தேர்தல் திருவிழா! கொண்டாட்டமா? திண்டாட்டமா?.

தேர்தல் வருகிறது. வேட்பாளர்களின் வீதியுலா,ஊர் உலா, வீட்டு முற்ற தரிசனம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கப்போகிறது. அலங்கரிக்கப்பட்ட  வீதிகள், புதிய புதிய கட்சி அலுவலகங்கள், ஊர்திகள் என்று கண் படும் இடமெல்லாம் கலர்புல்லாகக் காட்சி கொடுக்க, கூப்பிய கையோடு வாயெல்லாம் பல்லாக வேட்பாளர் காட்சி தந்து முற்று முழுவதும் இலவசமாகவும் கணக்கு வழக்கு இல்லாமலும் வாக்குறுதிகளை மழையாகப் பொழிவார்கள். இதற்கென்றே கடைவிரிக்கக் காத்திருக்கும் ஊடகங்களுக்கு இதைவிட நல்ல காலம் இருக்க முடியாது. மக்களின் மனத்தைக் கலக்கித் துவைத்துப் பிழிந்து குழப்பி ஒரு கை பார்த்து விடுவார்கள்.  வேட்பாளரின் உரைகளை அக்குவேறு ஆணி வேறாக அலசுவதிலும் சிலர் தமக்கான தேவை கருதி  தேவையானபடி வேட்பாளரின் உரைகளில் இருந்து ஒரு பகுதியை மட்டுமோ ஒரு வசனத்தையோ அன்றி ஒரு சொல்லக்கூட எடுத்து வைத்துக்கொண்டு இலக்கண இலக்கியக் காவியங்கள் படைப்பார்கள். திரை மறைவில் திரவியங்கள் தண்ணி வெண்ணி யெல்லாம் தாராளமாகப் பரிமாறப்படும்.  மக்கள்தான் பாவம்.  திகைப்புற்றும் பேதலித்தும் குழப்பமுற்றும் வெறுப்புற்றும் வெறிகொண்டும் மயக்கமுற்றும் அவஸ்த்தைப்படப் போகிறார்கள். அதனால் அந்த மக்களுக்காக சில விடயங்களைச் சொல்லி உதவலாம் என்று நினைக்கிறேன்.
எந்தவொரு வேட்பாளரோ கட்சியோ எடுத்து வீசும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற  சட்டமோ கட்டுப்பாடோ யாருக்கும் கிடையாது. நிறைவேற்றா விட்டால் அவர்களை எவ்விதத்திலும் தண்டிக்க முடியாது. எழுத்தில் வடித்துக் கொடுத்தால் என்ன வாயால் கனவான் ஒப்பந்தமாகக் கொடுத்தால் என்ன அவை காற்றில் பறக்கலாம். அதைத் தடுக்க நாட்டிலோ அன்றி உலகத்திலோ எந்த  வழியும் இல்லவே இல்லை. தேர்தல் முடிவு வந்ததும் அவரவர் தத்தம் சொந்த வழியில்தான் பயணிப்பர். நீதி, நியாயம், அறம், சரி, பிழை எதற்கும் முன்னுரிமை கிடையாது. சுய நலன்களும் கட்சிநலன்களும் அடுத்த தேர்தலில் வெல்லும் வழிகளும் மட்டுமே முன்னுரிமை பெறும். இவையெல்லாவற்றிற்கும் முன்னுரிமை கொடுத்து அதற்கப்புறம் தான்  மக்கள் நலன், நாட்டுநலன் என்று ஏதாவது செய்வார்கள். அந்த மக்கள் நலன் நாட்டு நலன் என்று வரும்போதுதான் வெவ்வேறு கட்சிகள் தலைவர்கள் வெவேறு அளவில் வெவ்வேறு விதமாகச் செயற்படு வார்கள். அதனால் வேட்பாளரின் பேச்சுக்களை வாக்குறுதிகளை எள்ளளவும் உள்வாங்காமல் இப்போதே குப்பையில் வீசிவிட்டு எந்தத் தலைவர் எந்தக் கட்சி தமிழருக்கும் நாட்டுக்கும் ஒப்பீட்டளவில் நன்மை செய்ய வாய்ப்பு அதிகம் என்பதை தேர்தல் காலத்திற்கு முன்பிருந்த அவர்களின் இயற்கையான மனோபாவம், செயற்பாடு, விடயங்களைச் சாதிக்கும் வல்லமை,மற்றும் அவர்களுக்கு வரக்கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் அழுத்தங்களை சவால்களை  அவர்கள் எவ்விதம் கையாண்டு நமக்கும் நாட்டுக்கும் நன்மைகளைச் செய்ய வாய்ப்பு இருக்கும் என்பவற்றை எமது அரசியல் அறிவாலும் அனுபவத்தாலும் தெளிந்து அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். தவிர யாருடைய தேர்தல்கால வாக்குறுதிகளைப் பற்றியெல்லாம் யோசித்து எம்மை நாமே வருத்தக் கூடாது. உண்மையில் தேர்தல் விடயம் அவ்வளவு இலகுவானது. புன்சிரிப்போடு சிந்திப்போம்,அதைச் சந்திப்போம்.
