தேர்தல் புறக்கணிப்பு அரசியல் தற்கொலைக்குச் சமமானது!

நக்கீரன்

ஐப்பசி மாத வளர்பிறை முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் கந்தசஷ்டி விரதம் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டித்து வருகிறார்கள்.

முருகன் – சூரன் இடையிலான போரில் சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொள்வான். முதலில் யானைமுகன் எனும் உருவம் கொண்ட அசுரன் வலமிடமாக முருகனைச் சுற்றி வருவான். முருகன்  அவன் நெற்றியில் குத்தி வீழ்த்துவார்.  சூரன் தனது தலை துண்டிக்கப்பட்டதும் வேறு தலையுடன் தோன்றிக் கொண்டே இருப்பான். அவற்றை முருகன்  வெட்டி வீழ்த்திக் கொண்டிருப்பார். சூரன்,  சிங்கமுகாசுரன் உருவத்தில்  வந்து போராடுவான். முருகன் சிங்கமுகனையும் வேலால் குத்தி வீழ்த்துவார்.

படையினரையும், படைக் கலங்களையும்   இழந்து விட்ட சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிந்து வாழ்ந்தான்.  கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று நடுக்கடலுக்கடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை  நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சம்காரம் செய்தார் என்பது கதை.

‘சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார்’ என்ற சொற்றொடர் வழக்கில் இருக்கிறது.  சங்கரன் மகனாகிய  முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கொன்றார்  என்பது இதன் உட்பொருள்.

இந்தக் கட்டுரையின் தலைப்புக்கும் கந்தபுராணத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்பது காதில் விழுகிறது. தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

2015 ஓகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் அதன் பின்னரும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மாற்றுத் தலைமை வேண்டும் என விரதம் இருந்து வருவது தெரிந்ததே.

இந்தக் கூட்டத்தின் பரமார்த்த குரு மு. திருநாவுக்கரசு.  சீடர்கள் நிலாந்தன், யதீந்திரா, கருணாகரன் போன்ற பத்தி எழுத்தாளர்கள்.

தலைமை என்பது மக்களிடையே இருந்து வரவேண்டும். அது அங்காடியில் வாங்கும் பொருள் அல்ல. தமிழர்களது வரலாற்றில் காலத்தின் தேவைக்கு ஒப்ப தலைமை தொடர்ச்சியாக  இருந்து வருகிறது. எடுத்துக் காட்டாக தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம், சம்பந்தன்  போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் மக்களது ஆதரவோடு தலைமைக்கு வந்தவர்கள்.

இந்தக் கூட்டம் தலைமையை மாற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தைச்  சொல்ல மறுக்கிறது.  வெறுமனே  சம்பந்தன், சேனாதிராசா, சுமந்திரன் போன்றவர்களை மாற்ற வேண்டும்  என்கிறது. சரி மாற்றிவிட்டு யாரைத் தலைமைப் பதவியில் அமர்த்த வேண்டும் எனச் சொல்கிறது? யார் அந்தப் பிரமுகர்?

இந்தக் கூட்டம் சாட்சாத் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களைத்தான்  தமிழ்மக்களின் தலைவராக முடிசூட்ட மெத்தவும்  பாடுபடுகிறது.  இன்று நேற்றல்ல, 2015 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னரும் அதன் பின்னரும் மாற்றுத் தலைமையை உருவாக்குவதற்கு அல்லும் பகலும் அனுவரதமும் பாடுபட்டு வருகிறார்கள். ஆனால் மக்கள் புத்திசாலிகள். மாற்றுத் தலைமை வேண்டும் என்ற கூட்டத்தை தேர்தலில் எழுந்து நிற்க முடியாதவாறு  தோற்கடித்தார்கள்.

விக்னேஸ்வரன் ஓய்வு பெற்ற நீதியரசர், சட்டம் படித்தவர், கொழும்பில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ்ப் பற்றும் இனப்பற்றும் உள்ளவர். எல்லாவற்றுக்கும் மேலாக மண்ணாசை, பொன்னாசை இரண்டையும் துறந்த ஆன்மீகவாதி. இவற்றைக் கணக்கில் வைத்துத்தான் சம்பந்தன் ஐயா விக்னேஸ்வரனை விடாப்பிடியாக இருந்து அரசியலுக்கு இழுத்து வந்தவர். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் வட மாகாணசபைக்கு நடந்த தேர்தலில்  முதலமைச்சராக்கி அழகு பார்த்தவர்.

