டெங்கு அபாய எச்சரிக்கை தொடர்பில் மாநகர முதல்வரின் அறிவித்தல்

தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நுளம்பு உற்பத்தியாகக் கூடிய இடங்களை விரைந்து சுத்தப்படுத்துமாறும், பிளாஸ்டிக், பொலித்தீன், கண்ணாடிக் குவளைகளைகள் மற்றும் இதர குப்பை கழிவுகளை உரிய முறையில் தரம்பிரித்து அகற்றுமாறும் கேட்டுக் கொள்கின்றேன். தங்கள் வீட்டுச் சூழலில் வெற்று கொள்கலன்களில் நீர் தேங்கி நுளம்பு பெருகாமல் பார்த்துக் கொள்வது தங்கள் பொறுப்பும் கடமையுமாகும்.

டெங்கு நோய்த்தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகளில் உள்ள நீர் தேங்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கு மாநகரசபையின் வழமையான வட்டார திண்மக் கழிவகற்றல் நடைமுறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் இக் கொள்கலன் கழிவுகளை வட்டார ரீதியாக அகற்றுவதற்கு விசேட ஏற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தங்களின் வீட்டின் முன்புறம் பிரதான நுழைவாயில் உட்பட சுற்றுச் சூழலில்  உள்ள புல், பூண்டுகளையும் தாங்களே அகற்றி சுத்தப்படுத்தி டெங்கை கட்டுப்படுத்தும் வகையில் துப்பரவு செய்து கொள்ளுமாறு இத்தால் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

மாநகர சுகாதாரப் பிரிவினர் மற்றும் சுற்றாடற் பொலீஸ் பிரிவினர் தங்கள் வீடுகளை பரிசோதிக்க வருகின்ற பொழுது மேற்படி விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்படும். அச் சமயம் தங்கள் வீடுகளில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ, வீட்டின் பிரதான நுழைவாயில் மற்றும் சுற்றுச் சூழல் சுத்தமாக காணப்படாவிட்டாலோ உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மனவருத்தத்துடன் முற்கூட்டியே அறியத்தருகின்றேன்.

‘சுத்தமான பசுமை மாநகரை உருவாக்க அனைவரும் ஒன்றினைவோம்’

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’

Share the Post

You May Also Like