ஜனாதிபதித் தேர்தல் 
ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக்கொள்வோம். மகிந்த அணி, ரணில் அணி இரண்டைத் தவிர மைத்திரி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியோரும் வேறு சிலரும் கூட வேட்பாளரை நிறுத்த வாய்ப்புகள் உண்டு. மக்கள் விடுதலை முன்னணிக்கும் கூட்டம் சேர்ந்துள்ளது. அதனால் 51 % வாக்குகள் எந்தத் தரப்புக்கும் கிடையாமலும் போகலாம். இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணவேண்டி வரலாம். மைத்திரி என்ன முடிவு எடுத்தாலும் சந்திரிகா தலையிட்டாலும் சுதந்திரக் கட்சிக் கூடாரம் காலியாகி அந்த அணியில் இருப்போரில் பலர் மகிந்தவுக்கும் சிலர் ரணில் தரப்புக்கும் ஆதரவு வழங்குவதைத் தடுக்கவே முடியாது. எனவே மைத்திரி அணி பற்றி நாம் அலட்டிக்கொள்ளத்  தேவையில்லை. மக்கள் விடுதலை முன்னணியும் வெற்றிபெறும் வாய்ப்பு இல்லாதபடியால் அவர்களின் கூட்டத்திற்குப் போகிறவர்களும் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே தமிழ் மக்களாகிய எமது வாக்கு ரணில் தரப்புக்கா மகிந்த தரப்புக்கா?. என்பதற்கே நாம் விடை காண வேண்டும். யாரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதை விடவும் யாரை ஜனாதிபதியாக வர விடக்கூடாது என்பதே எம்முன் உள்ள பெரும் சவாலாகும். தமக்குக் கிடைக்காத வாக்குகளை எப்படியும் தமது எதிர் தரப்புக்கு போகாமல் தடுப்பதற்காகவே எதிர் தரப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக சிறு சிறு வேட்பாளரையும் போட்டியில் இறக்கும் தந்திரங்களை நாம் தெளிவாக விளங்கிக்கொண்டு; சும்மா கொள்கை கோட்பாடு என்று குழம்பி வெற்றி வாய்ப்பு இல்லாத வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் நமக்கு வேண்டாத இராட்ஷதர்கள் முடிசூட வழிவகுக்கக் கூடாது. வெற்றிவாய்ப்பு இல்லாத வேட்பாளரை முற்றாக மறந்துவிட வேண்டும்.
எமது தேவை அரசியற் தீர்வும் அபிவிருத்தியும் தான். இரண்டுக்குமே சமமான முன்னுருமைதான். இரண்டுக்குமே நாம் போராடும்போது  ஒரேகாலத்தில்  இரண்டும் கிடைத்தாலும் அல்லது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒன்றுதான் கிடைத்தாலும் அல்லது இரண்டிலும் பகுதியாகக் கிடைத்தாலும்  கிடைப்பதை நாம் தவற விடக்கூடாது. கிடைப்பதைப்  பெற்றுக்கொள்ளும் அதேநேரம் கிடைக்க வேண்டியதற்குத் தொடர்ந்து போராட வேண்டும். வாழ்க்கையே போராட்டம்தான் என்பதை மறக்கக் கூடாது.
