ஒட்டக் கூத்தன்  பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

(1)

நக்கீரன்

ட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது பழமொழி. சனாதிபதி சிறிசேனா விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரில்   மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் இழைத்ததாக இனம் காணப்பட்ட  லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை (55)  சனாதிபதி சிறிசேனா இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக ஓகஸ்ட் 19 இல் நியமித்திருந்தார். கையோடு அவர் லெப்.ஜெனரல் ஆகவும் பதவி உயர்த்தப்பட்டார்.  ஓகஸ்ட்  21 இல் அவர் சனாதிபதி சிறிசேனா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

வேலிக்கு ஓணான் சாட்சி சொல்வது போலபோர்க் களத்தில் வல்லமை பொருந்திய தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகப் பதவி வகிப்பதற்கு சகல தகுதியும் உடையவர்.அவரை அந்தப் பதவிக்கு நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின் றேன் என கோத்தபாய இராசபக்ச பாராட்டியிருக்கிறார்.

இந்த நியமனம் தமிழ் மக்கள் மத்தியிலும்  சிறீலங்காயில் மனித உரிமைகள்  அமைப்புக்கள்ஐநாமஉ பேரவை, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் மற்றும் பொறுப்புக்கூறலில் ஆர்வமுள்ள அனைவருக்கும்  அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த  நியமனம்  மூலம் சர்வதேச சமூகத்திற்கு சிறிலங்கா அரசு ஒரு தெளிவான செய்தியை விடுத்துள்ளது. ஐநாமஉ பேரவை நிறைவேற்றிய  30-1, 34 -1  மற்றும் 40-1  தீர்மானங்களை  நடைமுறைப்படுத்துவதில்  ஏற்படும் தோல்விகளின் விளைவுகள் பற்றிச்  சிறீலங்கா கவலைப்படவில்லை என்பதாகும்.

சனாதிபதி சிறிசேனா, சவேந்திர சில்வாவை மட்டுமல்ல மனித உரிமை மீறல்கள்போர்க் குற்றங்கள் மற்றும் ஊழல் குற்றம் சாட்டப்படும் உயர் மட்ட படைத் தளபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி  அழகு பார்த்துள்ளார்.

இந்தப் பதவி உயர்வு  தொடர்பாக ஆகஸ்ட் 5, 2019 அன்று  எல்லோருக்கும் அதிர்ச்சி தரும்  வகையில் சனாதிபதி சிறிசேன ஒரு வர்த்தமானியை வெளியிட்டார்.

எடுத்துக் காட்டாக 2008-2009 ஆண்டில்  கடற்படை உளவுத்துறை அதிகாரிகளால் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இளைஞர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் கடற்படைத் தளபதி  வசந்தா கரன்னகொட என்பவரை சனாதிபதி மைத்ரிபால சிறிசேனா இப்போது கடற்படையின் அட்மிரல்  (Admiral of the Fleet)  பதவிக்கு உயர்த்தியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி கரணகொட  நீதியிலிருந்து தப்பியோடிய ஒருவர்,  அவர் நாட்டைவிட்டு ஒளிந்து ஓடக் கூடும்  என நினைத்து  அவரது கடவுச் சீட்டில்  அவர்  வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்கு  கோட்டை  நீதிபதி  தடை விதித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு கரணகொட உச்சநீதிமன்றத்தில் வெற்றிகரமாக ஒரு மனுவைத்  தாக்கல் செய்து  கொலை மற்றும் சதித்திட்டம் தொடர்பான கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புலனாய்வுப் பொலீசாரால்  கைது செய்யப்படுவதற்கு எதிராகத்  தடை  உத்தரவைப் பெற்றார்.

போர்க்காலத்தில் கரணகொட பாதுகாப்புச்  செயலாளர் கோத்தபாய இராசபக்சவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். எதிர்காலத்தில் கோத்தபாய பதவிக்கு வந்தால் கரணகொட முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படுவார் என நம்பலாம்.

சனாதிபதி  சிறிசேனா வெளியிட்ட அதே வர்த்தமானி அறிவிப்பில் ஏயர் வைஸ் மார்ஷல் றோஷன் குணத்திலகே விமானப்படையின் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்படுவதாக அறிவித்தார். குணத்திலகா என்பவரே போர்க்காலத்தில் சிறீலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்தார்.

இலங்கை விமானப்படை 2006 மிக் -27  விமானங்களைக் கொள்முதல்செய்தது தொடர்பாக குணத்திலக பல தடவைகள்  விசாரிக்கப்பட்டுள்ளார். கோத்தபாய  இராசபக்ச மற்றும் அவரது முதல் மாமன் மகன்  மற்றும் உருசியாவின் முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கே ஆகியோர் உக்ரேனிலிருந்து மிக் 27 விமானங்களை வாங்கியதன் மூலம் 14 மில்லியன் அ.டொலர்களை பணச் சலவை செய்தது மற்றும்  சட்டத்துக்கு முரணாக கையாடியது தொடர்பாக  குற்ற விசாரணையில் உள்ளனர்.

நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (FCID) நடத்திய விசாரணையில் சிறீலங்கா அரசின் நிதி பிரித்தானிய வேர்ஜின் தீவில் (British Virgin Island) அமைந்துள்ள பெல்லிமிசா ஹோல்டிங்ஸ் (Bellimissa Holdings) என்ற கொட்டாங்குச்சி நிறுவனத்துக்கு  (shell company) அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.

