5 தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக ஆபத்தானவை

புலிகள் காலத்து யோசனைகளைவிடப்  பாரதூரமானவை என்கிறது  அஸ்கிரிய பீடம் 

“ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க 5 தமிழ்க் கட்சிகள் கூட்டாக முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் பாரதூரமானவை; நாட்டுக்கு ஆபத்தானவை.”

– இவ்வாறு அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்க தேரர் வெண்டருவே உபாலி இன்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் 5 தமிழ்க் கட்சிகளும் கூட்டாக முன்வைத்துள்ள அந்தக் கோரிக்கைகள் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளைவிடப்  பாரதூரமானவை. அவற்றை ஏற்பவர்கள் யார் என்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்” – என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான பொது இணக்கப்பாடு சில தினங்களுக்கு முன்னர் எட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய 5 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அநுரகுமார திஸாநாயக்கா ஆகிய பிரதான வேட்பாளர்களிடம் தமிழர் தரப்பின் கோரிக்கைகளைக் கூட்டாக முன்வைத்து பேரம் பேசுவது என இந்தப் பொது இணக்கப்பாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஏற்கமாட்டார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இந்தக் கோரிக்கைகள் மிகவும் பாரதூரமானவை எனவும், நாட்டுக்கு ஆபத்தானவை எனவும் அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்க தேரர் வெண்டருவே உபாலி இன்று கூறியுள்ளார்.

Share the Post

You May Also Like