 
மகிந்த அணி :-
மகிந்தவின் 10 வருட  ஆட்சி ஈழத்தமிழரின் இருண்ட  காலம். அதில் கோத்தபாயவின் வகிபாகமே முதன்மையானது. குறிப்பாக 2009ம் ஆண்டை  ஈழத்தமிழர் எத்தனை யென்மம் எடுத்தாலும் மறக்கவே மாட்டார்கள். கோத்தபாயாவுக்கும் கூலிக்கு வெடி கொளுத்தும் அளவிற்கு வறுமையில் வாடும் தமிழர் இன்றும் கணிசமாக இருக்கிறார்கள். கூலி கொடுத்து அந்தக் கூலியாளரின் இரத்தத்தை உறிஞ்சிப் பிழைப்பவர்களிடம் இன்னும் சில தலைமுறைக்கு நிதிபலம் இருக்கத்தான் செய்யும்.  அதே கோத்தாவையே ஜனாதிபதியாக்க இந்த அணியினர் முடிவெடுக்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படியான ஆட்சியை முன்னெடுக்க இருக்கிறார்கள் என்று தெரியாத சிறுபிள்ளையும் இருக்குமா?. இந்த நயவஞ்சக நரிகள், பிணம் தின்னிப்  பறவைகளுக்கு போர்தான் வேண்டும், குழப்பங்கள்தான் வேண்டும், அமைதியற்ற கொதிநிலைதான் வேண்டும். வெளிநாட்டில் ஈழம் என்றும் புலிக்கொடி என்றும் தேசியம் சுயநிர்ணயம் என்றும் வெறுமனே போலிப் புலிவேடம் போட்டு, கூத்தாடி முரசுகொட்டும் ஒரு கூட்டம்தான் மகிந்த கோத்தா அணியின் சத்துணவு. இந்த அணியினர்தான் உள்நாட்டில் கிறிஸ்பூதம், குள்ள மனிதன், ஆவாகுழு, பாதாளக் குழு என்று பலதையும் உருவாக்கி நாட்டில் அமைதி இருக்காமல் பார்த்துக் கொள்கின்றார்கள். தொழிற் சங்கங்களை தம்வசப்படுத்தி தேவையற்ற வேலைநிறுத்தங்கள் மூலம் ஆட்சியாளருக்கு தொல்லை கொடுப்பதற்காக நாட்டையும் மக்களையும் கசக்கிப் பிளிகிறார்கள்.  எப்படியாவது சிங்கள தமிழ்  இருதரப்பிலுமே  வெவ்வேறு அணியைச் சேர்ந்த குழுக்களை வைத்துக் கொண்டு அவர்கள் மூலம்  அனைத்து மத மொழித்  தீவிரவாதங்களையும் உருவாக்கி வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அவைதான் மகிந்த அணியினரின் போசாக்கு.
இவர்கள் தமிழர் மட்டுமல்ல முஸ்லிம்கள் மட்டுமல்ல தம்மை எதிர்க்கும் சிங்களவருக்கும் வானுலக வரம் கொடுக்கத் தயங்கவே மாட்டார்கள். ஜே ஆர், பிரேமதாச, சந்திரிகா, ரணில் போன்றோரால் போரில் ஈடுபட்டிருந்த இருபகுதியினரின் மிகப் பாரிய இழப்புகளையும், நாட்டின் பேரழிவையும் கருத்திற் கொண்டதாலும் எங்கோ ஒரு மூலையில் அவர்களின் உள்மனதில் உறங்கிக்கிகொண்டிருக்கும் சொற்ப மனிதாபிமானத்தாலும் அவர்களால் போரைமுடிக்க முடியாதிருந்தது. ஆனால் உலகமே வெட்கி நாணித் தலை குனியுமாறு மனித மனத்தால் நினைக்க முடியாத கொடுமைகள் ஊடாக பேரழிவுகள் ஊடாக  போரை முடித்து வைத்து; தான் உயிர் உள்ளவரை அரசாளக் கூடியதாக சட்டங்களை உருவாக்கி, நீதி சட்டம் ஜனநாயகம் மனிதாபிமானம் அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்து அரசாண்டவர்கள்தான் இந்த மகிந்த கோத்தா அணி. ஆம்,தமிழர் பிரச்சனைக்கு தீர்வு தருவார்கள். தீர்வு என்ன?. இலங்கையில் தமிழர் 16 வீதமானால் இலங்கையின்  எப்பகுதியிலும் தமிழர் 16 வீதத்துக்குமேல் இருக்காதவாறு பார்த்துக் கொள்வதே அவர்கள் தரவிருக்கும் தீர்வு. பெயரளவில் இல்லாவிட்டாலும் நடைமுறையில் ஒரு  கொடூரமான சர்வாதிகார இராணுவ ஆட்சியே நடைபெறும்.
