ஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்!

நக்கீரன்

( “நீதித்தராசில் கூட்டமைப்பு” என்ற தலைப்பில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்  தனது இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரைக்கு ஒரு மறுப்பு!)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றொரு கூட்டம் நாயாய் பேயாய் புலம்பிக்  கொண்டு திரிகிறது. அதில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களும் சேர்ந்திருக்கிறார். அவரது கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமாகவும் சின்னத்தனமாகவும் இருக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை   வைத்து ததேகூ இன் செல்வாக்கை எடைபோட முடியாது. ததேகூ  இடம் வேட்பு மனுகேட்டு அது மறுக்கப்படும் போது ஏனைய கட்சிகளில் சேர்ந்து போட்டியிட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். மேலும் உள்ளூராட்சி தேர்தலில்  ஊரவன், ‘நம்ம ஆள்’, சொந்தக்காரன்ஈ நண்பன்  எனப்  பல காரணங்களுக்காக வாக்குப் போடுபவர்கள்  இருகிறார்கள்.

இருந்தும் 2018 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ததேகூ க்கு  336,867 வாக்குகள் விழுந்துளன.   ததேகூ இல் போட்டியிட்ட வேட்பாளர்களில் 417 உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்பட்டார்கள்.   மொத்தம்  உள்ள உள்ளூராட்சி சபைகளில் (340)  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 44 சபைகளைக் கைப்பற்றியது. யாழ்ப்பாணம் மாநகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை,  திருகோணமலை நகர சபை, சாவகச்சேரி நகர சபை,  . வல்வெட்டித்துறை போன்ற முக்கிய நகரங்களின் ஆட்சியை ததேகூ ஆட்சி கைப்பற்றியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் வடக்கிலும் கிழக்கிலும் பல பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேறியுள்ளன. நிறைவேறி வருகின்றன.  எமது மக்களது அடிப்படை உரிமைகளுக்குப்  போராடும் அதேவேளை மக்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த பல வழிகளிலும்  பாடுபட்டு  வருகிறது. தமிழ்மக்களது உரிமைப் போராட்டம் பொருளாதார மேம்பாடு  இரண்டையும்  ததேகூ  சமாந்தரமாகப் பார்க்கிறது. சமாந்திரமாக கவனம் செலுத்துகிறது.

(1) மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் மயிலட்டி மீன்பிடித்துறைமுகம்  40 கோடி ரூபா செலவில் 2 கட்டங்களாக நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. இதில் முதல் கட்டம்  15 ஓகஸ்ட், 2019 அன்று  நிறைவடைந்து மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்  மொத்த முதலீடு உரூபா 395 மில்லியன்  முதல் கட்ட வேலைக்கு  சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளை 22 ஓகஸ்ட், 2018 ஆம் ஆண்டு சனாதிபதி  மயித்திரிபால சிறிசேன தலைமையில்  தொடங்கப்பட்டது.

(2) பருத்தித்துறை மீன்பிடித்  துறைமுகம்

பருத்தித்துறை மீன்பிடித்  துறைமுகம் சனாதிபதி சிறிசேனா கடந்த 30 ஓகஸ்ட், 2019 இல் தொடக்கி வைக்கப்பட்டது. ”மைத்திரி ஆட்சி – நிலையான நாடு” மற்றும் ”பேண் தகு மீன்பிடி கைத்தொழிற் துறையின் ஊடாக மீன்பிடித் துறையில் தெற்காசிய வலயத்தில் முன்னோடியாகத் திகழ்தல்” எனும் எதிர்கால நோக்கிற்கமைய வடக்கு மீன்பிடித் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த மீன்பிடித் துறைமுகம் இலங்கையில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட மிக விசாலமான மீன்பிடித் துறைமுகமாகும். இதற்காக 12,600 மில்லியன் உரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலகிலுள்ள நவீன ரக மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பாக பயன்படுத்தல், பிடிக்கப்படும் மீன்களைக் கரை சேர்த்தல், எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், படகுகளை பழுதுபார்த்தல், பனிக்கட்டி மற்றும் குளிர்சாதன வசதிகள், படகுகளுக்கான இயந்திரங்களைப் பெற்றுக் கொள்ளல், மீன் விற்பனை, வலை தயாரிப்பு, கடைத்தொகுதி, கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான வசதிகள், கரையோரப் பாதுகாப்பு சேவைகள், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளின் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்த மீன்பிடித் துறைமுகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

