கோட்டாபயவின் தெரிவு அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுஜனப் பெரமுன தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிப்பார்கள். அவர்கள் அழைக்கும் பட்சத்தில் நாங்கள் அவருடன் கலந்துரையாடி எமது மத்திய குழுவினூடாக எமது இறுதி தீர்மானத்தை அறிவிப்போம்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது கட்சி சார்ந்து உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் என்று எதுவும் இடம்பெறவில்லை. சாதாரண சந்திப்புக்கள் இடம்பெறுகின்ற போது இது தொடர்பாக அவ்வப்போது உத்தியோகபூர்வமற்ற விதத்தில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. அவற்றை ஊடகங்கள் பேச்சுக்களாகக் கருதுகின்றனவே தவிர கட்சியின் நிலைப்பாட்டில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னும் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை.

கோத்தாபய தொடர்பாக தமிழ் மக்கள் கருதுகின்ற விடயம் என்பது மிகவும் வெளிப்படையான விடயம். அவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் பட்டசு கொழுத்தப்பட்டது என்கின்ற விடயம் கூட அவர்களால் திட்டமிடப்பட்ட வகையிலே மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

அத்தோடு கோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பதும் அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இது தொடர்பில் தமிழ்ப் பகுதிகளில் இருந்து வந்த அபிப்பிராயங்களைப் பார்க்கின்ற போது தமிழ் மக்கள் விமர்சனத்தோடு வைத்திருக்கின்ற சில அரசியல்வாதிகள் தவிர ஏனைய அரசியல்வாதிகள் எல்லோரும் இதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள். நாங்களும் அவற்றை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

அத்தோடு கோத்தாபய ராஜபக்ஷ என்பவர் மீது பல யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் உட்பட பல்வேறு கொலைகள் தொடர்பிலும் அவர் சம்மந்தப்பட்டதான செய்திகள் உள்ளன. நிதிமோசடி மற்றும் அவன்காட் விவகாரம் போன்றன தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர்மீது உள்ளதாக செய்திகள் உள்ளன.

அத்தோடு அவரின் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வாக்காளர் பட்டியல் போன்றன தொடர்பிலான விடயங்களும் அவருக்கு எதிரானதாகவே இருக்கின்றது. உண்மையில் இத்தனை குற்றச்சாட்டக்களும் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயம். இது இந்த நாட்டுக்கு ஒரு அழகான விடயமாக இருக்க முடியாது. மக்களின் அபிப்பிராயங்களின் அடிப்படையில் நாங்களும் இவை தொடர்பில் பரிசீலனை செய்துகொண்டிருக்கின்றோம்.

Share the Post

You May Also Like