தவறான தகவல்களால் எனக்கு உயிர் ஆபத்து! நாடாளுமன்றில் சிறி

பிழையான தகவலின் அடிப்படையில் தனது வீட்டில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், இந்த விடயத்தில் சபாநாயகர் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “இராணுவத்தினரும் பொலிஸாரும் இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் உள்ள எனது வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வுகளுக்காக கொழும்பில் நான் இருக்கின்ற வேளையில் மறைத்து வைக்கப் பட்டிருக்கின்ற ஆயுதங்களை தேடுகின்றோம் எனத் தெரிவித்து படையினரும் பொலிஸாரும் எனது வீட்டில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிழையான தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதனால் எனது உயிருக்கும் ஆபத்து. இந்த விடயத்தில் சபாநாயகர் தலையிட்டு சிறப்புரிமையை பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்குச் சொந்தமான காணியில் இன்று தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த காணியில் ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்தே இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like