ஆனால் விக்னேஸ்வரன் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தார். ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தார். வட மாகாணத்தை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்குப் பதில் சில்லறை விடயங்களில் கவனம்  செலுத்தினார். நாட்டின் பிரதமர் மற்றும் சனாதிபதி இருவரோடும் சண்டை பிடித்தார். ஆளுநர்களோடு முரண்பட்டார். தனது அமைச்சர்களை தான் நினைத்தபடி பந்தாடினார். தனக்கு சேவகம் செய்யக் காத்திருந்தவர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்தார்.  ஒரு அமைச்சரை முதலமைச்சர் சட்டப்படி  நீக்க முடியாது. ஆனால் நீக்குமாறு ஆளுநருக்கு யோசனை சொல்லலாம். இந்த அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாத விக்னேஸ்வரன் ஓர் அமைச்சரை தடாலடியாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அப்படிச் செய்தது சட்டப்படி செல்லாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதனை நடைமுறைப் படுத்த விக்னேஸ்வரன் மறுத்துவிட்டார். அதன் விளைவாக இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்குப்பட்டு  நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.

இன்றுள்ள தலைமை இந்தியாவின் கைத்தடியாக நடந்து கொள்கிறது, மேற்கு நாடுகளின் கைப்பாவையாக நடக்கிறது, சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுக்கிறது என்பன இந்தக் கூட்டம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள். இது பூகோள அரசியல் தெரியாதவர்களது பிதற்றல் ஆகும்.

நிற்க. எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் ஒரு தமிழரைப் பொது வேட்பாளராக நிறுத்தலாமா என்ற யோசனையை ஆராய தமிழ் மக்கள் பேரவை ஒரு சுயாதீனக் குழுவை நியமித்தது. உண்மையில் தமிழ் மக்கள் பேரவை ஒரு சுயாதீனமான அமைப்பு அல்ல. அது முதலமைச்சர் விக்னேஸ்வனின் பினாமி அமைப்பாகும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் சமயத் தலைவர்கள், அறிவுப்பிழைப்பாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், புலமைசார் வல்லுநர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட சுயாதீனக்குழு தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணியில் ஈடுபட்டது.

இந்த சுயாதீனக் குழு ‘சுயாதீனமாகக்’ காணப்படவில்லை. சில மதத்தலைவர்கள், அறிவுப் பிழைப்பாளர்கள் நீங்கலாக   ஏதோ ஒரு  கட்சியின் நிகழ்சி நிரலின் கீழ்  இயங்குபவர்களாகக்  காணப்பட்டார்கள்.மேற்படி சுயாதீன குழுவில் கலாநிதி கு.குருபரன், நிலாந்தன், ஜோதிலிங்கம், கே.ரி. கணேசலிங்கம் இடம் பிடித்திருந்தார்கள். இவர்கள் ததேகூ க்கு எதிராகப் பேசியும்  கடுமையாக எழுதியும்  வருபவர்கள்.

முதலில் ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் இந்தக் குழுவைச் சந்திக்க மறுத்துவிட்டார். பின்னர் சந்தித்த போது “நாங்களும் யோசிக்கிறோம் நீங்களும் யோசியுங்கள்” எனச் சொல்லி அனுப்பிவிட்டார்.

எதிர்பார்த்தது போலவே ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக வடக்கு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தச் சுயாதீனக் குழுவை நியமித்ததுவே விக்னேஸ்வரன் இணைத் தலைவராக இருக்கும் தமிழ் மக்கள் பேரவைதான்!

இந்தப் தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேடியலைந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள். தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் அவர்கள் ததேகூ வெட்டிவிட வேண்டும் என்பதே அவர்களது உள்நோக்கமாக இருந்தது.