(3) காங்கேசன்துறைத் துறைமுகம்

காங்கேசன்துறைத் துறைமுகம் அ.டொலர் 45.27 மில்லியன் (உருபா 792 கோடி) செலவில்  மேம்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்குத் தேவையான நிதியை இந்தியா கொடுத்து உதவும். இது ஒரு மூன்றாண்டு கால மேம்பாட்டுத் திட்டமாகும்.  இதற்குத் தேவையான 15 ஏக்கர் நிலம் காங்கேசன்துறையைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து  பெறப்படும். இதன்  அடுத்த கட்ட மேம்பாட்டில் 50 ஏக்கராக விரிவாக்கப்படும். காங்கேசன்துறை  ஒரு வாணிகத்  துறைமுகமாக கட்டியெழுப்பப்படும்.  இதனால் தென்னிந்தியா –  இலங்கைக்கு இடையான வாணிகளம்  அதிகரிக்கும். தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இந்துமாக் கடலில்  ஒரு வாசலாக அமையும்.

கொழும்புத் துறைமுகம் காரணமாகக் கொழும்பு நகரும், கட்டுநாயக்க விமான நிலையம் காரணமாக கம்பாஹா மாவட்டமும் பொருளாதாரத்தில் முன்னேறியதைப் போலவே இந்த இணைப்பு நடவடிக்கைகள் வடக்குக்குக்குப் பெரிய  கொடையாக  இருக்கும்.

(4) பலாலி விமான நிலையம்

பலாலி விமான நிலையம் மூன்று கட்டங்களின் கீழ்  மேம்பாடு செய்யப்படவுள்ளது. முதற்கட்ட பணிகளுக்காக சுமார் உரூபா 2.25 பில்லியன் (உருபா2250 மில்லியன்) செலவிடப்படும். இதில் இலங்கை அரசாங்கத்தின் பங்காக  1950 மில்லியன் உரூபாவும் இந்திய நிதியுதவியின் ஊடாக உரூபா 300 மில்லியன்  எனப் பங்கிடப்படும்.  பல ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்த பலாலி விமான நிலையம் எதிர்வரும் செப்தெம்பர்  தொடக்கம் பிரதேச பறப்புகளுக்கும் ஒக்தோபர் முதல் நாள் தொடக்கம்  பன்னாட்டு பறப்புகளுக்கும் திறந்துவிடப்பட இருக்கிறது. இந்த விமான நிலையத்தை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகள்  கடந்த யூலை மாதம் தொடங்கப்பட்டன. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ச்சுன இரணதுங்க அதனைத் தொடக்கி வைத்தார்.

(5) கிளிநொச்சி  பொது மருத்துவமனை

கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய சநல்வாழ்வு அமைச்சர் இராஜித சேனாரத்ன மேற்கொண்ட முயற்சி காரணமாக  உரூபா 4,474 மில்லியன்  செலவில் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையின் கட்டடம் இரண்டின் பணிகளுக்கான அடிக்கல்  பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களால்  வைபவ ரீதியாக 15  பெப்ரவரி, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில் 1974 மில்லியன் நெதர்லாந்து அரசின் நிதி உதவியாகவும், மிகுதி 2500 மில்லியன் இலங்கை அரசின் பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

(6) வட மாகாண மருத்துவ மனைகள்

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களின் மருத்துவ சேவைக்கென, நெதர்லாந்து நாட்டிலிருந்து 60மில்லியன் ஜூரோக்கள், அதாவது இலங்கை ரூபாயில் 12,000 மில்லியன் உரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

