இணைந்து செயற்படுவதாகக் காட்டும் அரசு மறைமுகமாக காணிகளை அபகரிக்கிறது!

முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்

அரசாங்கம் ஒரு விதத்தில் எங்குளுடைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாகக் காட்டிக்கொண்டாலும்கூட, மறைமுகமாக குறிப்பாக சில அரச திணைக்களங்கள், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்கள் சில அரசியற் பிரமுகர்கள் இதற்குப் பின்னாலிருந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாமாவட்டத்தில், கச்சல் சமமளங்குளத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகள், மற்றும் செட்டிகுளம் பகுதியில் கீழ் மல்வத்தோயா என்ற திட்டத்தினூடாக இடம்பெறும் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற சில அமைச்சர்களும், அதேபோல வேறு சிலரும், சில திணைக்களங்களும் தொடர்ச்சியாகத் தங்களுடைய ஆக்கிரமிப்பு எண்ணங்களை செயற்படுத்துவதற்கு பல சந்தர்ப்பங்களிலே முயன்றுகொண்டிருக்கின்றனர்.

இதற்கு உதாராணமாக எங்களுடைய வவுனியா மாவட்டத்திலே நெடுங்கேணி பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கச்சல் சம்மளங்குளம் என்கின்ற ஒரு குளம் சீரமைக்கப்பட்டு அந்தக் குளத்தின் கீழ் வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட, குறிப்பாக தென் மாகாணங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

வவுனியா வடக்குப் பிரதேசசபையினுடைய தவிசாளரும் நானும், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அந்தப் பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தோம்.

அங்கு ஒரு பாரிய குளம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கச்சல் சம்மளங்குளம் திருத்தி அமைக்களப்பட்டிருக்கின்றது.

அங்குள்ள விடயம் என்னவெனில், வவுனியா மாவட்டத்தினுடைய மாவட்ட செயலருக்கோ, கமநல சேவைத் திணைக்களத்திற்கோ, அல்லது வனவளத் திணைக்களத்திற்கோ தெரியாமல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்திற்கான நிதி அனுராதபுர மாவட்ட அரச நிர்வாகத்திற்கூடாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அரசாங்கம் நேர்மையாக இந்த வேலைத்திட்டதினை முன்னெடுப்பதாகவிருந்தால், நிச்சயமாக வவுனியாமாவட்ட நிர்வாகத்தினூடாக அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாது, மறைமுகமாக, களவாக வவுனியா மாவட்டத்திலே குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே இந்த வேலைத்திட்டததினை முன்னெடுத்திருந்தனர்.

தவலறியும் உரிமைச்சட்டத்தினூடாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களோடு, நான் தகவல்களைப் பரிமாற்றிககொண்டபோது, இந்த வேலைத்திட்டத்திற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும்இல்லை என அவர்கள்எழுத்துமூலம் தந்திருக்கின்றனர்.

இந்த விடயங்கள் அனைத்தும் எங்களுடைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இர.சம்பந்தனுக்கும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல்கள் அனைத்தையும் நான் வழங்கியிருக்கின்றேன்.

செட்டிகுளத்திலும் இவ்வாறான வேலைத்திட்டங்கள், கீழ் மல்வத்து ஓயா திட்டம் என்கின்ற பெயரில் சில முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பான அனைத்து விடயங்களையும் நாங்கள், எங்களுடைய தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.

இது தொடர்பில் பாராளுமன்றிலும் பேசப்பட்டிருக்கின்றது.

இப்போது கவனத்திற்கு இந்த விடயங்களைக் கொண்டுவந்ததன் காரணமாக, இவ் வேலைத்திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

இருந்தாலும் இவ்வாறான வேலைத்திட்டங்களை, இதய சுத்தியோடு அவர்கள் செயற்படுவார்களாகவிருந்தால் உடனடியாக நிறுத்தவேண்டும்.

மறைமுகமான குடியேற்றங்கள், மற்றும் மறைமுகமான ஆக்கிரமிப்புக்களை அவரகள் தொடர்ந்து செய்வார்களாகவிருந்தால், நிச்சயமாக அதற்குரிய பதில் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடவேண்டிய ஒரு தேவையை அவர்களே ஏற்படுத்திவிடுகின்றனர் என்பதைத்தான் சொல்லக்கூடியதாகவுள்ளது. – என்றார்.

Share the Post

You May Also Like