யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தற்காலத்தில் முக்கியமானது – ஸ்ரீநேசன்

யார் வெற்றி பெறுகின்றார்கள் என்பது முக்கியமல்ல. யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தோற்கடிக்க வேண்டியவரை நாங்கள் தோற்கடித்துதான் ஆக வேண்டும் எனவும் மக்கள் ஆணைக்கு ஏற்றவாறே செயற்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பகுதியில் கம்பிரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஜனாதிபதி எமது கட்சியின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அவரின் போக்கு ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

இலங்கையில் இருக்கின்ற தலைவர்களை ஒப்பிடுகின்றபோது எவரும் உயர்ந்த நிலையில் இல்லாத போதிலும் உள்ளவற்றில் எங்களுக்கு ஓரளவு நல்லது செய்யக்கூடியவர் யார்? எந்தக்கட்சி செய்கின்றது என்பதை அடையாளம் கண்டு அதற்கு நாம் ஆதரவு வழங்கலாமே தவிர அது நிரந்தரமான உதவியாக இருக்க முடியாது.

நாங்கள் இந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கவில்லை. மோசமான ஒரு ஆட்சி ஏற்படுவதை தடுப்பதற்காக மக்களுக்கு சுதந்திரமான சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்காக இந்த ஆதரவினை கொடுக்கின்றோம்.

இதனைவிட சிறப்பான ஒரு ஆட்சியை மற்றவர்கள் தருவார்கள் என்று சொன்னால் நாங்கள் வழங்கும் ஆதரவினை விலக்கிக் கொள்கின்றோம். அதன் பின்னர் கடத்தல் நடந்தால், காணாமல்ஆக்கப்படுதல் நடந்தால், பழிவாங்கல் நடந்தால் நாங்கள் பொறுப்புக்கூற முடியாது.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான மணி அடித்துவிட்டது. தற்போது இரண்டு வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளார்கள். ஒருவர் கோட்டபாய ராஜபக்ஷ. இரண்டாமவர் அநுரகுமார திசாநாயக்க. ஐக்கிய தேசியக் கட்சியில் கேள்விக்குறி நிலவுகின்றது. இந்த மூன்று வேட்பாளர்களையும் மதிப்பீடு செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.

கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு  நாங்கள் வாக்களிக்கலாமா என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இவர் எங்களுக்கு என்ன தீர்வை தரப்போகின்றார்? கடந்த காலத்தில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அவருக்கு நாங்கள் வாக்களிக்கலாம் எனச் சொன்னால் அதில் வடிகட்டிய சுயநல வாதத்தையும் முட்டாள் தனத்தையும் தவிர வேறெதுவும் இருக்க முடியாது.

1990ஆம் ஆண்டிற்குப் பிறகு யுத்த காலத்தில் இங்கிருந்து மறைந்து இந்தியா சென்று எந்த இழப்புமின்றி திரும்பிவந்த வரதராஜப்பெருமாள் இப்போது புதியதொரு அரசியல் கடையைத் திறந்திருக்கின்றார். கோட்டாவிற்கு ஆதரவளிக்குமாறு சொல்கிறார். டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றோரும் சொல்கின்றனர். இன்னும் பலர் சொல்ல இருப்பார்கள். கோட்டாவிற்கு வாக்களிக்குமாறு நாங்கள் சொன்னால் கூட தமிழ் மக்கள் அதை ஏற்க மாட்டீர்கள். நாங்கள் சொல்லவும் மாட்டோம்.

மக்களுக்கு மாறாக நாங்கள் முடிவெடுக்க முடியாது. மக்கள் சொல்லும் காத்திரமான, புத்திசாலித்தனமான முடிவுகள் எதிர்காலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தாத முடிவுகளாக இருக்கின்ற போது அந்த முடிவுகளுக்கு நாங்கள் செல்ல வேண்டிய நிலைமையேற்படுகின்றது” என்று தெரிவித்தார்.

Share the Post

You May Also Like