விக்கியின் அரசியல் வாழ்வு அஸ்தமிக்கும்?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சருக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு இன்று பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கியமைக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவும் வழங்கப்பட்டு இறுதியான தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு சார்பாக வழங்கப்பட்டிருக்கின்ற அந்த தீர்ப்பு முதலமைச்சருக்கு சார்பாக வந்திருந்தாலும் கூட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது முதலமைச்சருக்கு காலை சுற்றிய பாம்பாக தான் இருக்கப் போகிறது. ஒருவேளை முதலமைச்சர் சரி என நீதிமன்றம் கூறியிருந்தாலும் கூட தீர்ப்பு என்பது தீர்ப்பு தான்.

அந்த தீர்ப்பை கணம்பண்ணாது விட்டமையால் ஒரு இறுதித் தீர்ப்பை அவர் பெற வேண்டிய நிலை இருக்கின்றது. அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது.

எவ்வாறு தற்போது எனக்கு சார்பாக நீதிப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதோ, அதேபோல் நீதிமன்ற அவமதிப்பு நடைபெற்றது என்பதையும் என்னால் ஆணித்தரமாக நிரூபிக்க முடியும்.

முதலமைச்சர் அவர்கள் வயது போன நேரத்தில் சிறைவாசம் செல்ல வேண்டும் அல்லது அவரை தண்டிக்க வேண்டும் அல்லது அவரது அரசியல் பயணத்தை நிறுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.

நீதிமன்ற தீர்ப்பில் ஒரு நாள் கூட அவர் தண்டனை பெறுவாராக இருந்தால் அவரது அரசியலுக்கு அது முற்றுப்புள்ளியாக அமையும்.

இவற்றையெல்லாம் யோசித்து தான் ஒரு தூரநோக்கோடு நான் இறங்கி விட்டுக் கொடுத்து சென்றேன். அந்த நேரத்தில் கூட தான் நினைத்ததை செய்வேன் என்ற அவரது கர்வம் மேலோங்கியிருந்தமையால் நான் இறங்கிச் சென்றதைக் கூட உதாசீனம் செய்திருந்தார்,

ஆகவே இதற்கு மேல் இறங்கிச் செல்ல தயாரில்லை. அவருக்கு நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like