காணிகளைப் படிப்படியாக விடுவித்துக் கொண்டிருந்த இராணுவம் அண்மையில் நடந்த மகிந்தவின் அரசியற் புரட்சியை அடுத்து அதை முற்றாக நிறுத்தியதையும் வடக்கில் நூற்றுக்கணக்கான சிங்களச் சிற்றூழியர்கள் திடீரென நியமிக்கப்பட்டதையும் சற்று ஓய்ந்திருந்த புதைபொருள் திணைக்களம் வனவளத் திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவை மீண்டும் முழுஅளவில் சிங்களக் குடியேற்றங்களையும் பவுத்த மயமாக்கலையும் மூர்க்கமாகத் திரும்பவும் தொடங்கியதையும் நாம் அவதானித்தோமா?. மகிந்த தரப்பின் ஆட்சி வந்தால் என்ன நடக்கும் என்பதை அவர்களின் 52 நாள் ஆட்சி ஓரளவு வெளிப்படுத்தியது. 52 நாட்களின் பின் மஹிந்தவிடம் இருந்து அரச அதிகாரத்தை  மீளப்பெற்ற பின்பும் அவர்கள் ஆரம்பித்தவற்றை தடுத்து நிறுத்த; காணிகளை தொடர்ந்து விடுவிக்க பெரும்பாடு படவேண்டியுள்ளது. காணி விடுவிப்பு  இப்போது ஆகஸ்ட் மாதம்தான் வலிவடக்கிலும் கிளிநொச்சியிலும் திரும்ப ஆரம்பித்துள்ளனர். எனவே இந்த அணியினர் மீண்டும் அரசைக் கைப்பற்றினால் என்ன நடக்கும் என்று தெளிவதற்கு வேட்பாளரின் பேச்சுக்களையும் வாக்குறுதிகளையும் கேட்டுத்தான் அறிய வேண்டுமா?. கோத்தாதான் வெல்லப் போகிறார், அதனால் அவருக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே நமக்கு ஏதாவது கிடைக்கும் இல்லாவிட்டால் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவோம் என்று பயமுறுத்துகிறார்கள். மகிந்த முதல்முறையாக 2005ல் அரச தலைவராக வந்ததே தமிழரால்த்தானே. வந்து என்ன செய்தார் என்று மறந்தா போனோம். அரசியலில் அப்படி எதுவும் இல்லவேயில்லை. நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. நாம் ஒரே அணியாக பலமாக இருந்தால் எமது உதவி அவர்களுக்கு தேவை என்றால் அதற்காக ஆகக்  குறைந்த பட்ஷமாகவேனும்  எதையாவது தருவார்கள், செய்வார்கள். அதுதான் அரசியல். எமது பலத்தின் மூலம் சந்தர்ப்பத்திற் கேற்ப காய்களை நகர்த்த வேண்டும்.
