வீதிப்பால பணிகளை துரிதப்படுத்துக! ஆளுநருக்கு சிறிதரன் எம்.பி. கடிதம்

முறிகண்டி – அக்கராயன் வீதிப்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடமாகாண ஆளுநருக்கு கடிதமொன்றினை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டில் நாடு பூராகவும் செயற்படுத்தப்படும் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட முறிகண்டி- அக்கராயன் பிரதான வீதியில் புதிதாக ஒரு பாலத்தை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இவ்வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வீதிப்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தக் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

வீதிப் பாலம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டில் நாடு பூராகவும் செயற்படுத்தப்படும் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் வீதி அபிவிருத்திக் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட முறிகண்டி – அக்கராயன் பிரதான வீதியில் புதிதாக ஒரு பாலத்தை நீர்மாணிக்கும் வேலைத்திட்டம் இவ்வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த வீதியினுாடாக அக்கராயன் (KN’S), ஸ்கந்தபுரம் (KN4), கண்ண கைபுரம் (KN3), ஆனைவிழுந்தான் (KN/2), பல்லவராயன்கட்டு (KN72), ஜெயபுரம் வடக்கு (K.N/69), ஜெயபுரம் தெற்கு (KN70), கிராஞ்சி (KN/75), பொன்னாவெளி (KN/76), கரியாலை நாகபடுவான் (KN/71), முழங்காவில் (KN73) ஆகிய 12 கிராம் அலுவலர் பிரிவுகளையும், 33 உப கிராமங்களையும் உள்ளடக்கிய 6026 குடும்பங்களைச் சேர்ந்த 20786 டேர் நாளாந்தம்  போக்குவரத்தில் ஈடுபடுகிறார்கள். 

இப்பாலத்தின் நீர்மாணிப்பு பணிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியீட்டம் தொடர்பில் எதுவித விபரங்களும் வெளிப்படுத்தப்படாத நிலையில், தென்னிலங்கையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் இவ் வேலைகளை முன்னெடுப்பதற்குரிய மூலப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதைக் காரணம் காட்டி இவ் வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது, 

மீள்குடியேற்றம் நடைபெற்று 10 ஆண்டுகளைக் கடந்தும் மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பயன்பாட்டிலுள்ள வீதிப் புனரமைப்பு வேலைகள் கூட முன்னெடுக்கப்படாது தொடர்ச்சியாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள், 

பால நிர்மாணப் பணிகள் காரணமாக ஊர் எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் என்னால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இருபது இலட்சம் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட தார் வீதி கூட மக்கள் பாவளைக்கு உதவாத வகையில் சேதமாக்கப்பட்டுள்ளது. 

இந்த மாவட்டத்தில் அதிகூடிய மக்கள் செறிந்து வாழும் கிராமங்களுக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாக உள்ள முறிகண்டி – அக்கராயன் வீதியில் அமையப்பெறவுள்ள இப்பாலத்தின் நிர்மாணிப்பு பணிகள் துரிதகதியில் முடிவுறுத்தப்படாத பட்சத்தில் எதிர்வரும் மாதங்களில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இவ்வீதியை முழுமையாக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் ‘ 

அதேவேளை, குறித்த பாலத்தைக் கடந்து வீதியால் பயணம் செய்ய முடியாத நிலையை விளக்கி கிளி/அக்கராயன் மகாவித்தியாலய மாணவர்களால் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2019.09.09 ஆம் கோரிக்கைக் கடிதப்பிரதியையும் தங்களின் பார்வைக்கும், நடவடிக்கைக்குமாக இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கிறேன்.

எனவே தாங்கள் இவ்விடயம் தொடர்பில் அதீத அக்கறை எடுத்து மேற்படி பால வேலைகளை துரிதகதியில் முடிவுறுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.  – என்றுள்ளது.

Share the Post

You May Also Like