ஒரு கட்சியின் கைப்பாவையாக இயங்கும் காணாமல் போனோர் அமைப்பு!

நக்கீரன்

 எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற குரல் ஒன்று கேட்கிறது. இப்படிக் குரல் எழுப்புவர்கள் வவுனியா வலிந்து காணாமல் போனோர் உறவுகள் அமைப்பு.

“2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களுக்கு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தேவை! சிங்களக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  மற்றும் ஐதேக ஆகியவற்றுக்கு வாக்களிப்பது வீணானது என்பது வெளிப்படையானது. 2015 இல், சிறிசேனாவுக்கு வாக்களித்ததன் மூலம் வளர்ச்சி வழியில் தமிழர்களுக்கு எதுவும் நடக்கவில்லை.உண்மையில் சிறிசேனாவின் கீழ் தமிழர்கள் இன்னும் பலவற்றை இழந்தனர்.வடகிழக்கில் எதுவும் மாறவில்லை” என .இந்த அமைப்புச் சொல்கிறது.

மயிலிட்டி மீன்பிடி துறைமுகம்

இப்படியான கருத்து அபத்தமானது. நகைப்புக்குரியது. கண் பார்வை இல்லாதவன் கூடச் சொல்லமாட்டான். கடந்தவாரம் உரூபா 150 மில்லியனில் (உருபா 15 கோடி)புனரமைப்புச் செய்யப்பட்ட மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் இரணில் விக்கிரமசிங்க  வடக்கு மாகாண  மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறைத் துறைமுகம்  

காங்கேசன்துறைத் துறைமுகம் அ.டொலர் 45.27 மில்லியன் (உருபா 792 கோடி)செலவில்  மேம்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்குத் தேவையான நிதியை இந்தியா கொடுத்து உதவும். இது ஒரு மூன்றாண்டு கால மேம்பாட்டுத் திட்டமாகும்.  இதற்குத் தேவையான 15 ஏக்கர் நிலம் காங்கேசன்துறையைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து பெறப்படும். இதன்  அடுத்த கட்ட மேம்பாட்டில் 50 ஏக்கராக விரிவாக்கப்படும்.காங்கேசன்துறை  ஒரு வர்த்தகத் துறைமுகமாக கட்டியெழுப்பப்படும்.  இதனால் தென்னிந்தியா  இலங்கைக்கு இடையான வர்த்தகம் அதிகரிக்கும். தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இந்துமாக் கடலில்  ஒரு வாசலாக அமையும்.

கொழும்புத் துறைமுகம் காரணமாகக் கொழும்பு நகரும், கட்டுநாயக்க விமான நிலையம் காரணமாக கம்பாஹா மாவட்டமும் பொருளாதாரத்தில் முன்னேறியதைப் போலவே இந்த இணைப்பு நடவடிக்கைகள் வடக்குக்குப் பெரிய  வரப்பிரசாதமாக  இருக்கும்.

 இராமேஸ்வரம் –   மன்னார் இடையிலான பயணிகள் படகுச் சேவை

 இராமேஸ்வரம்  – மன்னார் இடையிலான பயணிகள் படகுச் சேவை விரைவில் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் வட இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான வாணிகம் அதிகரிப்பதோடு தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழும் ஒரு இலட்சம் தமிழ்மக்கள் நாடு திரும்ப வசதியாக இருக்கும். அண்மையில்  இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் இராமேஸ்வரம் –  மன்னார் இடையிலான பயணிகள் படகுச் சேவை மீளத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பலாலி விமான நிலையம்

பல ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்த பலாலி விமான நிலையம் எதிர்வரும் செப்தெம்பர் முதல்நாள் தொடக்கம் பிரதேச பறப்புகளுக்கும் ஒக்தோபர் முதல் நாள் தொடக்கம்  பன்னாட்டு பறப்புகளுக்கு திறந்துவிடப்பட இருக்கிறது. இந்த விமான நிலையத்தை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகைகள்  கடந்த யூலை மாதம் தொடங்கப்பட்டன. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ச்சுன இரணதுங்க அதனைத் தொடக்கி வைத்தார்.

பலாலி விமான நிலையம் மூன்று கட்டங்களின் கீழ்  மேம்பாடு செய்யப்படவுள்ளது.முதற்கட்ட பணிகளுக்காக சுமார் உரூபா 2.25 பில்லியன் (2250 மில்லியன் உரூபா) செலவிடப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் பங்காக  1950 மில்லியன் உரூபாவும் இந்திய நிதியுதவியின் ஊடாக உரூபா 300 மில்லியன்  ஒதுக்கப்பட்டது.

