறாது.

பேய்ச்சுரைக்காயைப் பால் பெய்து அடினும்,  கைப்பு மாறாது.

போர் முடிந்த பின்னர்  கொழும்பில்  இராணுவ அணிவகுப்புகள் நடத்தி வெற்றி கொண்டாடியதையும் வடக்கிலும் கிழக்கிலும் போர் நினைவாலயங்கள், பவுத்த விகாரைகள், தனியார் காணிகளை கையகப்படுத்த மரங்களில் அறிவித்தல்கள் ஒட்டியதையும்,  போரினால் உடைந்துபோன வீடுகளில் ஒரு வீட்டையாவது மீள்கட்டித்தர அரசாங்கத்திடம் நிதியில்லை எனக் கைவிரித்ததையும்  அதேசமயம் சனாதிபதியின் உல்லாசத்துக்கு வடக்கில் உரூபா 350 கோடியில் அரண்மனை கட்டியதையும் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் எனத் தலைகால் தெரியாமல் கொக்கரித்ததையும் முழத்துக்கு ஒரு இராணுவ சிப்பாயை நிறுத்தி  இராணுவ தளபதிகள் குறுநில மன்னர்கள் போல் உலா வந்ததையும் தமிழ்மக்கள்  எளிதில் மறக்க மாட்டார்கள்!

Share the Post

You May Also Like