அதில் சம்பந்தப்பட்ட பத்தி எழுத்தாளர்கள் எல்லோருமே ததேகூ கடுமையாக விமர்ச்சிப்பவர்கள். கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் போன்றோரை ஆதரிப்பவர்கள். ததேகூ எதிராக ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்க வேண்டும் என்று நாயாய் பேயாய் அலைபவர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால்  இந்தச் சுயாதீனக் குழுவில் யாருமே தமிழ்மக்களை நேரடியாகப் பிரதிநித்துவப் படுத்துபவர்கள் இல்லை. ஒரு பிரதேச சபை உறுப்பினர் பதவிக்குக் கூட போட்டியிட்டவர்கள் அல்லர். போட்டியிட்டு வென்றவர்களும் அல்லர்.

இந்தச் சுயாதீனக் குழுபற்றி காழ்ப்புடன் நான் எழுதுவதாக சிலர் எண்ணிக்கூடும்  காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் – பேரளவு ஓரு நடுநிலையாள ஊடகவியலாளர். அவர் “அரைவேக்காட்டு  ” என்று மகிடமிட்டு எழுதிய ஆசிரியர் பார்வை  கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. படித்துப் பாருங்கள்.

கழுதையின் வேலையைக் கழுதையும், நாயின் வேலையை நாயும் பார்க்க வேண்டும் என்பார்கள்.

கழுதையின் வேலையை நாய் செய்ய முடியாது. நாயின் வேலையைக் கழுதை செய்ய முடியாது. மாறிச்செய்தால் என்ன நடக்கும் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான்.

நமது அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை சில சுவாமிமார்களும் மற்றும் அதிகம் படித்த கல்விமான்களும், ஊடக ஜாம்பவான்களும் ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அதுவும், நீண்ட காலம் ஆராய்ந்து, பல தரப்புகளுடனும், பல சுற்றுக்கள் விரிவாகக் கலந்து பேசி, முடிவெடுக்க வேண்டிய விடயத்தை ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்ற பாணியில் – ‘சுடுகுது மடியைப் பிடி‘ என்ற அவசரப் போக் கில் – அவர்கள் செய்ய முற்பட்டிருக்கின்றமை ஏதோ விபரீதத்துக்கான முன்னாயத்தம் போல படுகின்றது.

‘மலையைக் கெல்லி எலியைப் பிடித்த மாதிரி’, இரண்டு மாதங்களாக ஆரவாரம் பண்ணி, ஆர்ப்பாட்டமாக ஏற்பாடுகள் செய்து, இலட்சம் பேர் திரளுவர் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளை எல்லாம் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு, கடைசியில் ஆக இரண்டாயிரத்து ஐந்நூறு பேரை ‘எழுக தமிழின்’ பெயரால் திரட்டியமை மறந்துவிடக் கூடிய பழைய விடயம் அல்ல. அண்மையில் நடந்ததுதான்.

அவ்வளவு ஆயத்தத்தோடு முன்னெடுத்த விடயமே பெரும் பின்னடைவைக் கண்டமைக்கான காரணங்களை நாம் தேடி வல்வந்தமாகக் கூறவேண்டியிருக்கின்றது.

இந்தச் சீத்துவத்தில் நமது அரசியல் கட்சிகளை விட்டு விட்டு சில சுவாமிமாரும், கல்விமான்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், ஊடக ஜாம்பவான்கள் என்று தம்மைத்தாமே கூறிக் கொள்வோரும் இணைந்து, ஓரிரு நாள் நடத்திய அவசர அவசரக் கூட்டங்களின் தொடராக, வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக ஒருவரைக்களம் இறக்கப் போகிறார்கள் எனக் கூறி, காரிய மாற்றுகின்றனர் என்ற தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இன்ஸ்டன்ற் காப்பி’ போல ‘இன்ஸ்டன்ற் வேட்பாளர்’ – அதுவும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தின் ஒட்டு மொத்த நிலைமையையும் பிரதிபலிக்கும் வேட்பாளர் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு வேலையை அவசர கதியில் செய்கின்றமை மிக அபத்தமான நடவடிக்கையாகும்.

தமிழர் தரப்பின் அரசியல் தலைமைகள் தென்னிலங்கைத் தரப்புகளுடன் இன்னும் உரையாடிக் கொண்டுதான் இருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியினதும் பொதுஜனபெரமுனவினதும் முடிவை அவை இன்னும் எதிர்பார்த்திருக்கின்றன.

இரு தரப்புகளுடனான பேச்சு முயற்சிகளை – இணக்க எத்தனங்களை – தமிழர் தரப்புகள் இன்னும் அடித்து மூடிவிடவில்லை.

