தமிழர்கள் தனித்து வாழ்வதற்கு சிங்கள தலைமைகளே காரணம்! என்கிறார் சாள்ஸ் எம்.பி.

அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்களே இந்த நாட்டில் தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ முடியாது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றார்களென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட பனந்தும்பு நிலையத்தின் பெயர் பலகை விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட பனந்தும்பு நிலையத்தின் பெயர் பலகையில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட்டதை அடுத்து அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தரவில் சிங்களத்துக்கு முதலிடம் கொடுத்து பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே அதிகமாக உள்ளனர். ஆகவே தமிழ் மொழிக்கு விளம்பர பலகையில் முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது.

அமைச்சரின் அண்மைக்கால செயற்பாடுகள் அனைத்தும் இனவாதத்தின் வெளிப்பாடே. தற்போதைய புதிய அரசாங்கம் இவரைப் போன்றவர்களின் செயற்பாடுகளுக்கு ஊக்கம் அளித்து வருவதாகவே எமது மக்கள் கருதுகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி இது தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொண்டால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது இருக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Share the Post

You May Also Like