சுமந்திரன் ஒரு கெட்டிக்கார அரசியல்வாதி மறுப்பவர்கள் அவர் மீது கல்லெறிகிறார்கள்!

நக்கீரன்

 படித்தவர்களைப் பிடிக்காத ஒரு கூட்டம் எம்மிடையே  தொடர்ந்து இருக்கிறது.

இன்றுள்ள  தமிழ் அரசியல்வாதிகளில் சுமந்திரன் மீதுதான் மிகக் கடுமையான கண்டனங்கள், விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

வளரி என்ற தொலைக்காட்சியை பார்க்க முடிந்தது. இந்தத் தொலைக்காட்சி ஈழத்தவர்களால் நடத்தப்படுவது தெரிகிறது. ஆனால் அவர்கள் யார், யார் என்பது புரியவில்லை.

வளரி என்றால் என்ன பொருள் என்று தலையைப் பிய்க்க வேண்டாம்.  வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கும் கால்நடைகளை திருடிச்செல்லும் திருடர்களைப் பிடிக்கவும் பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை  ஆயுதம் ஆகும்.

இது ஒஸ்திரேலிய பூர்வ குடிமக்கள் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது.  பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல.

சீமான் மேடைகளில தொண்டை வற்றப் பேசும் மேடைப் பேச்சுக்களை ஒளிபரப்புகிறார்கள். விக்கிரவாண்டியில் போட்டியிட்டு கட்டுக்காசை இழந்த  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை நேர்காணல்  கண்டு அதனை ஒளிபரப்பினார்கள்.  சோகம் என்ன வென்றால் 4,000 வாக்குகளுக்குக் குறைந்த வாக்குகளைப் பெற்று மனிதர் கட்டுக்காசை இழந்த  பின்னரும்  நேர்காணல் ஒளிபரப்புத் தொடர்கிறது! நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட சுயேட்சையாகக் களம் இறங்கிய ஹரி நாடார்  அதிக வாக்குகளைப் பெற்றார்.

 பாதித் திரையில் கனடாவில் உள்ள சென்ரம் (CENTUM) நிறுவனம் பற்றி விளம்பரம் வருகிறது. அதன் உரிமையாளர் சுரேஸ் சிவானந்தராசா. அடமானத் தரகர். வாணி லோ என்ற  சட்ட நிறுவனத்தின்  விளம்பரமும் சின்னதாக வருகிறது.

இரண்டு வரியில் நாலு செய்தி 24 மணித்தியாலமும் போய்க் கொண்டிருக்கின்றன. செய்திகள் மாற்றப்படுவதில்லை. அவற்றில்   இடைக்கால அறிக்கை பற்றிக் கடந்த நான்கு ஆண்டுகளாக சுமந்திரன்  தொடர்ந்து படு மோசமான பொய்களைச்  சொல்லி  வருகிறார் என்பது ஒன்று.

இப்படிச்  செய்தி போடுகிற தொலைக்காட்சியை நடத்துபவர்கள் உலக்கைக் கொழுந்துகள் ஆக இருக்க வேண்டும். இதிலிருந்து ஒன்று தெரிகிறது. சுமந்திரன் மீது கல்லெறிவதற்குக் காரணம் அவர் அரசியலில் ஒரு சாணக்கியன் என்ற  காழ்ப்புணர்வுதான். வேறு காரணம் இருக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் இருக்கும் தமிழ் உறுப்பினர்களில் பலரில் நேர்படப் பேசக் கூடியவர்கள் மூன்று  பேர்தான். ஒருவர் சம்பந்தன் ஐயா.  இரண்டாமவர் மாவை சேனாதிராசா மற்றவர் சுமந்திரன். இதில் சம்பந்தன் ஐயாவும் சுமந்திரன் இருவரும் சட்டத்தரணிகள்.

எதிர்க்கட்சிப் பதவி போன பின்னரும் சம்பந்தன் ஐயா அரசியல் யாப்புக் குழுவில் தொடர்ந்து இருக்கிறார். நாடாளுமன்றத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களில் சம்பந்தன் ஐயாவும் ஒருவர். முதன் முறையாக 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருகோணமலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத்தில் பல குழுக்கள் இருக்கின்றன. நாடாளுமன்ற முகாமைத்துவக் குழு,  பொதுக் கணக்குக் குழு, பொதுநிறுவனங்களின் குழு போன்ற முக்கிய குழுக்களில் சுமந்திரன் இருக்கிறார்.  அண்மையில் உயிர்த்த ஞாயிறு அன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட  நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலும் சுமந்திரன் இடம் பிடித்திருந்தார். அந்தக் குழுவின் அறிக்கையைச் செம்மைப்படுத்துவதில் சுமந்திரனின்  பங்களிப்பு இருந்தது.

