செல்வா, பிரபா, கூட்டமைப்பு தமிழரின் பேரம் பேசும் சக்தி!

துண்டங்களாக உடைக்க சிலர் முயற்சி
ஆதங்கப்படுகின்றார் சிறிதரன் எம்.பி.

தமிழர்களின் பேரம் பேசும் சக்தி பல துண்டுகளாக உடைந்தால் தமிழர்களின் இலட்சியப் பயணம் சிதைவடையும் அபாயம் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கோணாவில் வட்டாரத்தின் யூனியன்குளப்பிரதேச மக்களுடனான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வேளையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில் –

நாங்கள் இந்த மண்ணிலே பல ஆண்டுகளாக உரிமை கோரி போராடிக்கொண்டிருக்கிறோம் ஆனால் இன்று வரை எமது இனத்தின் விடுதலை போராட்டமும் விடுதலைத் தாகமும் இன்று வரை உத்வேகத்தில் பயணிப்பதற்கான காரணம் தமிழர்களின் பேரம் பேசுகிற சக்தி ஒரு தரப்பினரிடம் இருந்து வந்துள்ளதனாலேயே ஆரம்பத்தில் தந்தை செல்வா தலைமையில் இயங்கிய கட்சியின் கீழ் அணிதிரண்டிருந்த தமிழர்களின் பலம் அதன் பின்னர்  தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் தமிழர்களின் பேரம் பேசும் சக்தி பலமடங்கு பலத்துடன் அதிகரித்தது.

அவர்களின் போராட்டம் மௌனித்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அந்த பேரம் பேசும் சக்தி இருக்கிறது அந்த பேரம் பேசும் சக்தியை பல துண்டுகளாக உடைத்து தமிழர்களின் ஒற்றுமையையும் விடுதலை உணர்வுகளையும் மழுங்கடித்து எமதுஇளைஞர்களை தங்கள் இனம் பற்றிய சிந்தனைகளை சிந்திக்க விடாமல் வேறு விதமான சிந்தனைகளுடன் பயணிக்க வைக்க இந்த மண்ணிலே ஒரு சில சக்திகளினால் கனகச்சிதமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. – என்றார்.

இந்தச் சந்திப்பில் யூனியன் குள பிரதேச மக்களின் குறைகளை கேட்டறிந்ததோடு பிரதேச விளையாட்டு மைதானத்தினையும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.  பாராளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பிரதேச சபையின் உறுப்பினர், கிராம சேவையாளர், கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

Share the Post

You May Also Like