விமான நடவடிக்கை செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் முக்கிய ஓடுபாதையின் முதலாவது கட்டத்தில் 950 கி.மீட்டர் ஓடுபாதை புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன்,திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் குறித்த பிரதான ஓடுபாதை  1.5 கி. மீட்டர் மேலதிகமாக நிர்மாணிக்கப் படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

பலாலி விமான நிலையப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர்  1800 சதுர கி.மீட்டர் வரையான  வான் வெளியில்  விமானங்கள் பயணிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டும்.

திட்டத்தின் இறுதிக்கட்டத்தின் போது, பிரதான விமான ஓடுதளத்தின் 2.3 கி.மீட்டர் ஓடுபாதை  முற்றாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அந்தக் கட்டம் நிறைவு செய்யப்பட்ட பின்னர், AL – 320 மற்றும் AL – 321 ரக விமானங்கள் பலாலி விமான நிலையத்தில் இருந்து பிராந்திய விமான நிலையங்களுக்கு பயணிக்கவுள்ளன.

இதனால் இவ்வளவு காலமும் கட்டுநாயக்கா மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் வட மாகாண மக்கள் பலாலியில் இருந்து பயணிக்கவும்  வெளிநாடுகளில் இருந்து வந்து பலாலியில் இறங்கவும்  வசதியாக இருக்கும். மேலும் இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ் நாட்டிற்கும் பலாலிக்குமிடையிலான பொருளாதரப் பாதை ஒன்று திறக்கப்பட்டு விடும். இது  வட இலங்கையின் பொருளாதாரம் புதிய வளர்ச்சிகளுக்கு இட்டுச் செல்லும் என நம்பலாம்.

எனவே  மொத்தத்தில் காங்கேசன்துறை, பலாலி, மன்னார் என்று மூன்று வாசல்களும் தமிழகம் மற்றும் இந்தியா நோக்கித் திறக்கப்படும்.

இவைபோன்ற பொருளாதார மேம்பாடு வலிந்து காணாமல் போனோர்  அமைப்புக்கு தெரியாமல் இருக்கிறது. அல்லது தெரிந்தும் தெரியாதது போல அந்த அமைப்பு பாசாங்கு செய்கிறது.

இராணுவம் கைப்பற்றிய காணிகள்

போர்க் காலத்தில் இராணுவம் மற்றும் கடற்படை கைப்பற்றியிருந்த காணிகள் 2015இல் இருந்து தொட்டம் தொட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறது. கையில் கிடைத்த  புள்ளி விபரங்களின் படி 75 விழுக்காடு தனியார் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.  2015 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில்  6381.5 ஏக்கர் நிலம் இராணுவத்தின் பிடிக்குள் இருந்தது. இதில் அரைவாசிக் காணி விடுவிக்கப்பட்டு விட்டது.

இந்த ஆண்டு சனவரி மாதத்தில் வடக்கில் 1,201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது.கிளிநொச்சியில் 972 ஏக்கர் நிலம், முல்லைத்தீவில் இராணுவ பண்ணையாக இயங்கி வந்த 120 ஏக்கர் நிலமும் விடுவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் 46.11 அரச காணிகளும் 63.77 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்ன. இதற்கமைய நாச்சிக்குடா, வேளான் குளம் மற்றும் உடையார் கட்டுக்குளம் இராணுவ பண்ணை நிலப்பரப்பில் உள்ள 1,201 ஏக்கர் விடுவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு 04  மார்ச் மாதத்தில் மட்டும் வடக்கில்  வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 30 ஏக்கர் காணி மற்றும் மக்கள் பாவனைக் குரிய வீதி ஒன்றும் மயிலிட்டித்துறை வடக்கு, மயிலிட்டி வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் காணிகளும், பலாலி கிழக்கில் முதன்மை வீதி ஒன்றும் விடுவிக்கப்பட்டன.

இலங்கையில் 2015 தொடக்கத்தில் பாதுகாப்பு படைகள் வசம் இருந்த 84,675 ஏக்கர் காணியில் 71,178 ஏக்கர்( காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

படையினரிடமிருந்த 84,675 ஏக்கர் காணிகளில் லேயே, மேற்படி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

விடுவிக்கப்பட்ட காணிகளுள் 81 சதவீதமானவை அரசுக்குச் சொந்தமானவை என்றும், 90 சதவீதமான தனியாருக்குரியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 84,675 ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தன.

இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்ரிபால சிறிசேன சனாதிபதியாக பதவியேற்ற பின்னர், படையினரிடமிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அந்த வகையில், 2019 மார்ச் மாதம் 31ம் தேதி வரை,பாதுகாப்பு படைகள் வசம் 84,675 ஏக்கரில் 71,178 ஏக்கர் (84.06 விழுக்காடு) காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாத  காணி 13,497 ஏக்கர் (15.93 விழுக்காடு)  என வடமாகாண மேம்பாட்டுக் குழுவின் அமர்வின்போது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது படைகள் வசம் 13,497 ஏக்கர் காணிகளே உள்ளதாகவும்,அவற்றுள் 11,039  ஏக்கர் (84.06விழுக்காடு)  அரச காணிகள் என்றும், 2,458 ஏக்கர்(15.94 விழுக்காடு)  தனியார் காணி எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் 1 மே 2009 –  மார்ச் 12,  2019  க்கு இடையில் விடுவிக்கப்பட்ட  அரச மற்றும் தனியார் காணிகள் விபரம் பின்வருமாறு –

1 மே 2009 –  மார்ச் 12,  2019  க்கு இடையில் விடுவிக்கப்பட்ட  அரச மற்றும் தனியார் காணிகள்

  அரச காணி ஏக்கர் தனியார் காணி ஏக்கர் மொத்தம் ஏக்கர்
முப்படைகளின் வசம் மே 2009இல் இருந்த காணி 88,722 29,531 118,253
மே 2009தொடக்கம் மார்ச்2019 வரை முப்படைகளினால் விடுவிக்கப்பட்ட காணி 63,258 26,005 89,263
விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு 71.29% 88.06% 75.48%
விடுவிக்கப்படாத காணிகள் 25,464 3,526 28,990
விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு 28.71% 11.94% 24.52%

