தொழில் வாய்ப்புகள் அற்ற இளைஞர், யுவதிகளுக்காக திராய்மடுவில் தொழில் பயிற்சி நிலையம்

தொழில் வாய்ப்புகளற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் பயிற்சி நெறிகளை வழங்கும் நோக்கில் திராய்மடு கிராமத்தில் பாரம்பரிய வலுவூட்டல் தொழில் பயிற்சி நிலையமொன்றினை அமைக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 25ஆவது பொது அமர்வானது இன்றைய தினம் (07.11.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இவ் அமர்வில் முதல்வர் தனது அறிவிப்புகளின் ஊடாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள் குடியேற்றம் மற்றும் வட மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளரிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் அனர்த்தங்களின் பின்னர் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இளைஞர், யுவதிகளுக்கு நெசவுத் துறையில் 6 மாத கால பயிற்சியை வழங்கி அதன் பின்னர் அதனை சுய தொழிலாக செய்து கொள்ளும் வகையில் திராய்மடு கிராமத்தில் பாரம்பரிய வலுவூட்டல் தொழில் பயிற்சி நிலையம் (Empowering Traditional Vocational Training Centre) ஒன்றினை மாநகர சபையும், கிராமிய தொழிற்துறை திணைக்களமும் இணைந்து செயற்படுத்துவதற்காக 10 மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் எதிர்வரும் தை மாதத்தில் இங்கு பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்படி அமர்வில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அரசடி நூலகத்தில் சிறுவர் நூலக பிரிவு ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான அனுமதியும், மத்திய பேரூந்து நிலையத்திற்கு வரும் பிரயாணிகளின் நன்மை கருதி வாசிப்பு மையமொன்றினை உருவாக்குவதற்கான அனுமதியும் சபையில் பெறப்பட்டதுடன், நிதிக்குழு சார்ந்த விடயங்களுக்கான அங்கிகாரங்களும் பெறப்பட்டன.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல்களின் நிமிர்த்தம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதரும் விஸேட பிரமுகர்களின் பாதுகாப்பு கருதி மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைக்குமாறு திணைக்களங்களிடமிருந்து கோரிக்கைகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் இவ்வாறான அழைப்பின் காரணமாக சபைக்கு ஏற்படும் வீணான செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் அதற்கான கட்டணங்களை அறவீடு செய்து கொள்வதற்கு என முதல்வரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவானது சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மற்றும் மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Share the Post

You May Also Like