வீதி புனரமைப்பு குறித்து மட்டு. அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முக்கிய கவனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி புனரமைப்பு திட்டம் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுவின் மீளாய்வுக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் அலிஸாஹீர் மௌலானா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரின் வழிப்படுத்தலில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான அபிவிருத்திக்கு 8,086 திட்டங்களுக்கு 8312 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த திட்டங்களில் 2261 திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதுடன் அதற்காக 3223 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மீளாய்வுக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று கிழக்கு மாகாண சபை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஊடாகவும் மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஊடாகவும்  முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி புனரமைப்பு திட்டம் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பாலம் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட பாலங்களுக்கு நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு நிரந்தர இடமொன்றினைப் பெற்று அதற்கான தீர்வினை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் அது குறித்து பொதுமக்களை அறிவுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சல்லித்தீவில் உல்லாசப் பிரயாணிகளின் பொழுதுபோக்குக்காக அமைக்கப்பட்ட இடங்கள் உரிய முறையில் அமைக்கப்படாத காரணத்தினால் அவற்றினை அங்கிருந்து அகற்றுமாறு நீதிமன்றம் ஊடாக கோரப்பட்டுள்ளதனால் அவற்றினை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது குறித்தும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், குடிநீர், நீர்பாசனம், வனபரிபாலனம், உள்ளூராட்சி மன்றங்கள் உட்பட பல்வேறு மக்கள் பயன்பெறும் நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் அதன் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

இதேபோன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

Share the Post

You May Also Like