(6)  இராமேஸ்வரம் –   மன்னார் இடையிலான பயணிகள் படகுச் சேவை

இராமேஸ்வரம்  – மன்னார் இடையிலான பயணிகள் படகுச் சேவை விரைவில் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் வட இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான வாணிகம் அதிகரிப்பதோடு தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழும் ஒரு இலட்சம் தமிழ்மக்கள் நாடு திரும்ப வசதியாக இருக்கும். அண்மையில்  இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் இராமேஸ்வரம் –  மன்னார் இடையிலான பயணிகள் படகுச் சேவை மீளத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

(7)  ‘கம்பெரலிய’

 ‘கம்பெரலிய’ என்ற கிராமிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மே 2019 வரை வடக்குக்கு Rs.37, 565.20மில்லியன் உருபா ஒதுக்கப்பட்டுள்ளது.

  • பின்தங்கிய மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு  வீதிகள், குளங்கள், அணைக்கட்டுகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றின் சீரமைப்புக்கு  மேலதிகமாக உரூபா 3,402 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
  •  போரினால் தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உருபா 10 பில்லியன் அரச நிதியுதவியுடன் 10,000 கல் வீடுகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இந்த 10,000 வீடுகளில் 4,750 வீடுகள் சனவரியில் தொடங்கப்பட்டு இப்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் அரைவாசியிருந்தால் நேர்மறையில் சிந்திப்பவன் பாத்திரத்தில் பாதி நிரம்பியிருக்கிறது என்பான். எதிர்மறையில் சிந்திப்பவன் பாத்திரத்தில் பாதி வெறுமையாக இருக்கிறான் என்பான். எதுவும் பார்வையில் இருக்கிறது. கம்பவாரிதி ஜெயராஜ் எதிர்மறையில் சிந்திக்கிறார்.

2015 ஆம் ஆண்டுத் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட சிறிசேனாவை ததேகூ வெற்றிவாகை சூடவைத்தது. தமிழ்மக்களுடைய வாக்குகளே சனாதிபதி தேர்தலின் முடிவைத் தீர்மானித்தது. மகிந்த இராசபக்சவின் சர்வாதிகார ஆட்சியை, அவரது குடும்ப ஆட்சியை  முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டில் சனநாயகத்துக்கான இடைவெளி அதிகரித்துள்ளது. மகிந்தா ஆட்சியில் 25 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் 23 பேர் தமிழர்கள்.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஊ டகவியலாளர்கள் யாரும் சுட்டுக் கொல்லப்படவில்லை. யாரும் கடத்தப்படவில்லை. வெள்ளைவான் கலாசாரம் இல்லை. கிறீஸ் பூதங்கள் இல்லை. மக்கள் அச்சமின்றித் தங்கள் எதிர்ப்பைக் காட்ட முடிகிறது.

மே 18, 2009 இல் சரணடைந்த நூற்றுக்கும் அதிகமானவி.புலித் தலைவர்கள், போராளிகள், பொதுமக்கள்  சகட்டு மேனிக்குச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  அது தொடர்பான போர்க் குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் பற்றி ஒரு கலப்பு விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  தீர்மானம் 30-1 கேட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறீலங்கா அரசு காலத்தைக் கடத்தலாம். ஆனால் அது அந்த நாட்டின் தலைக்கு மேல்  தொங்கிக் கொண்டிருக்கும் வாள் போல  எந்தக் கணமும் தலையில் விழலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ததேகூ தமிழ்மக்களது சிக்கலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பேசுபொருளாக மாற்றியுள்ளது. மேற்குலக நாடுகளையும் இந்தியாவையும் தமிழ்மக்கள் பக்கம் வைத்துள்ளது.  இவையெல்லாம் சம்பந்தன் ஐயாவின் தலைமையில் செயற்படும் ததேகூ இன் சாதனைகள் ஆகும்.

ததேகூ  கம்பவாரிதி ஜெயராஜ் போன்றோரது விமர்சனங்களை வரவேற்கிறது. ஆனால் அந்த விமரிசனங்கள் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் இருக்க வேண்டும். அதாவது ஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் அழகாகும்.

 

Share the Post

You May Also Like