ஜனாதிபதி தேர்தல் – யாழ்.பல்கலை மாணவர்களின் முயற்சியில் முன்னேற்றம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை ஒரே குரலில் வெளிப்படுத்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் இந்த முயற்சியின் மூன்றாவது சந்திப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பங்குபற்றிய 6 கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வரும் ஏது நிலைகள் தோன்றியிருப்பதாக கட்சிப்பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பொது இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் அவர்களின் பின்புலத்தில் இயங்கும் வல்லரசுகளிடமும் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது இணக்கப்பாட்டில் ஒப்பமிடும் வகையில் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் கூடி உடன்படிக்கையில் ஒப்பமிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில்வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், வலி வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோ.சுகிர்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க.அருந்தவபாலன், புளொட் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ இயக்கத்தின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் மூத்த சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தமிழர் தரப்பு கோரிக்கைகளுக்கு பிரதான வேட்பாளர்கள் இணங்கிவருவார்கள் என்ற நிலை தோன்றினாலொழிய தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி சார்பில் சந்திப்பில் கலந்துகொண்ட சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான நிலைப்பாடொன்றை மெற்கொள்ளும் நோக்கில் கடந்த வாரம் முதல் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like