இதே அணியினர் இப்போது புலிகளைப் புகழவும் பிரபாகரன் 2005ல் மகிந்தவுக்கு ஆதரவாகவும் ரணிலுக்கு எதிராகவும் செயற்பட்டார் என்பதாகவும் பேசுகின்றார்கள். தமிழ் மக்களின் நன்மைக்காக அறவே சிந்திக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சின்னாபின்னப் படுத்தி தமது ரிமோட் தலைமையை நிலைநாட்டுவதையே குறியாகக் கொண்டு செயற்படும் ஒருசில வெளிநாட்டுத் தமிழ்ப் பினாமிகளும் தமது உள்ளூர் முகவர்களோடு சேர்ந்து மகிந்த அணியினருக்கு மீண்டும் முடி சூட்டவே படாத பாடு படுகின்றார்கள். கோத்தா அணியினருடன் திரை மறைவில் கைகோர்த்துச் செயற்படுகின்றார்கள். வரவு செலவு வைத்துள்ளார்கள். ஒவ்வொரு தாயகத் தமிழ் வாக்காளனும் இவற்றை மிகத் தெளிவாக உணர்ந்து செயற்பட வேண்டும். ஏற்கெனவே மகிந்த தரப்பினர் மைத்திரியின் கையை முறுக்கிப் பிடித்தபடி அவர்மூலம், அவரது பாதுகாப்பு அமைச்சு மூலம் தமது ஆட்டங்களை ஆரம்பித்து விட்டனர். சவேந்திர சில்வாவை தளபதியாக்கி முன்போல் சட்டத்திற்கு, பழி  பாவங்களுக்குப் பயப்படாத இராணுவத்தை, இராணுவப் புலனாய்வுத் துறையை  விரிவாக்கி, ஒரு சர்வாதிகார இராணுவ ஆட்சியை, குடும்ப முடியாட்சியை  அமைக்கும் செயற்பாடு முடுக்கி விடப்பட்டுள்ளது. கோத்தாவின்  ஓய்வுபெற்ற அனைத்து பழைய இராணுவத்தினரையும் அவரது தேர்தல் பிரச்சாரப் படையாக மாற்றி பிரச்சாரத்தை முன்னெடுக் கிறார்கள். அவர்கள் ஆட்சியைப் பிடித்தால் நாடு மீண்டும் 2009 ஐ விட மோசமான இருண்ட பாதாளத்தில் விழும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ரணில் அணி:-
விடுதலைப் போராட்டத் தரப்போடு போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டுவந்து ஒரு இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த ஒப்பந்தம் செய்து அதை நடைமுறைப்படுத்த அனைத்தையும் ரணில் செய்தார். JVP யினரின் அழுத்தத்தால் அவரது ஆட்சியை சந்திரிக்கா கவிழ்த்திருக்காவிடில் இலங்கையும் ஈழத் தமிழரும் இன்று வேறு விதமான நாட்டில் வாழ்ந்திருப்பார்கள். சீனாவுக்கு அடமானமாக, யாருமே வாயே திறக்க முடியாத நிலையில் சிறைப்பட்ட நரக வாழ்வில் இருந்த  இலங்கை மக்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவியோடு மீட்டெடுத்து மக்கள் ஓரளவாவது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைத்தது  ரணிலும் அவரது கட்சியும் தான். 19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனநாயகத்தை முடியுமானவரை இலங்கையில் நிலை நாட்டியுள்ளனர். சுயாதீனமான தேர்தல் ஆணையம், சுயாதீனமான நீதிநிர்வாகம், சுயாதீனமான பொலீஸ் சட்ட நிர்வாகம், சுயாதீனமான அரச சேவைகள் நிர்வாகம், உண்மைகளை வெளிக்கொணரும் உரிமை, ஊடக சுதந்திரம், தனிமனித சுதந்திரம் என்று இவற்றையெல்லாம் அந்தத் திருத்தச் சட்டம்தான் கொடுத்துள்ளது. ஜனாதிபதியும் மகிந்த தரப்பும் பலமுறை பல வழிகளிலும் முயற்சித்தும் எதுவுமே செய்ய முடியாதவாறு  அவர்களைக் கட்டிப்போட்டுள்ளது இந்தச் சட்டத் திருத்தம்தான். அதில் இன்னும் செய்ய வேண்டியவை பல இருந்தாலும் இந்த அளவிற்காவது கொண்டுவந்து இலங்கை மக்களை ஓரளவாவது இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவந்தது ரணிலின் கட்சிதான்.
