கோடீஸ்வரன் எம். பியின் பங்கேற்புடன் காரைதீவில் கோலாகல பொங்கல் விழா

காரைதீவு நிருபர்
காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகமும், காரைதீவு ஆதிசிவன் ஆலய நிர்வாகம், அதே ஆலயத்தின் அறநெறி பாடசாலை ஆகியன இணைந்து நடத்திய கலாசார பொங்கல் விழா இவ்வாலய முன்றலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பங்கேற்புடன் நேற்று புதன்கிழமை காலை கோலாகலமாக இடம்பெற்றது.
விளையாட்டு கழகத்தின் தலைவர் டாக்டர் கே. ஆதர்சன் தலைமையில் இவ்விழா ஆரம்பமானபோது கோடீஸ்வரன் எம். பி, இந்து சமய விருத்தி சங்க தலைவர் எஸ். மணிமாறன், தமிழர் ஊடக மையத்தின் தலைவர் ரி. தர்மேந்திரா உள்ளிட்ட பேராளர்கள் மங்கள விளக்கு ஏற்றினார்கள்.
தொடர்ந்து  இவ்வாலயத்தின் அறநெறி பாடசாலை மாணவர்களுடைய வரவேற்பு நடனம் இடம்பெற்றது. பின்னர் தைப்பொங்கல் குறித்த சொற்பொழிவு ஒன்றை இக்கோவிலின் அறநெறி பாடசாலை மாணவி நிகழ்த்தினார். அதன் பிற்பாடு சர்வேஸ்வரா பஜனை குழுவினரின் விசேட பஜனை நடைபெற்றது. பின்னர் இக்கோவிலின் அறநெறி பாடசாலை மாணவர்களிடையே கோல போட்டி நடத்தப்பட்டது.
கோடீஸ்வரன் எம். பி உள்ளிட்ட அதிதிகள் அனைவரும் விழா ஆரம்பமானது முதல் நிறைவு வரை இவ்விழாவின் அனைத்து அம்சங்களிலும் பங்கேற்றார்கள். இவ்வாலயத்தின் பொது செயலாளர் ஓய்வு நிலை கிராம சேவையாளர் எஸ். செல்லத்துரை ஆலய நிர்வாகம் சார்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இக்கோவிலின் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகள் பரிசில்களை வழங்கி வைத்தனர். கருணை உள்ளம் மனித நேய அமைப்பின் பங்களிப்புடனான இவ்விழாவில் 15 பானைகளில் பொங்கல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Share the Post

You May Also Like