பல்கலை மாணவருடனான பேச்சு: சுமுகநிலை இன்று ஏற்படும்! -சுமன்

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகளை பொதுநிலைப்பாடு ஒன்றுக்கு வரச்செய்வதற்கான முயற்சியில் வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஈடுபட்டுள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று சந்திப்பு தற்போது யாழில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னரே ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டமொன்றில் கலந்துகொள்ள வேண்டிய காரணத்தினால் தான் இந்த சந்திப்பிலிருந்து விடைபெற்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் நேற்றும் நான் வேறொரு நிகழ்வுக்காக இடையில் சென்றுள்ளேன். ஆனால், இடையில் சென்றுவிட்டார் என்று தவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

கலந்துரையாடல் மிகவும் சுமூகமான முறையில் இடம்பெற்று வருவதாகவும் ஆவணத்தை இறுதி செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் தமிழர்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய சரத்துக்கள் அடங்கிய பொது உடன்படிக்கையில் கட்சிகள் முன்வைத்த திருத்தங்களுடன் ஒப்பமிடுவதற்கு, நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like