எந்தவொரு சிங்கள தலைவரையும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராயில்லை – சீ.யோகேஸ்வரன்

எந்தவொரு சிங்கள தலைவரையும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராயில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘2015ஆம் ஆண்டு புதிய ஜனாதிபதி ஒருவரை கொண்டுவருவதில் தமிழ் மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உறுதியாக இருந்தார்கள்.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான உறுதியான தீர்வினை வழங்காது தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தினை மௌனிக்க செய்த மகிந்த ராஜபக்ஸவினை வீட்டுக்கு அனுப்புவதில் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்தோம்.

தமிழ் மக்களின் பூரண ஒத்துழைப்புடன் இந்த நாட்டில் அட்டூழியங்களை செய்த ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினோம். புதிய ஜனாதிபதியை கொண்டுவந்தோம். அதன் பின்னர் புதிய அரசாங்கம் கொண்டுவரப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையினை வென்றெடுப்பதற்காக பல பேச்சுவார்த்தைகளை ராஜபக்ஸ அரசாங்கத்துடன் மேற்கொண்டது. எல்லாம் ஏமாற்றுவித்தையாகவே இருந்தது.

அதனைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதன் அடிப்படையில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும் திட்டங்கள் ஊடாக நிதிகளை வழங்கினாலும் எங்களது அபிலாசைகளை தீர்ப்பதில் முன்பு இருந்த அரசாங்கம் போல்தான் செயற்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் எங்களுக்கு தீர்வினை விரைவாக தருவதாக கூறினார்கள். அதற்கு முன்னோடியாக புதிய அரசியலமைப்பினை கொண்டுவந்தார்கள். ஆனால் தமிழர்களை ஏமாற்றுவதில் நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என்பதை ரணில் விக்ரமசிங்க அரசாங்கமும் நிரூபித்துள்ளது.

மகிந்தவாக இருக்கலாம், மைத்திரியாக இருக்கலாம், ரணிலாக இருக்கலாம் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதில் இருட்டடிப்பு செய்கின்றார்கள்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கும் என மக்கள் எங்களிடம் கேட்கின்றனர். நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை.

ரணில் விக்ரமசிங்கவும் எங்களை ஏமாற்றியவர் தான், மகிந்த ராஜபக்ஸவும் எங்களை ஏமாற்றியவர் தான், மைத்திரிபால சிறிசேனவும் எங்களை ஏமாற்றியவர்தான்.

சஜித் பிரேமதாச எங்களுக்கு உத்தரவாதங்களை வழங்கினாலும் அதனை எவ்வாறு கையாள்வார் என்பதை நாங்கள் சிந்தித்தே முடிவுகளை எடுக்கவேண்டும். அவரும் எங்களை ஏமாற்றமாட்டார் என்று எங்களால் கூறமுடியாது.

நாங்கள் ஏமாந்த சமூகமாக இருக்கின்றோம். அதற்காக நாங்கள் ஓடி ஒழியமாட்டோம். நாங்கள் எங்கள் கொள்கையில் இருந்துமாறமாட்டோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like