சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்தவர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இல்லை – க.துரைராஜசிங்கம்

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்தவர்கள் வெற்றிபெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கடந்த (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சிறுபான்மை சமூகத்தினை பொறுத்தவரையில் ஓரு வேட்பாளரை நிறுத்துவது என்பது உகந்தவிடயம் அல்ல.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய விடயங்கள் எழுத்துமூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இணக்கப்பாடு ஏற்படும் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.

எது எவ்வாறாக இருந்தாலும் வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் குறிப்பாக தமிழ் பேசும் மக்களைப் பொருத்தவரையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏதோவொரு விதத்தில் விரும்பியோ விரும்பாமலே ஈடுபட்டே ஆக வேண்டும்.

எமது கட்சியைப் பொருத்தவரையில் நாங்கள் எல்லாத் தேர்தல்களிலும் வலியுறுத்துகின்ற எமது இனப்பிரச்சனைக்கு தீர்வு என்கின்ற விடயம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது கோரிக்கையாக இருக்கும்.

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் எவ்வாறு இருக்கின்றது என்பது குறித்து கூடுதல் அக்கறை கொள்வோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like