காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்டுங்கள் – செல்வம் சவால்

ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக்  காட்டினால், நாங்களும் அதற்கான பதிலைக் கொடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சவால் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து, தேரரின் சடலத்தை அடக்கம் செய்த ஞானசார தேரரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த (சனிக்கிழமை) யாழ்.நகரில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எம்மைப் பொறுத்தமட்டில் காவி உடை புனிதமானது. காவி உடையை கழற்றிவிட்டு ஞானசார தேரர் சண்டித்தனத்தைக் காட்ட வேண்டும்.

எமது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் காவி உடை அணிவது புனிதமானது. ஒரு சில பௌத்த மதகுருமார் காவி உடை அணிந்து தமிழ் இனத்தை மிக மோசமாக நடத்த எத்தனித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், தமிழ் மக்கள் அனைவரும் அநாதரவாக நிற்பார்கள் என சிங்கள பௌத்த பிக்குகள் எண்ணுவது போல் உள்ளது.

அகிம்சை போராட்டம் என்பது தமிழ் மக்கள் இலங்கைக்கு சொல்லித்தந்த வரலாறு அல்ல. ஆயுதப் போராட்டத்தின் மூலம் எமது மக்கள் தென்னிலங்கையை வாய் திறக்காதவண்ணம் வைத்திருந்தார்கள்” என மேலும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like