அரசியலமைப்பு சட்டமன்ற வழிகாட்டுக் குழுவில் ததேகூ இன் சார்பில் சுமந்திரன் நியமிக்கப்பட்டவர். அதே சமயம் அவர் அதன் இணைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். மற்றவர் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்தின ஆவார். ஒரு புதிய முற்போக்கான அரசியலமைப்பு மூலம் சனநாயகம்,  நீதி, சமத்துவம், சட்டத்தின் ஆட்சி போன்ற சனநாயக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு முற்போக்கான அரசியலமைப்பை உருவாக்கப் பாடுபட்டார்.

தமிழர்கள் இழந்த உரிமைகளை சனநாயக வழிகளில் – இனங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் குறைப்பதன் மூலம் – வென்றெடுக்க வேண்டும் என்பது சுமந்திரனின் அரசியல் சித்தாந்தம் ஆகும்.

2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமந்திரன் ததேகூ இன் சட்ட ஆலோசகராக மட்டும் இருந்தார். சம்பந்தன் ஐயாதான் அவரது சேவை தமிழ்மக்களுக்குத் தேவை என எண்ணி அவரைத் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற நுழைவுக்கு வழிகோலினார். சுமந்திரன் நா.உ பதவியை விரும்பவில்லை. காரணம் அவர் சட்டத்தொழிலில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார். அவரது நிறுவனத்தில் 20 க்கும் அதிகமான சட்டத்தரணிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

2010 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் பின்னர் கடைசி இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சுமந்திரன் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யத் தனது ஒப்புதலை வழங்கினார்.

அடிப்படையில் சுமந்திரன் ஒரு மனித உரிமைச் சட்டத்தரணி.  மனித உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவர். அதனால் அப்போதைய ஜனாதிபதி மகிந்தாவின் சகோதரர் கோத்தபய இராஜபக்க்ஷவின் கீழ் இருந்த இலங்கை இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டார், துன்புறுத்தப்டார்.  மனித உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவர்களை   “கருப்புக் கோட்டுகளில்  துரோகிகள்” (“traitors in black coats) என கோத்தபாய முத்திரை குத்தினார். 

அவர் தர்க்கரீதியாகவும் வித்தியாசமாகவும் யதார்த்த  ரீதியாகவும் சிந்திக்கிறார்.  எடுத்துக்காட்டாக அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற சொற்களுக்கு பரம்பரையாக கொடுக்கப்பட்டுவந்த வரையறை இன்றைய கால கட்டத்தில் மாறுபட்டு விட்டது என்றார்.

ஐக்கிய இராச்சியம் ஓர் ஒற்றையாட்சி நாடு. ஆனால் ஸ்கொத்தலாந்து மாநிலத்துக்குப்  பிரிந்து போகும் உரிமை உண்டு!  அதற்கான பொது வாக்கெடுப்பு  18 செப்தெம்பர் 2014 இல் நடைபெற்ற போது 55 விழுக்காட்டினர் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்தியா இணைப்பாட்சி முறைமை கொண்ட நாடு. நாடு என்பதைவிட 28 மாநிலங்கள் 9 மத்திய ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள் அடங்கிய  ஒன்றியம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதன் அரசியல் யாப்பு  இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் சொல்கிறது. இருந்தும் இந்திய மாநிலங்களுக்குப் பிரிந்து போகும் உரிமை கிடையாது!

இதனை விளங்கிக் கொள்ளாத கஜேந்திரகுமார் போன்ற மலட்டு அரசியல்வாதிகள் ஒற்றையாட்சி என்ற சொல்லைக் கேட்டாலே  பதறி அலறுகிறார்கள். சுமந்திரன் தமிழ்மக்களை சிங்களத்திடம் அடகு  வைத்துவிட்டார் என ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். அவர்  பிரதமர் விக்கிரமசிங்கவின் கையாள், பினாமி என்கிறார்கள். அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தமிழினத்தை சிங்களவர்களுக்கு விற்கிறார் என்கிறார்கள்.

உண்மையில் சுமந்திரனுக்கு அமைச்சர் பதவி ஆசையிருந்தால் நேரே ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து ஒரே நாளில் அமைச்சராகிவிட முடியும். தலையைச் சுற்றி மூக்கைப் பிடிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

அவரது விருப்பம் என்னவென்றால் தமிழர்களுக்கு ஒரு  நியாயமான, நீதியான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு தனது கல்வி, சட்ட அறிவு, பட்டறிவு, உழைப்பு ஆகியவை உதவக் கூடும் என்பதுதான்.

அவர் மீது கல் எறிபவர்களுக்கும் சேறு அள்ளி வீசுபவர்களுக்கும் இருக்கிற ஒரே ஆசை சுமந்திரன் மீது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவரை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்துவதுதான்.

இது இன்று நேற்றல்ல அவர் நியமன நா.உறுப்பினராக நியமித்த நாள் தொட்டு தொடர்ந்து முயற்சிக்கப்பட்டு வருகிறது. 2015 இல் நடந்த பொதுத்தேர்தலில் சம்பந்தன் ஐயாவையும் சுமந்திரனையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த இபிஎல்ஆர்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் வெளிநாடுகளில் வாழும் இலங்கையரிடம் நிதி கூடச் சேகரித்தார்.

