கோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்!

எதிர்பார்க்கப்பட்ட படி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.

ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடிக்க இனவாதப் பிசாசு வெளிக் கிளம்பத் தொடங்கி விட்டதைத்தான் கூறுகின்றோம்.

தமிழர்களின் வாக்குகள் புதிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்டபாளர் சஜித் பிரேமதாஸவுக்கு உறுதி எனத் தெரிந்ததும்,  தெற்கில் பொரும்பான்மையினரான பெளத்தசிங்கள வாக்காளர்களைக் கவர்வதற்காக இனவாதப் பூதத்தைக் கையில் எடுத்திருக்கின்றது பொதுஜனப் பெரமுன.இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

தமிழர்களுக்கு எதிரான பேரினவாதத்தைக் கிளப்பிதென்னிலங்கை வாக்குகளைச் சுருட்டுவதற்குத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும்வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரனின் அறிக்கையைத் தமக்குச் சாதகமாக முன்னாள் ஜனாதிபதியும்எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்க்ஷ கையில் எடுத்திருக்கின்றமைதான் இப்போது புதிய திருப்பம்.

சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருப்பதால்அதை இடிப்பதாக நினைத்துக் கொண்டுகூட்டமைப்பு வரவேற்ற சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார் நீதியரசர் விக்னேஸ்வரன்.

அப்போதே அவர் “அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கின்றார்‘ எனக் கருதினோம்.விக்னேஸ்வரனின் விமர்சனத்தைசஜித் பிரேமதாஸ வின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மோசமாக விமர்சிப்பதற்கான ஆதரமாக – கருவியாக – பயன்படுத்துவதற்கு மஹிந்தர் முயன்றிருக்கின்றமையை நோக்கும்போது நாம் கருதியமை சரிதான் என்றே படுகின்றது.

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள மற்றும் தமிழ் – ஆங்கில மொழிகளுக்கு இடையிலான சொல்லாடலில் பெரும் தந்திரம் புகுத்தியிருக்கின்றது என்ற சாரப்படவும் – சிங்களவர்களுக்கு ஒன்றையும் தமிழ்ஆங்கிலமொழி மூல மக்களுக்கு பிறிதொன்றையும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டுவதன் மூலம் சஜித் பிரேமதாஸ பெரும் தந்திரத்தை – மோசடியை – கரவுடன் முன்னெடுத்திருக்கின்றார் என்பதே நீதியரசர் விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டு.

அதனையே தமக்கான பெரிய ஆதாரமாக முன்னெடுத்து பேரினவாதக் கூச்சலை ஆரம்பித்திருக்கின்றார் மஹிந்த ராஜபக்க்ஷ முதல்வர் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டிய விடயம் ஒன்றும் புதியதேயல்ல.

தற்போதைய நாடாளுமன்றம் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பான தனது முயற்சியின் போது – நகல் வரைவு மட்ட யோசனைத் திட்ட அளவுக்கு முன்னேறிய புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போது – சர்ச்சையைக் கிளிப்பிய விடயங்களே இப்போது நீதியரசர் விக்னேஸ்வரனினாலும் மீண்டும் முன்தள்ளப்பட்டிருக்கின்றன.

அதாவதுஅவர் தந்தது “புதிய மொந்தையில் பழைய கள்‘ – அவ்வளவுதான்.ஏக்கிய இராஜ்ஜிய‘, “ஒற்றையாட்சி‘, “ஒருமித்த தேசம்‘ என்ற சொல்லாடல்கள் குறித்து புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போது எவ்வாறு சர்ச்சைகள் கிளப்பப்பட்டனவோ அது போன்ற சிக்கல்களையே திரும்பவும் பிள்ளையார் சுழி போட்டு  ஆரம்பித்துதென்னிலங்கைப் பேரினவாதிகளுக்கு ஆயுதங்களாகத் தீட்டிக் கொடுத்திருக்கின்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

கூட்டமைப்பை அடிப்பதாக நினைத்துக் கொண்டு – ஏதோ தமிழ் மக்களுக்கு உண்மையைத் தமது ஆழ்ந்த அறிவு மூலம் விளக்கிப் புரிய வைக்கிறோம் என்று கருதிக் கொண்டு – அவர் செய்த வியாக்கியானம் மஹிந்த தரப்புக்குப் பேருதவியாக வந்திருக்கின்றது.

தனது பேரினவாதப் பேருரைக்கு சாட்சியாக – ஆதாரமாக – நீதியரசர் விக்னேஸ்வரனை முன் நிறுத்தியிருக்கின்றார் மஹிந்தர்.

எந்தச் சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி சுட்டு விரலைக் சுட்டுவதற்கு எமக்கு அருகதையோஉரிமையோ கிடையாது என்று தமிழ் மக்களுக்குக் கூறுவதாக நினைத்துக்கொண்டு – பெளத்தசிங்கள பேரினவாதத்தில் மூழ்கித் திளைத்திருக்கும் தென்னிலங்கையின் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தம்மை அறியாமலேயே தூண்டி வழிப்படுத்துபவர் போல நடந்து கொண்டிருக்கின்றார் நீதியரசர் விக்னேஸ்வரன்.

இது தெரியாமல் இழைக்கப்பட்ட – அல்லது இலக்கு மாறிப் போன – நடவடிக்கையாகக் கருதக் கூடியதன்று. இன்றைய அரசியல் சூழ்நிலையில் இத்தகைய விமர்சன அரசியல் அறிவிப்புகள்இது போன்ற மோசமான விளைவுகளையே நேரடியாகத் தரும் என்பதை உய்த்தறிய முடியாதவர்கள் அரசியல் தலைவர்களாக இருக்க முடியாது.

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் முன்னாள் முதல்வர் கூறிய விடயங்கள் முற்றிலும் உண்மையாக இருந்து விட்டுப் போகட்டும். அந்த உண்மையைக் கண்டறிந்த மும்மொழி ஜாம்பவானாக அவரே – அவர் மட்டுமே – இருந்து விட்டும் போகட்டும். அதற்காக அவரை வாழ்த்தில் பாராட்ட வேண்டும் என்றால் அதையும் கூடச் செய்யலாம்.

ஆனால்அதன் விளைவுதென்னிலங்கையில் பேரின வாதத் தீயைக் கடாசி எரியவிட்டுஅதில் தமிழிரின் அபிலாஷைகளுக்கான எச்சசொச்ச வாய்ப்பையும் முற்றாக தகித்துஎரிந்து நாசமாக்கும் வழிக்கே உதவியிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழர் வாழ்வில் பிராயச்சித்தம் செய்ய முடியாத வரலாற்றுத் தவறாக இது பதியப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

08-11-2019 அன்று வெளியான காலைக்கதிர் தலையங்கம்)

Share the Post

You May Also Like