காரைதீவு பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார் ஜெயசிறில்!

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளை காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  நேரில் சென்று பார்வையிட்டு வெள்ள நீர் வடிதோடுவதற்கான துரித நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

காரைதீவு நிந்தவூர் பிரதான பாதையில் அமைந்துள்ள பிரதான வடிகானை வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன், காரைதீவு பிரதேச சபையும் இணைந்து ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு வடிகானில் அடைத்துள்ள மண்ணை அகற்றி வெள்ள நீர் தேங்கியுள்ள உள் வீதிகளில் இட்டு நிரப்பி வருகின்றனர்.

காரைதீவின் பல வீதிகளையும் பார்வையிடுவதோடு , மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை கேட்டறிந்து    மக்களுடன் இணைந்து   வெள்ளம் வடிந்தோடுவதற்கான பணிகளை களத்தில் நின்று   மேற்கொண்டு வருவதனை காண முடிந்தது.

இது தொடர்பாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் கருத்து கூறுகையில்.

காரைதீவு கிராமத்தில் 11ம், 12ம், வட்டாரத்தில் சுமார் 650 மேற்பட்ட குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கிருக்கின்றனர் . இன்னும் சில தினங்களுக்கு மழை தொடருமானால் அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்க வைக்க வேண்டிய சூழல் ஏற்படும் . மழை வெள்ளம் காரணமாக பல மலசல கூடங்கள் நிரம்பி வெள்ள நீருடன் கலப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயமுள்ளது . இது தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன்  அவர்களுக்கு கடிதம் மூலம் அறியப்படுதியுள்ளதோடு ,  கல்முனை மாநகர சபையை  மேலதிக உதவிகளுக்கு அழைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கருத்து தெரிவிக்கையில்

தங்களுடைய வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலமை காணப்படுவதாகவும் ,நோய்வாய்பட்டவர்களும் வீட்டிலே முடங்கியுள்ளனர் . இவர்களை  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லமுடியாதுள்ளது மூன்று அடிக்கு மேலான வெள்ள நீரிலே நோயாளிகளை சுமந்து   செல்ல வேண்டியுள்ளது .

வருடா வருடம் இதே நிலைதான் மழை காலங்களில் காணப்படுவதாகவும்  தங்களுடைய பிள்ளைகள் பாடசாலை மற்றும் பரீட்சைக்கு செல்வதானாலும் நனைந்தபடியே செல்ல வேண்டிய சூழலில் இருக்கின்றோம் . உரிய  அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

Share the Post

You May Also Like