போர்த்துக்கேயர் கிபி 1505 இல் கொழும்பில் இறங்கிய போது இரண்டல்ல மூன்று இராச்சியங்கள் இலங்கைத் தீவில்

போர்த்துக்கேயர் கிபி 1505 இல் கொழும்பில் இறங்கிய போது இரண்டல்ல மூன்று இராச்சியங்கள் இலங்கைத் தீவில் காணப்பட்டன.

கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் மட்டுமல்ல தலையகத்தில் கண்டி இராச்சியம் காணப்பட்டது.

இந்த கண்டி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் சிறிவிக்கிரம இராசசிங்கன். இவன் கண்டி சிங்கள பிரதானி  எகெலபொல என்பவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு பிரித்தானிய தளபதி  D’Oyly என்பவனால்   சிறைபிடிக்கப்பட்டான்.  அதன் பின்னர் கண்டிராச்சியம் கண்டிப் பிரபுக்களிடம் இருந்து மார்ச் 10, 1815 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உடன்படிக்கை மூலம் பிரித்தானியாவுக்கு கையளிக்கப்பட்டது.

மகாவம்சம் விஜயன் தரையிறங்கிய நேரத்தில் இலங்கைத் தீவில் திராவிட குலங்களான நாகர், இயக்கர், இராட்சதர், தேவர், புலிந்தர் (வேடர்) வாழ்ந்ததாகச் சொல்கிறது. தமிழர் குறிப்பிடப்படவில்லை.

பின்னாள் காகவர்ண தீசன் வாயிலாகவே மகா கங்கைக்கு அப்பால் தமிழர்கள் (டெமிழர்கள்) வாழ்ந்ததாகவும் துட்டகைமுனு அனுராதபுரத்தை பிடிப்பதற்காக படையெடுத்து வந்த போது மகியங்கனவில் இருந்து அனுராதபுரம் வரை அந்தப் பிரதேசத்தை ஆண்ட 32 தமிழ் சிற்றரசர்களை போரில் வென்றான் என மகாவம்சம் சொல்கிறது.

துட்டகைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் (விக்கிரமாதேவி) நாகர் குலத்தைச்  சார்ந்தவன். எல்லாளன் – துட்ட கைமுனு போரில் எல்லாளன் பக்கம் இந்து நாகர்களும் துட்ட கைமுனு பக்கம் பவுத்த தமிழர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.  எல்லாளனின் படைத்தளபதி மித்தனின் சகோதரனின் மகன் நந்தமித்தன் துட்ட கைமுனுவின் படையின் முக்கிய தளபதியாக இருந்தான்.  இன்னொருவன் வேலுசுமணன்.

நாகன் மற்றும் தீசன் என்ற பின்னொற்றுடன் பல நாக குல அரசர்கள் கிபி 7 ஆம் நூற்றாண்டுவரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு  இலங்கையை ஆண்டிருக்கிறார்கள்.

இதன் பின்னர் பவுத்த நாகர்களுக்கும் தமிழ்ப் பவுத்தர்களுக்கும் தனி அடையாளம் கொடுப்பதற்கு சிங்கள மொழி உருவாக்கப்பட்டு சிங்களவர் என்ற சொல்லும் தோற்றம் பெற்றது.

தேவநம்பிய தீசன் (கிமு 247-207) பவுத்த மதத்துக்கு மாறு முன் அனுராதபுரத்தை ஆண்ட மன்னர்கள் வைதீக (இந்து) மதத்தவர் ஆவர். மன்னர்களது அரண்மனையில் பிராமணர்கள் காணப்பட்டார்கள். அவர்களே முடிசூட்டு விழாக்களை நடத்தி வைத்தார்கள். தேவநம்பிய தீசனின் தந்தை மூத்தசிவன் (கிமு307-247) ஆவான்.

தேவநம்பிய தீசனின் ஆட்சிக்காலம் வரை இலங்கையில் இந்துமத வழிபாடுகளும், நம்பிக்கைகளும் வலுவாக நிலைகொண்டிருந்தன. மக்களிடையே லிங்கவழிபாடு பிரதானமாக இருந்ததுடன், நாகதீபம் உள்ளிட்ட பகுதிகளில் பௌத்தமும், இன்னும் சில பகுதிகளில் சமணம் மற்றும் பழந்தமிழ் வழிபாடான ஆசிர்வகமும் வழக்கத்தில் இருந்தன. பூர்வீக்குடிகளான நாகர்கள் நாகவழிப்பட்டையும், இயக்கர்கள் ஆவி வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தனர்.

தேவநம்பிய தீசன் தம்பி மகாநாகன் தன்னைக் கொலை செய்ய நடந்த சூழ்ச்சியில் இருந்து தப்பி தனது குடும்பத்தோடு உருகுண பிரதேசத்துக்கு இடம் பெயர்ந்தான். இவனே உருகுண இராச்சியத்தை உருவாக்கியவன் ஆவான். அதன் தலைநகரம் மாநக ஆகும்.

நக்கீரன்

Share the Post

You May Also Like