தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவேண்டும் – சிறிநேசன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வெள்ளம் வடிந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

வந்தாறுமூலை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வந்தாறுமூலை கணேஸ வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையத்தில் தங்கியிருக்கும் மக்களுக்கு இன்று மாலை (23.12.2019) போர்வைகள் மற்றும் அத்தியவசியப் பொருட்களை வழங்கி வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்களைப் பாதுகாப்பாக மீட்டு, அவர்களை நலன்புரி நிலையங்களில் தங்கவைத்து அவர்களுக்கு வேண்டிய சேவைகளை பல அரச அலுவலர்கள் இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றார்கள். இதுவரை பாரிய உயிர்ச் சேதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் துரிதமாக செயற்பட்டார்கள்.
குறிப்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு, கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சுகாதார சேவைகளை வழங்கும் பணியாளர்கள் எனப் பலர் அர்ப்பணிப்புடனான சேவைகளை வழங்கி வருகின்றார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் கைக்குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள் மற்றும் இயலுமையற்றவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. தற்போது குளிர் காலம் என்பதால் போர்வைகள், பாய்கள், நுளம்பு வலைகள் என்பன அதிகமாக தேவைப்படுகின்றன.
அதுமட்டுமன்றி மழை நீர் முற்று முழுதாக வடிந்தோடாத காரணத்தினால் நோய்தொற்றுக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. குறிப்பாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன அதற்காக புகைவிசுறுதல் போன்ற செயற்பாடுகளையும் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது.
மேலும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவுகளை அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல்வாதிகள், தொண்டர் குழுக்கள் எனப் பலதரப்பட்டவர்களும் வழங்கி வருகின்றார்கள். இவ்விடயத்தில் சுகாதாரப் பகுதியினரால் உறுதிப்படுத்தப்பட்ட உணவுகளை வழங்க வேண்டும் ஏனெனில் சிலவேளைகளில் அதன் ஊடாகவும் தொற்று நோய்கள் மற்றும் ஒவ்வாமைகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன.
முக்கியமாக அனர்த்த வேளைகளில் அரசியல் பிரமுகர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமானத்தினை முன்னிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு நிவாரண உதவிகளை வழங்கும் போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்குவது போல் உறவினர் வீடுகளில் தங்கியிருப்போருக்கும் வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் வாலிபர் முன்னனியின் உப தலைவருமான துரைசிங்கம் மதன், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் மற்றும் சமுக மட்ட இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Share the Post

You May Also Like