அதிகாரப் பறிப்பை மத்தி விடுத்து மாகாணத்துக்கு கூடுதல் வழங்குக! இப்படி வலியுறுத்துகிறார் மாவை

 ‘ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிலிருந்து வெளியேறியமையால் சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்க வில்லை. அந்த சுதந்திரத்திற்காகவே ‘தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகையினால் தமிழர்களின் உரிமைகள், உரித்துக்கள் வழங்கப்பட்டு ‘சுதந்திரமாக வாழக் கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். ‘

– மேற்கண்டவாறு கோரியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, நாட்டில் தற்போது தேர்தல் வரவிருப்பதால் பலரும் பலதீர்வுகளை முன்வைத்து பொய்களைச் சொல்வார்கள் என்றும், அதனால் நாம் சரியான முடிவெடுத்துச் செயற்பட வேண் டியது அவசியமாக இருக்கின்றதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று, யாழ்ப்பாணம் அச்சுவேலி மத்திய கல்லூரியில் அதிபர் விடுதித் திறப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

கல்வியில் முன்னிலையில் இருந்த நாங்கள் இன்றைக்குப் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கின்றோம். அந்தப் பாதிப்புக்களிலிருந்த விடுபட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கின்றது. அதற்கான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டுவசதி வாய்ப்புக்களும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கமைய சரியானதோர் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, சமச்சீரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக தேசியப் பாட சாலைகளுக்கு கொடுக்கின்ற அத்தனையும் மாகாணப் பாட சாலைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான திட் டங்கள் வகுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட கவனம் செலுத்தப்பட்டு போதுமான வளங்கள் வழங்கப்படவேண்டும். இந்தக் கல்விக்கொள்கை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்குத் தெளிவாகவே கூறிவருகின்றோம்.

குறிப்பாக நாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப் பட்டாலும், அதனை இனப்பிரச் சினைக்கான தீர்வாக ஏற்காத போதும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதும் அவசியம். அதற்கமைய 13 ஆவது திருத்தத்தில் உள்ள மாகாண அதிகாரங்களை மத்தி பறிக்கக்கூடாது. இதனையே புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போது நாங்கள் சொல்லியிருக்கின்றோம். அதேபோன்று ஏனைய மாகாண சிங்கள முதலமைச்சர்கள் கூட அதனையே சொல்லியிருக்கின்றார்கள்.

ஆகவே, மாகாணத்திற்கு அதிகாரங்கள் மேலும் வழங்கப்பட வேண்டுமென்று கோருகின்ற போது, மாகாணத்திற்கு ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை மத்தி பறிப்பதை அனுமதிக்க முடியாது. அண்மையில் மாகாணப் பாடசாலைகளை தேசிய பாட சாலைகளாக மாற்ற எடுக்கப்பட்ட முயற்சி கூட மாகாண அதிகாரத்தை மத்திm பறிப்பது போன்றதே.

நாம் அதிகாரங்களை, உரிமைகளை, உரித்துக்களை கேட்கின்ற போது இருக்கின்றவற்றைப்பறிக்க அனுமதிக்க முடியாது. ஆகவே இருக்கின்றவற்றைப்பறிப்பதை விட்டுவிட்டு, கொடுக்கப்பட வேண் டிய அதிகாரங்கள், உரித்துக்கள், உரிமைகளை கொடுங்கள் என்றே கோருகின்றோம்.

ஆங்கிலேயர் இருந்த காலத் தில் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக நீண்டகாலமாக பலவழிகளிலும் இடம்பெற்ற போராட்டத்தில் சிங்களவர்கள் போராடியமை மட்டுமல்ல, தமிழர்களும் போராடினார்கள். ஆனால் ஆங்கிலேயர் வெளியேறிய பின்னர் அந்த சுதந்திரம் சிங்களவர்களுக்கே கிடைத்தது. அந்தச் சுதந்திரம் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை .

அத்தகைய சுதந்திரத்திற்காகத் தான் தமிழர்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றார்கள். சுதந்திரத்திற்காக மேற்கொள்ளப்படும் அர்ப்பணிப்பான போராட்டத்தில் பல உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. சொத்துக்கள், உடைமைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அனாலும் தமிழர்கள் தொடர்ந்தும் தமது உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் எமது பிரச்சினைக்கான தீர்விற்காகக் கடந்த காலங்களில் இந்த அரசை நாம் ஆதரித்தோம். அதற்காக அமைச்சுக்களைப்பெறவில்லை. அவ்வாறு நாம் ஆதரித்துச்செயற்பட்ட போது ஒரு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை முற்றுப்பெறாத நிலையே காணப்படுகின்றது. ஆகவே அந்த நடவடிக்கைள் முன்னெடுக்கப் பட்டு எமக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

மேலும் நாட்டில் தேர்தல்கள் வரவிருப்பதால் இனி வரும் காலங்கள் மிகப்பாரதூரமானவை.

சர்வதேச ரீதியாகப் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட கோட்டாபய குடும்பம் இப்போது தீர்வைத் தருவதாகச் சொல்கின்றது. தேர்தல் என்பதால் இவ்வாறானபொய்கள் எல்லாம் வெளியில் வரும். ஆனால் தேர்தல் முடிவடைந்த பின்னர் அதற்கு மாறாகவே எல்லாம் நடக்கும். ஆகவே நாம் அவதானமாகச் செயற்பட்டு பொறுமையாக நல்லதோர் முடிவை எடுக்க வேண்டும். – என்றார்.

Share the Post

You May Also Like