வடமாகாணசபைத் தீர்மானத்தின் அடிப்படையில் 957 சுகாதாரத் தொண்டருக்கு நியமனம் வழங்குக!

ஆளுநரை வலியுறுத்துகின்றார் சி.வி.கே.சிவஞானம்

வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு அமைவாக, 957 பேருக்கு சுகாதார தொண்டர்களுக்கான நியமனம் வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இதற்கான ஆளணி தேவைப்பட்டால், முறைப்படியான கோரல்களின் மூலம் நியமனங்கள் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார தொண்டர்களின் நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையின் பின்னர், வடமாகாண சபையில் இன்று (திங்கட்கிழமை) வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் அமையத்தினருடனான கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார தொண்டர்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, வடமாகாண சபையினால், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, கடந்த 2015 ஆம் ஆண்டு வடமாகாண சுகாதார அமைச்சராக இருந்த பா.சத்தியலிங்கம் வடமாகாணத்தில் உள்ள 820 சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவேண்டுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சபையிலும் பரிசீலிக்கப்பட்டிருந்ததோடு 2018 ஆம் ஆண்டு மாகாண சபையிலும் ஆராயப்பட்டிருந்ததோடு, அதனை அன்றைய ஆளுநருக்கும் தெரிவித்திருந்தோம்.

820 சுகாதார தொண்டர்கள் தொடர்பாகவும், அதன்பின்னர், வைத்தியசாலைகளில், பிரேத பரிசோதனை நிலையங்களில் கடமையாற்ற ஆண் தொழிலாளர்கள் தேவை என்பதன் அடிப்படையில் உள்வாங்கப்பட்ட 127 தொழிலாளர்கள் உட்பட 10 பேர் உட்பட 137 தொழிலாளர்கள் அடங்கலாக 957 ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தோம்.

மக்களினால் தெரிவு செய்யப்பட்ட சபை ஒன்றினால் ஆராய்ந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஆளுநரிடம் கோரவுள்ளோம். அதற்கு மேலே ஏதாவது நியமனங்கள் இருந்தால் அவை முறைப்படியாக கோர வேண்டும்.

அவ்வாறு நியமனங்கள் கோர வேண்டுமாயின், இந்த 957 பேருக்கும் நியமனங்கள் வழங்கிய பின்னர், அவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் 38 உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்ற தயங்குவது, கவலைக்குரிய விடயம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like