போர்க் குற்றங்களில் சிக்கியுள்ள அனைத்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகளிலும் சவீந்திர  சில்வா ஒருவரே மிகவும் பிரபலமானவர். பல வழிகளில் அவர்  போரின் கடைசிக்  கட்டங்களில் சிறீலங்கா ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்கள் மற்றும்  மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்  ஆகியவற்றுக்கு அவர் அடையாளமாக இருந்தார். அவர் பதவி ஏற்றபின் விடுத்த  அறிக்கை நேர்மையான ஆய்வு மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து தனது இராணுவத்தைப் பாதுகாக்க   சிறீலங்கா அரசு, குறிப்பாக சனாதிபதி சிறிசேனா, எந்த அளவிற்கு தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

1995 ஆம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்கொண்ட Operation Riviresa” போர் நடவடிக்கைக்கு சவேந்திர சில்வா தான் தலைமை தாங்கினார். 

ஈழப்போர் 1V  இன் இறுதிக் கட்டத்தில் “வன்னி மனிதநேய நடவடிக்கை” இல் ஈடுபட்ட 58 ஆவது படைப் பிரிவுக்கும் அவரே தலைமை தாங்கினார். இந்தப் படைப்பிரிவு  மீது போர் விதிகளை மீறிப் பல  தாக்குதல்களை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. மருத்துவ மனைகள்பள்ளிக் கூடங்கள்வழிபாட்டுத் தலங்கள் பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகின. அவை முறையான இராணுவ இலக்குகள் என கோத்தபாய இராசபக்ச ஆர்ப்பரித்தார். இந்தக் கண்மூடித் தாக்குதல்களில் பொது மக்கள்  பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.

இந்தப் படுகொலைகளுக்கு  சூத்திரதாரியாக இருந்த  மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றி  இருந்தார்.

பின்னர்  09 சனவரி, 2019  இல்  சவேந்திர சில்வா  இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக  சனாதிபதி சிறிசேனாவால்  நியமிக்கப்பட்டார். போர்க் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது  அமைப்புக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டன.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக வலிந்து காணமல் ஆக்கப்படவர்களுக்கு நீதி கிடைக்கும்அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நோக்கில் நாட்டின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால்இன்று வரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. இன்று வரை நாம் எமது உறவுகளை தேடிக்கொண்டு இருக்கின்றோம்.

மேலே குறிப்பிட்டது போல தற்பொழுது இறுதி யுத்தத்தில்  பாரிய மனித உரிமை மீறல்கள்,  மனித குலத்துக்கு எதிரான போர்க் குற்றசாட்டுகளுக்கு  இலக்கான  இராணுவ அதிகாரி  சவேந்திர சில்வாவிற்கு  சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் பதவி உயர்வு வழங்கியிருக்கிறார்.

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடைந்த  போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58 ஆவது படையணி ஊடாகவே அவர்களை கையளித்திருந்தோம். அப்படிக்  கையளிக்கப்பட்டவர்களே பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இது வேதனைக்குரிய விடயம்.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் எங்கேஅவர்களுக்கு என்ன நடந்ததுஎன்ற கேள்விக்குப்  பதிலளிக்ககூடிய பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக மேஜர் ஜென்ரல் சவேந்திரா சில்வா இருக்கின்றார். இந்நிலையில்,அவர் ஊடாக எங்களுக்கு நீதி கிடைக்குமாஎன்ற கேள்வி எழும்புகின்றது?” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது  அமைப்புக்கள் கேள்விகள் எழுப்பதியுள்ளன.  

சவேந்திர  சில்வாவின்  நியமனம் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  சனவரி 10, 2019 ஆம் நாள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் யுத்த குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஒருவரை இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக  நியமிப்பது என்ற சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் சிறீலங்காயை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது எனத் தெரிவித்திருந்தது.

மேலும் அவ்வறிக்கையில்   குறிப்பிடப்பட்டிருந்ததாவது.

“2009ம் ஆண்டு மருத்துவமனைகள்உணவு பெறுவதற்காக வரிசையில் நின்ற பொதுமக்கள்  மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே  தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி (General Officer Commanding of  58th Division) என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ளவேண்டியவர்” என ஐக்கியநாடுகள் விசாரணைக் குழு தெரிவித்திருந்தது.

சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள், குழந்தைகள் உட்படப் பலர் சுட்டுக்கொல்லப் படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போவதற்கும் பாலியல் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் காரணம் எனவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.

இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்ட சர்வேந்திர சில்வாவின் நியமனம்  அமெரிக்காவால் விமர்சிக்கப்பட்டது.

இந்த நியமனம் சிறீலங்காயின் சர்வதேச நற்பெயர் மற்றும் நீதி மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதுகுறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானது. சிறுபான்மை இன தமிழர்களுக்காக ஒரு சுதந்திர அரசுக்கான தமிழ் ப் புலிகளின் நீண்டகால பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு, 2009 மே மாதம் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் வெற்றியை அறிவித்தது. சிறீலங்கா இராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இருவரும் போர்க்கால முறைகேடுகள் செய்தார்கள் என  குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவித்தது.

ஆனால்  சனாதிபதி சிறிசேனா இராணுவம் எந்தப் போர் மீறல்களையும் செய்யவில்லை என்கிறார். நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவ வீரர்களில் ஒருவரைத் தன்னும் மின்சாரக் கதிரையில் அமரச் செய்ய மாட்டேன் என சனாதிபதி சிறிசேனா சூளுரைக்கிறார். (வளரும்)

Share the Post

You May Also Like