சிறுபான்மையினரின் பிரச்சினைக்கான தீர்வுக்காகக் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தை   திருத்தமின்றி  முழுமையாக ஏற்ற ஒரேயொரு கட்சி ரணிலின் கட்சிதான். அது நடைமுறைப் படுத்தப் பட்டால்  தமது சர்வாதிகார அடக்குமுறை ஆட்சியை என்றுமே மீண்டும் கொண்டுவர  முடியாதென்பதை உணர்ந்த மகிந்த தரப்பு அதிகுள்ளத்தனமான சூட்சிகளால் மைத்திரியையும் அவரது கட்சிக்காரரையும் ஏமாற்றி அந்தப் புதிய அரசியற் திட்டத்தை  முறியடித்து விட்டது. ஆனாலும் கடந்த 40 வருடங்களாக முற்றாகப்  புறக்கணிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு அபிவிருத்திகள் ரணிலின்  அரசினால் மிகப் பெருமளவில் முன்னெடுக்கப்படுகின்றன. ரணில் மீதும் அவரது கட்சி மீதும் விமர்சனங்கள் இருக்கலாம். அவர் நினைத்ததைச் செயற்படுத்த முடியாதவர், கட்சிக் கட்டுப்பாட்டை நிலை நிறுத்த முடியாதவர், முடியாதவிடத்து எவரையும் ஏமாற்றுபவர், உறுதியான தலைவர் அல்ல என்றெல்லாம் சொல்லப் படலாம். ஆனாலும் அவர் இலங்கையில் இனங்களுக்கிடையிலான பிரச்சனையை நியாயமான முறையில் தீர்த்தால்தான் நாட்டை  அபிவிருத்தி செய்து முன்னேற்ற முடியும் என்று நம்பிச் செயற்படுபவர். அவர் ஒரு சிங்களவர், சிங்கள மக்களின் ஜனநாயக வாக்குகளால் தான் அதிகாரத்தில் இருக்க முடியும் என்பதை நாம் மறக்கக் கூடாது. நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது எஞ்சியிருக்கும் நிலத்தையாவது பறிகொடுக்காமல் பாதுகாத்துக்கொண்டு எம்மை நாமே பொருளாதாரத்திலும் கல்வி சுகாதாரத்திலும் வலுப்படுத்துவதே. அதை பெரும்பாலும் ரணிலின் அரசாங்கத்தில் செய்ய முடிந்துள்ளது, இனியும் செய்யலாம்.
ரணில் தேவதூதனோ இரட்ஷகரோ மற்றோரு காந்தியோ அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். அவரது தரப்பை வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதை விட மகிந்த தரப்பை வராமல் தடுக்க ரணில் தரப்பைக் கொண்டுவருவதைத் தவிர தமிழருக்கு வேறு ஆயுதம் இலங்கையிலோ உலகத்திலோ இல்லவேயில்லை. அவரையும் அவரது கட்சியையும் விடச் சிறந்த தலைவரும் கட்சியும் இல்லாதவரை கோத்தபாய என்ற கொடிய அரக்கனை அகற்ற ரணிலின் கட்சியைத் தவிர எமக்கு மாற்று வழியில்லை. வேறு எந்தக் கட்சியை ஆதரித்தாலும் அது ரணில் தரப்பைத் தோற்கடித்து மறைமுகமாக கோத்தாவின் வெற்றியைத்தான் உறுதிசெய்யும்.
எனவே ஈழத்து தமிழ் மக்களே உங்கள் அமைதியான வாழ்வைக் கலக்கி தமது தேவைக்காக உங்களை பந்தாடும் போலி வாக்குறுதிகளில், பிரச்சாரங்களில் திண்டாடி உங்கள் கவனத்தையும் நேரத்தையும் செலவிட்டுக் குழம்பி ஏமாந்து வேதனைப்படாமல் தேர்தலன்று மட்டும் உங்கள் பெறுமதிமிக்க வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்தி  கிடைக்கும் பயனை அனுபவித்து நல்வாழ்வு வாழ்வோம்.
V.Vin. Mahalingam
Share the Post

You May Also Like