கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு!

இது கடந்த ஞாயிற்றுக்கிழமை – சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் – நடந்த சம்பவம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு உத்தியோக பூர்வ இல்லம். அவரைச் சந்திப் பதற்கு மேல் மாகாண ஆளுநரான முன்னாள் 

கொழும்பு மேயர் முஸ்ஸமில் தமது மகனுடன் சென்றிருந்தார்.

அவர்கள் இருவரையும் ஜனாதிபதியின் இல்ல அலுவலர்கள் முதலில் ஓர் அறைக்கு அழைத்துச் சென்று இருத்தினர். அந்த அறைக்குள் நுழைந்த ஆளுநர் முஸ்ஸமிலுக்கு அதிர்ச்சி.

அங்கு ஒரு முக்கிய அரசியல் வாதி ஏற்கனவே அமர்ந்திருந்தார். அவரும் ஜனாதிபதியைச் சந்திக்க வந்திருந்தவரே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின்பேரில் சென்றிருந்த மூத்த சட்டத்தரணி அவர். அந்த சட்டத்தரணி தமது கையுடன் எடுத்து வந்திருந்த நாட்டின் அர சமைப்புப் புத்தகம், அவருக்கு முன்னால் சோபாவின்டீப்போவில் இருந்தது.

அதையும், அந்த சிரேஷ்ட சட்டத்தரணியையும் பார்த்தும் ஆளுநர் முஸ்ஸமிலுக்கு ஏதோ மனதில் பட்டுவிட்டது போலும். பட்டென்று கேட்டு விட்டார்.

“ஓ! நீங்கள்தானா ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்…? உங்கள்வழிப்படுத்தலில்தானாஜனாதிபதி இந்தக் காய் நகர்த்தல்களை எல்லாம் செய்கின்றார்…? இப்போதுதான் எனக்கு எல்லாம் விளங்குகின்றன…!” – என்று அப்பாவித்தனமாக ”மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்” விதமாக கேள்வி எழுப்பினார் ஆளுநர் முஸ்ஸமில்.

அவரின் பார்வை ‘நீங்கள் தானா, ”தொட்டிலையும் கிள்ளி பிள்ளையையும் ஆட்டுவது..?’ என்று கேட்பது மாதிரி இருந்திருக்கும் போல….

பதறிப் போனார் அந்தப் பிர முகர்.

அவர் வேறு யாருமல்லர், ஜனாதிபதி சட்டத்தரணியும் கூட் டமைப்புப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பிதான் அவர்.

“”ஜனாதிபதி தனியாகச் சந் தித்துப் பேச வேண்டும் என்று அழைத்தார். அதுதான் வந்தேன். சில சமயங்களில் சட்ட ஆலோசனை குறித்து அவர் ஏதும் கேட்கக் கூடும். அதனால்தான் அரசமைப்பின் ஒரு பிரதியையும் கையோடு கொண்டுவந்தேன்.” – என்று விளக்கம் கூற முற்பட் டார் சுமந்திரன்.

இதற்கிடையில், சுமந்திரன் தனித்து அமர வைக்கப்பட்ட அறைக்குள், ஆளுநர் முஸ்ஸமிலையும் மகனையும் அனுமதித்த விடயம் ஜனாதிபதிக்கோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தில் விருந்தினரைக் கையாளும் உயர்மட்ட அதிகாரிகளுக்கோ தெரிந்து விட்டது போலும்.

அறைக்குள் அவசரப்பட்டு வந்த அதிகாரிகள் மெல்ல முஸ்ஸமிலையும் அவரது மகனையும் வேறு ஓர் அறைக்கு விரைந்து மாற்றினர்.

சுமந்திரன் ஏன் ஜனாதிபதியின் இல்லத்துக்குப் போனார், சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் அப்படி என்ன மனம் விட் டுப் பேசினார் என்பதைத் துருவினேன். சில விடயங்கள் விளங்கின. சட்டத்துறையில் சுமந்திரனின் வாதங்கள், ஹல்ஸ்டோர்ப்பில் மெச்சப்படுகின்றன, அரசமைப்புச் சிக்கல்கள் தொடர்பாக சுமந் திரன் எடுத்த நிலைப்பாட்டின்படி தான் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆகவே தமது அரசமைப்பு விவகார சட்ட ஆலோசகராகத் தாம் சுமந்திரனைப் பயன்படுத்தியிருக்கவேண்டும் என்ற கருத்து ஜனாதிபதிக்கு இருப்பதாகத் தெரியவந்தது.

“நாட்டின் தலைவருக்குப் பக்கச் சார்பில்லாத நடுநிலையான, மனதுக்குச் சரி எனப்பட்ட சட்ட ஆலோசனையைப் பின் நிற்காமல் வழங்குவேன்” – என்று சுமந்திரன் ஜனாதிபதிக்கு உறுதிமொழியை வழங்கிவிட்டு வந்தார் என்பதை அறிய முடிந்தது.

அரசியல்வாதி சுமந்திரனாகவும் அவர் ஜனாதிபதியுடன் மனம் திறந்து பேசினார் என அறிய வந்தது. அந்த விடயங்களைப் போட்டுடைப்பது இப்போதைக்குப் பொருத்தமற்றது. விட்டுவிடுகிறேன்.

ஆனால், ஒன்றை ஒனறுமட்டும் கூறிவைக்கலாம்.

அண்மையில் – கடந்த 30 ஆம் திகதி – யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். மாநகரசபை மைதானத்தில் ”’நாட்டுக்காக ஒன்றிணைவோம்!” நிகழ்ச்சித் திட் டத்தில் பங்கு பற்றினார் அல்லவா? அந்த நிகழ்வில் ஜனாதிபதிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆளுநர் சுரேன் ராகவன், பேசுவதற்கான தமது முறை வந்ததும் எழுந்து பேசப் போனார். அப் போது ஜனாதிபதி கண்ணசைத்து சுமந்திரனைத் தமக்குப் பக்கத்தில் வந்து அமரும்படி கோரினார்.

அப்போதுதான் ”உங்களுடன் நான் தனியே பேச வேண் டும்”- என்று சொன்னாராம் ஜனாதிபதி.

“உங்கள் வசதிப்படி சந்திப்போம்!” – என்றார் சுமந்திரன்.

அடுத்ததற்கு அடுத்த நாள் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திப்புக்கு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சந்திப்பும் நடந்தது.

இப்படி ஒரு சந்திப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அழைப்பு விடுத்து, சுமந்திரனிடம் இதே அரசியல் விடயங்கள் பேசியிருப்பாராயின் சில சம யங்களில் இன்று நாட்டின் அரசியல் போக்கு – தலைவிதி – இப்படி இருந்திருக்காமல் தலைகீழாக மாறியிருக்கும்.

பாவம் மைத்திரி. பஸ்ஸைத் தவறவிட்டு விட்டார் என்று மட் டும்தான் சொல்லலாம்.

– நன்றி: மின்னல் – காலைக்கதிரி –

 

Share the Post

You May Also Like