அது மட்டுமல்லாமல். சரியோ,பிழையோ, தமிழர் தாயகத்தில், உரிய முறையில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல்கள் , உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான மக்கள் பிரதிநிதிகள் இன்னும் உள்ளனர்.

அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, சமூகத்தில் ஒரு சிலர் தங்களுக்குள் சேர்ந்து – சமூகத்தில் அவர்களைப் போல தகுதியும், திறமையும், உரிமையும் இருக்கும் பலரையும் புறமொதுக்கிவிட்டு – தம்பாட்டில் முழு இனத்தின் பெயரிலும் காரியமாற்ற முற்படுவது ஒரு வகையில் அத்து மீறிய அடாவடித்தனமாகும்.

நம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து இனத்தின் எழுச்சியை ஒற்றுமைப்பட்டதாகக் காண்பிக்க முயல்வது என்பது வேறு விடயம்.

அதை விடுத்து, சமூகத்தில் ஒரு சிலர் – அதுவும் மக்கள் பிரதிநிதிகளாகத் தங்களைத் தாங்களே முன்னிறுத்தியபடி, இப்படி இனத்தின் தலையயழுத்தை தம்மிஷ்டப்படி எழுத முற்படுபவர்கள் போல, தான்தோன்றித்தமாக நடப்பது, கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

நேற்றுமுன்தினம் சம்பந்தனையும் (சுமந்திரனைப் புறந்தள்ளி), கஜேந்திரகுமாரையும் சந்தித்தோம். நேற்று விக்னேஸ்வரனையும் சுரேஷ் பிறேமச்சந்திரனையும் ஐங்கரநேசனையும் சந்தித்தோம். ஆகவே நாளைக்குத் தமிழர் சார்பில் ஒருவரை நாமே தெரிவு செய்து தமிழர்களின் ஏக வேட்பாளர் என அறிவிக்கும் தகுதி எங்களுக்கு வந்துவிட்டது என அவர்கள் கருதுவார்களாயின் அது அரைவேக்காட்டுத் தனமன்றி வேறில்லை.

அவசரகதியில் அரசியல் நடத்தும் இத்தகைய அநாம தேயங்களின் எத்தனம் விபரீத விளைவுகளை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி. (நமது பார்வை – காலைக்கதிர் 05-10-2019)

 

இப்போது  வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டு விட்டது.

பிரதான சிங்களக் கட்சிகள் தமிழர்களுடன் எழுத்து மூலமான உடன்பாட்டுக்கு வராவிட்டால், இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் முற்றிலுமாக பகிஷ்கரிப் பதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவருமே, தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகள் எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகக் குறைந்தது, அது தொடர்பில் பேசுவதற்குக் கூட அவர்கள் எவருமே தயராக இல்லை. இந்தப் பின் புலத்தில் நோக்கினால், இரண்டு பிரதான வேட்பாளர்களுமே தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகவே கருதுகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் வேறு வழியின்றித் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்னும் மேலாதிக்க மனோபாவமே அவர்களிடம் காணப்படுகின்றது. இவ்வாறான சூழலில் தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவுகள் என்ன? 2009 இற்கு பின்னர் இடம்பெற்ற இரண்டு ஜனாதிபதி தேர்தல்களின் போதும்,தென்னிலங்கையின் அதிகார போட்டிகளுக்காகவும், அந்த அதிகார போட்டியில் தங்களது நலன்களை முதலீடு செய்திருந்த வெளிநாட்டு சக்திகளின் நலன்களுக்காகவும் தமிழ் மக்களின் வாக்குகள் பயன்படுத்தப்பட்டன.

குறிப்பாக 2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது, தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானகரமான பங்கை வகித்திருந்தன. ஆனாலும சிங்கள – பெளத்த மேலாதிக்க மனோ நிலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. தமிழர் தாயகப் பகுதியான வட – கிழக்கில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களும் பெளத்த மயமாக்கலும் அப்படியே தொடர்கின்றன.

இப்படி யார் சொல்கிறார்கள்?