                                                                                   *மூலம்: நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம்

 • எனவே அண்ணளவாக இராணுவத்தின் பிடியியில் இருந்த காணிகளில் 75விழுக்காடு விடுவிக்கப்பட்டுவிட்டது. மேலும் ஒரு தொகை காணிகளை விடுவிக்க இராணுவம் அரசாங்கத்திடம் 100 மில்லியன் உரூபா கேட்டுள்ளது.
 • சம்பூர் (திருகோணமலை மாவட்டம்)
 • சம்பூரில் தமிழ்மக்களுக்குச் சொந்தமான 1,055 ஏக்கர் காணி முற்றாக மீள் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 367 குடும்பங்களுக்குச் சொந்தமான 818 ஏக்கர் காணி இராசபக்ச அரசு  அ.டொலர் 4.5 பில்லியன் முதலீட்டில் கனரக தொழில் பேட்டை ஒன்றை   நிறுவ சிறீலங்கா கேட்வே  இன்டஸ்றீஸ் (Sri Lanka Gateway Industries (pvt) ltd) என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்துவிட்டது.  “அந்தக் காணி கொடுத்தது கொடுத்ததுதான் அது திரும்பி வராது. ததேகூ உங்களை சும்மா ஏமாற்றுகிறது” என்று அன்றைய மீள்குடியமர்வு அமைச்சின் துணை அமைச்சர் கருணா அந்த மக்களிடம் சொன்னார். ஆனால் 2015 இல் நடந்த  ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்த  818 ஏக்கர் காணியை  அரசு மக்களுக்கு திரும்பக் கொடுத்துவிட்டது. இதே போல் சிறீலங்கா கடற்படை 237 ஏக்கர் காணியில் பாரிய முகாம் அமைத்து இருந்தது. இடப்பெயர்வுக்கு முன்னர் இந்தக் காணி 617 குடும்பங்களுக்கு சொந்தமாக இருந்தது. இதுவும் ஆட்சி மாற்றத்தின் பின்னர்  ததேகூ இன் அளுத்தம் காரணமாக தமிழ் மக்களிடம் திருப்பி கையளிக்கப்பட்டது.
 • இந்த விபரங்களை வலிந்து காணாமல் போனோர் அமைப்பு  அரசியல் காரணங்களுக்காக வலிந்து இருட்டடிப்புச் செய்கிறது. அல்லது அந்த அமைப்புக்கு காணி விடுவிப்புப் பற்றி அக்கறையில்லை போலும்.
 • வட கிழக்கு பொருளாதார மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கிய நிதி
 • இவற்றைவிட வட கிழக்கு மாகாணங்களுக்குப்  பொருளாதார மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கிய நிதி  விபரம் பின்வருமாறு –
    • (1) வடக்கில்  5 மாவட்டங்களில் உள்ள  மருத்துவ மனைகளின் மேம்பாட்டுக்கு நெதலாந்து அரசு உருபா 12,000 மில்லியன் (60 மில்லியன் யூரோ)நன்கொடையாகக் கொடுத்துள்ளது.
    • (2) ‘கம்பெரலிய’ என்ற கிராமிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மே 2019 வரை வடக்குக்கு Rs.37, 565.2 மில்லியன் உருபா ஒதுக்கப்பட்டுள்ளது.
    • (3) பின்தங்கிய மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு  வீதிகள், குளங்கள்,அணைக்கட்டுகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றின் சீரமைப்புக்கு மேலதிகமாக உரூபா 3,402 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • (4) போரினால் தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உருபா 10 பில்லியன் அரச நிதியுதவியுடன் 10,000 கல் வீடுகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இந்த 10,000 வீடுகளில் 4,750 வீடுகள் சனவரியில் தொடங்கப்பட்டு முடிவுறும் தறுவாயில் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அரசு வட கிழக்கு மாகாணங்களில் சுமார் 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.
    • (5) கிளிநொச்சி மாவட்டத்தில்  உரூபா 4474 மில்லியன்  மதிப்பீட்டில் சகல வசதிகளுடனும் கூடிய பொது மருத்துவமனைக்கான  அடிக்கல்  பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களால்  கடந்த பெப்ரவரி 15 இல் வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்பட்டது. இதில் 1974 மில்லியன் நெதலாந்து அரசின் நிதி உதவியாகவும்,மிகுதி 2500 மில்லியன் இலங்கை அரசின் பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியாகவும் இருக்கும்.
    • (6) வடக்கு மாகாண ததேகூ நா.உறுப்பினர் ஒவ்வொருவருக்கு தலைக்கு உரூபா
 • வலிந்து காணாமல் போனோர் அமைப்பு ஓர் அரசியல் கட்சியின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  இயங்குகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வசை பாடுகிறது.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆலவட்டம் வீசுகிறது.  அதன் காரணமாகவே 2019சனாதிபதித் தேர்தலில் தமிழர்களுக்கு தமிழ் சனாதிபதி வேட்பாளர் தேவை என்கிறது. அந்த வேட்பாளர்களது  பெயர்களையும் குறிப்பிடுகிறது.
 • “2019 ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு ஒரு தமிழ் சனாதிபதி வேட்பாளர் தேவை,எனவே இந்த வேட்புமனுக்காக மணிவண்ணன் அல்லது காண்டீபன் ஆகியோரை நாங்கள் பரிந்துரைக்கிறோம். சனாதிபதி தேர்தலை இந்த அமைப்பு சனசமூக நிலையம் என நினைக்கிறது.
 • வலிந்து காணாமல் போனோர் அமைப்பில் இருக்கும் தாய்மார்களின் வலி  புரிந்து கொள்ளக் கூடியது. இது தொடர்பாக அரசாங்கம்  இரண்டு சட்டங்களை இயற்றியுள்ளது. ஒன்று வலிந்து காணாமல் போனோர் அலுவலகம் (The Office of Missing Persons (OMP) ).   மற்றது  இழப்பீடு  அலுவலகம் (Office for Reparations).  இயங்குகிறது. இந்த இரண்டுக்கும் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
 • இந்தச் சட்டங்களில் குறைபாடுகள் இருந்தாலும் இந்த அலுவலகங்களோடு ஒத்துழைப்பதுதான் நல்லது.  யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தின் கிளை விரைவில்  திறக்கப்பட  இருக்கிறது. அதனை இந்த வலிந்து காணாமல் போனோர் அமைப்பு புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அமைப்பு ஒரு குறிப்பிட்ட கட்சியின் கைப்பாவையாக இயங்குகிறது என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாகும்.
 • எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் ததேமமு யைச் சார்ந்த மணிவண்ணன் மற்றும் காண்டீபனை நிறுத்துமாறு கேட்பது சிறுபிள்ளைத்தனமானது. முதலில் தமிழர் ஒருவர் சனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு வெல்லப் போவதில்லை. முன்னைய காலங்களில் இந்த முயற்சியில் ஈடுபட்டவர்களை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளார்கள்.
 • 2015 ஆம் ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டு கட்டுக்காசை இழந்தார். மொத்தம் பதிவான 10,495,451  வாக்குகளில் அவருக்குக் கிடைத்த வாக்குகள் 9,662 (0.09 விழுக்காடு) மட்டுமே!
Share the Post

You May Also Like