சுமந்திரன் ஒரு கெட்டிக்காரன், நேர்படப் பேசுபவர்  என்பதால்தான் அவரை எல்லோரும் இலக்கு வைக்கிறார்கள்!

ஆனால், எங்கேயாவது காகம் கத்தி மாடு செத்ததாகச் செய்தி இருக்கிறதா? இருந்தும் சளைக்காது இந்த வேண்டாத திருப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாற்றுத் தலைமை வேண்டும் என்ற போர்வையிலும் இந்தத் திருப்பணி தொடர்கிறது.

சுமந்திரன் தான் கலந்து கொள்கிற எல்லாக் கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் நேர்படப் பேசுகிறார். பல்கலைக் கழகப் பேராசிரியர் வகுப்பு எடுப்பது போல எடுத்துக் காட்டுக்களோடு உண்மையைப் பேசுகிறார்.

எடுத்துக்காட்டாக கடந்த யூன்  17, 2019   அன்று ஆழியவளை அருணோதயா விளையாட்டுக் கழகம் நடத்திய வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழாவில் பேசிய பேச்சைக் குறிப்பிடலாம்.  இந்த நிகழ்வில்  முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டு சுமந்திரன்  ஆற்றிய உரை இது. இடைக்கால அறிக்கை எதிர்பாராத விதமாக தடைபட்டுப் போன பின்னணியில் பேசிய பேச்சு இது.

“முன் எப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம். தமிழ் மக்களின் அரசியல் பயணத்திலே பல வித்தியாசமான தசாப்தங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். ஆனால், இன்று நாங்கள் இருக்கின்ற சூழல் இதற்கு முன்னெப்போதும் இல்லாத சூழலாக இருக்கின்றது.

எங்களுக்கு உகந்த ஒரு சூழலை நாம் உருவாக்கி விட்டோம் என்று நினைத்திருந்தபோது அந்தச் சூழலே எங்களுக்கு மாறானதாகவும் நாங்கள் சறுக்கி விழக்கூடியதாகவும் விழுந்தால் பாரிய காயம் ஏற்படக்கூடியதாகவும் இன்று எங்கள் முன்னால் இருந்து கொண்டிருக்கின்றது.

மிக நிதானமாக, மிகக் கவனமாக நாங்கள் எங்களது மக்களது நலன்களை முன்னிறுத்தி முன்னேற வேண்டிய காலமாக இருக்கின்றது.

விசேடமாக இந்த வருடத்தில் இவை எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய வேண்டும். எமது நீண்டகால இலக்குகளை அடைவதற்கான வழிகள் என்ன? பொதுமக்களினது நலன்களை அடைவதில் அவர்களுக்கு எப்படித் தலைமைத்துவம் கொடுக்க முடியும்? என்பது குறித்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலமாக இது இருக்கின்றது.

இது இலகுவான ஒரு சவால் அல்ல. முன்னெப்போதும் இல்லாத பலத்த சவால். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக முகம் கொடுக்க வேண்டிய ஒரு சவாலாக இது இருக்கின்றது. எனவே, இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம்.

வாழ்க்கையில் தோல்வியைச் சந்திப்பது எப்படி, தோல்வியைக் கையாள்வது எப்படி, ஏமாற்றங்களுக்கு முகம் கொடுப்பது எப்படி என்பதை விளையாட்டுத் திடலில்தான் நாம் முதலில் கற்றுக்கொள்கின்றோம். வாழ்க்கையிலேயே பல தோல்விகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும். பல ஏமாற்றங்களுக்கு முகம் கொடுத்தே ஆகவேண்டும். அவை இறுதி முடிவாக இருக்கக்கூடாது. அந்தத் தோல்விகள், ஏமாற்றங்கள்தான் வெற்றிக்கான படிகளாகும். எனவே, இன்றைய சூழ்நிலையிலே இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் என்றுமில்லாத அளவுக்கு அத்தியாவசியமானதாகும்” என்றார்.

மொட்டையாக “இடைக்கால அறிக்கை பற்றி கடந்த நான்கு ஆண்டுகளாக  சுமந்திரன்  தொடர்ந்து படு மோசமான பொய்களைச்  சொல்லி வருகிறார் என்று செய்தி வெளியிடுவது அறமாகாது. நெஞ்சில் நேர்மை, வாக்கினில்  தூய்மை இருந்தால் அந்தப் பொய்களை வளரி பட்டியலிட வேண்டும்.

பழுத்த மரத்துக்குத்தான் கல்லெறி விழும் என்பார்கள். சுமந்திரன்  ஒரு  கெட்டிக்கார அரசியல்வாதி.   அதனை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் அவர் மீது கல்லெறிகிறார்கள்.

Share the Post

You May Also Like