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இதுதொடர்பில் முன்னணி அரசியல் கருத்துருவாக்கிகளான நாம், 30.09.2019 அன்று, விரிவாக ஆராய்ந்திருந்தோம். இந்தச் சந்திப்பில், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், ஆ.யதீந்திரா, சி.அ.யோதிலிங்கம், கலாநிதிகே.ரி.கணேசலிங்கம், பத்தி எழுத்தாளர் பொ.கருணாகரன், பத்தி எழுத்தாளர் கே.யோதிநாதன் (அக்கரையூரான்) ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இவர்களில் நிலாந்தன், கலாநிதி கணேசலிங்கம் சுயாதீனக் குழுவிலும் இடம் பிடித்திருந்தார்கள். அதாவது சூரனைப் போல நேரத்துக்கு ஏற்ப முகமூடிகளை மாற்றிக் கொண்டு திரிகிறார்கள்.

சனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கிற  முடிவு  தவறானது. ஒரு ஜனநாயக முறைமை உள்ள நாட்டில் தேர்தல்களைப் புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும்.

கடந்த காலங்களில் தேர்தல்களைப் புறக்கணித்த போது அது பாரதூருமர்ன பின்விளைவுகளை உண்டாக்கியது.

1931 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட டொனமூர் அரசியலமைப்பில் போதிய சுயாட்சி வழங்கப்படாததைக் கண்டித்து யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் யாழ்ப்பாணமெங்கும் தீவிரப் பரப்புரையை மேற்கொண்டது. அதே ஆண்டு நடந்த அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தலைப் புறக்கணிக்குமாறு இளைஞர் காங்கிரஸ்  வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோளை ஏற்று மக்கள் அந்தத் தேர்தலைப் புறக்கணித்தார்கள்.  யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை ஆகிய 4 தொகுதிகளிலும் போட்டியிட எவரும் முன்வராததால் யாழ் மாவட்டத் தேர்தல்கள் பின்போடப்பட்டன. இந்தப் புறக்கணிப்பின் விளைவாக சிங்களப் பிரதிநிதிகள்  ஒன்று சேர்ந்த முற்றிலும் 7 சிங்கள அமைச்சர்களைக் கொண்ட  அமைச்சர் வாரியத்தை (Pan Sinhala Board of Ministers)  உருவாக்கிக் கொண்டார்கள்.

ஜிஜி பொன்னம்பலம் அவர்களே தேர்தல் புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தார்!

1994 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை புலிகள் புறக்கணித்தார்கள். விளைவு?  டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி கட்சி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 10,744 வாக்குகளைப் பெற்று 9 இடங்களில் வென்றது. இந்த 10,744 வாக்குகளி 9,944 வாக்குகள் (0.14 விழுக்காடு)  இபிடிபி இன் கட்டுப்பாட்டில் உள்ள தீவுப் பகுதிகளில் இருந்து கிடைத்தவை. புலிகள் தேர்தலைப் புறக்கணிதததன் மூலம் டக்லஸ் தேவானந்தாவின் நாடாளுமன்ற நுழைவுக்குக்  கதவைத் திறந்து விட்டார்கள்.

மீண்டும் 2005 ஆம் ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலை மகிந்த இராசாபக்சாவிடம் இருந்து உரூபா 500 மில்லியன் பணத்தை வாங்கிக் கொண்டு தேர்தலைப் புறக்கணிக்குமாறு மறைமுகமாகத்  தமிழ் வாக்காளர்களைக் கேட்டார்கள். விளைவு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தல் பதிவான மொத்த வாக்காளர்களில் (701,938)  8,524 வாக்கு (1.21)  அளித்தார்கள்.

இந்தத்  தேர்தல் புறக்கணிப்பால் மகிந்தா இராசபக்ச 4,887,152 (50.20) வாக்குகளைப் பெற்று 180,786 பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்.

வி. புலிகள் இந்தத் தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்திருக்கா விட்டால் – இராசபக்சாவின் சாதகத்தைச் சரியாக வாசித்திருந்தால் – விக்கிரமசிங்க மிக இலகுவாக வென்றிருப்பார்.

நாட்டின் வரலாறும் தமிழரது எதிர்காலமும் வேறு விதமாக அமைந்திருக்கும்!

எனவே  தேர்தல் புறக்கணிப்பு அரசியல் தற்கொலைக்குச் சமமானது என்பதை வரலாறு துலாம்பரமாக எடுத்துக் காட்டுகிறது!

Share the Post

You May Also Like