தமிழர்களின் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்புடன் ஓரணியாகுக! அதுவே புத்திசாலித் தனமும்கூட

நாட்டில் ஏற்பட்டுள்ள சிங்கள பெளத்த தேசியவாதத்தின் எழுச்சியானது சிறுபான்மை மக்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கின்றது.

தமிழ், முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதித்துவங்களை அதிகரித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஏற்படுத்தியிருக்கின்றது.

மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தில் தமிழ் மக்கள் பேரிழப்புகளை சந்தித்திருந்தனர். உறவுகளையும் உடைமைகளையும் இழந்த மக்கள் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகினர்.

விடுதலைப் போராட்டம் அடக்கியொடுக்கப்பட்டதையடுத்து தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் வந்திருந்தது.

விடுதலைப் புலிகள் பலம்பெற்றிருந்த காலத்திலேயே தமிழ் மக்கள் சார்ந்த அரசியல் பிரச்சினைகள் குறித்து அணுகவேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவேண்டிய நிலைமை உருவாகியிருந்தது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமது பெரும்பான்மையான ஆதரவைத் தெரிவித்து இந்த தலைமைத்துவப் பாங்கை உறுதிப்படுத்தி வந்தனர்.

அதேபோன்றே கடந்த ஜனாதிபதி தேர்தலாகட்டும் 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலாகட்டும் தமிழ் மக்கள் தமது தீர்க்கமான தீர்மானத்தை இந்தத் தேர்தல்களிலும் வெளிப்படுத்தியிருந்தனர்.

தற்போது சிங்கள பெளத்த தேசியவாதம் எழுச்சி பெற்றுள்ள நிலையில் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுவந்த போதிலும் தற்போது தமிழ் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவுகள், முரண்பாடுகள் கூட்டமைப்புக்கு தொடர்ந்தும் இத்தகைய ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கின்றது.

சிங்களப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கமும் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கச் செய்துவிடுமோ என்று அஞ்சும் நிலைமையை உருவாக்கியிருக்கின்றது.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓரணியாகவும் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர் மற்றொரு தரப்பாகவும் போட்டியிடும் நிலைமை காணப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் தற்போது அங்கம் வகிக்கின்றன. இதில் ரெலோவிலிருந்து சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் தலைமையிலான அணி பிரிந்திருக்கின்றது.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்துள்ளதுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோவிலிருந்து பிரிந்து சென்ற சிறிகாந்தா அணியினர் ஆகியோரை உள்ளடக்கி புதிய கூட்டணியொன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஆனாலும் புதிய கூட்டணியை பதிவுசெய்யும் விடயத்தில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்தப் புதிய கூட்டணி அமைக்கப்படுவதில் சிக்கல் நிலை எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் சில தரப்பினர் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக புதிய அணியொன்றை உருவாக்குவதற்கு கடந்த சில வருடங்களாகவே முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.

முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் இன்னமும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

தமிழ் கட்சிகளுக்குள் காணப்படும் அரசியல் போட்டா போட்டிகள் இதற்கு தடையாக காணப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மாற்றுக் கூட்டணி அமைக்க முடியாதவிடத்து சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி தனித்தும் ஏனைய கட்சிகள் மாற்றுக்கூட்டணி அமைத்தும் போட்டியிடும் வாய்ப்புகளும் உருவாகியிருக்கின்றன.

இதனைவிட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாம் தனித்துவமாக களமிறங்கவுள்ளதாக தெரிவித்து வருகின்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. அடுத்த தேர்தலை தனித்து சந்திப்பதா அல்லது பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் ஒன்றிணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் சுயேச்சையாக அடுத்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றார். இவ்வாறு தமிழ் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக கூட்டணிகளை அமைப்பதிலும் தனித்து களமிறங்குவதிலும் அக்கறை செலுத்தி வருகின்றன.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளபோதிலும் தமிழ் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படாத நிலையில் வேற்றுமைகளே அதிகரித்து வருகின்றன.

முரண்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில் கட்சிகளின் தலைமைகள் பேரளவில் ஒற்றுமை குறித்து பேசிவருகின்றபோதிலும் செயற்பாட்டளவில் அதற்கான முயற்சிகள் இடம்பெறவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற அழைப்பை விடுத்து வருகின்றனர்.

ஒற்றுமையின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோன்றே முன்னாள் முதலமைச்சர் விக்னேஸவரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி உட்பட ஏனைய கட்சிகளின் தலைவர்களும் ஒற்றுமை தொடர்பில் வலியுறுத்துகின்றனர். ஆனால், நடைமுறையில் எத்தகைய முன்னேற்றங்களும் காணப்படவில்லை.

திருகோணமலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ் மக்களின் ஒற்றுமையில்தான் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தெரிவித்திருக்கின்றார்.

இங்கு உரையாற்றிய அவர், எமது ஒற்றுமையை நீங்கள் அனைவரும் பாதுகாக்க வேண்டும். அதில்தான் எமது எதிர்காலம் தங்கியிருக்கின்றது. மக்களின் ஜனநாயக முடிவுதான் எங்களது அத்திவாரமாகும்.

அதுதான் எமது பலம். எமது போராட்டத்தை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கும் நிலைமை ஏற்படுவதற்கு மக்களின் ஜனநாயக முடிவுதான் காரணமாக இருந்துகொண்டு இருக்கின்றது. எனவே, எமது ஒற்றுமையை பலப்படுத்துவதன் மூலமே எதிர்காலத்தை சுபீட்சமாக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதிலிருந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் மூலமே எதிர்காலத்தை வளமாக்க முடியும் என்று சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

உண்மையிலேயே அவரது கருத்து வரவேற்கத்தக்கதாகும். ஆனால், வாய்ப்பேச்சளவில் இத்தகைய ஒற்றுமைக்கான அழைப்பு இருக்கக்கூடாது. அதனை விட்டுக்கொடுப்புகளுடன் செயற்படுத்த வேண்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகவுள்ளது.

அதேபோன்றே ஏனைய கட்சிகளின் தலைமைகளும் விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி செயற்படவேண்டியது இன்றியமையாததாகவுள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்வது தொடர்பில் ஒற்றுமையுடன் சிந்திக்க வேண்டும்.

பதவி மோகத்தை மட்டும் கருத்தில்கொண்டு அதனைப் பெறுவதற்காக மட்டும் கட்சிகளை பயன்படுத்தும் செயற்பாட்டை தமிழ் அரசியல் தலைமைகள் இனியாவது கைவிட வேண்டும்.

தெற்கில் சிங்கள பெளத்த தேசியவாதம் எழுச்சிபெற்றுள்ள நிலையில் தமிழ் தலைமைகள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருப்பது எந்தவகையிலும் தமிழ் மக்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்தப்போவதில்லை.

எனவே இனியாவது தமிழ் தலைமைகள் சிந்தித்து ஒன்றுபடவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பானது விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு தமிழ் தலைமைத்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

நன்றி:வீரகேசரி

Share the Post

You May Also Like