கூட்டமைப்பின் முடிவால் தமிழ் மக்கள் நட்டாற்றில் – ஒப்பாரி வைக்கின்றார் மஹிந்த

“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு முட்டாள்த்தனமானது; படுகேவலமானது. இந்தத் தீர்மானம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டமைக்குச் சமனானது. எனவே, வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தீர்க்கமான அரசியல் தீர்மானத்தை எடுத்து தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். சஜித் பிரேமதாஸவைத் தோற்கடிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் நாட்டில் மீண்டும் ஊழல், மோசடி நிறைந்த ஆட்சிக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் தூபமிடுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் வால்களாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நான்கு வருடங்களாக சுகபோக வாழ்க்கையையே அனுபவித்து வருகின்றார்கள். ஆனால், அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய வடக்கு, கிழக்கு தமிழ் மக்களோ தங்கள் வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றார்கள். வடக்கு – கிழக்கில் கடன் தொல்லையால் அவர்கள் படும் வேதனைகள் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை. எனவே, அம்மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமான அரசியல் முடிவை எடுத்து தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்” – என்றார்.

Share the Post

You May Also Like