வடக்குக் கிழக்கில் தடம்மாறும் இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்கிறார் ஸ்ரீநேசன் எம்.பி.!

சுயநலத்திற்காக செயற்படும் சிலர், பிழையான இளம் சமூகத்தை உருவாக்கும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரலாற்றுப் பாடத்தினை மறந்து செயற்படுகின்ற எவரும் நிலையாக நிற்கமுடியாது எனவும் தவறாக வழிநடத்துபவர்கள் தொடர்பாக விரைவில் முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த உடல் திறனாய்வுப் போட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அதிபர் சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்ரீநேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய உடற்கல்வி பிரதிக்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார், தொழில்நுட்பப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் பிரமிதன், பழைய மாணவர் சங்க செயலாளர் மா.சசிக்குமார், மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொலிஸ் பரிசோதகர் சிவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ராஜகாரியர், சோமசேகரம், நல்லையா, குணசேகரம் ஆகிய இல்லங்களின் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் பல்வேறு உடற்கண்காட்சி நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீநேசன், “எப்போதும் நல்லவற்றை செய்யும்போது சவால்கள் வரும். அவ்வாறான சவால்களை வெற்றிகொண்டு சாதனைகளைப் படைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஒழுக்கம் மிகவும் முக்கியமாகும். நாங்கள் புத்திசாலித்தனத்தில் கூர்மையாக இருந்தாலும் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமானது. ஒழுக்கம் இல்லாதுவிட்டால் நாங்கள் உயர்ந்தும் பயனில்லை.

கடந்த காலத்தில் சிலர் ஒழுக்கத்துடன் கல்வியை கற்றுக்கொள்ளாத காரணத்தினால் அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்தபோதும் அவர்களின் செயற்பாடுகளில் காணப்பட்ட மந்தமான நிலை காரணமாக அவர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.

வரலாற்றுப் பாடத்தினை மறந்துசெயற்படுகின்ற எவரும் நிலையாக நிற்கமுடியாது.எந்த உயர்வு வந்தாலும் நாங்கள் மனிதர்கள் என்ற நிலையினை மறக்ககூடாது.

இன்று பல்வேறுபட்டவர்கள் காணப்படுகின்றார்கள். சரியாக செயற்படுகின்றவர்கள், தவறாக செயற்படுகின்றவர்கள், சுயநலத்திற்காக அரசியலை பயன்படுத்திக்கொள்கின்றவர்கள், தங்களை உயர்த்திக்கொள்வற்காக அரசியலை பயன்படுத்திக்கொள்கின்றவர்களும் இருக்கின்றார்கள். எந்தத் துறையாக இருந்தாலும் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமாகும்.

தங்களது சுயநலத்திற்காக செயற்படும் சிலர் இளைஞர்களை தவறான பாதைகளுக்கு இட்டுச்சென்று குடிபோதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கும் உட்படுத்தும்போது மட்டக்களப்பு சமூகத்தில் ஒரு பிழையான இளம் சமூகத்தினை உருவாக்கும் நிலையிருக்கின்றது. இளம் பராயத்தினர் மீதும் இளைஞர்கள் மீதும் சமூகம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

வருடம் பிறக்கும்போதே அடிதடி சண்டைகளும் வாள்வெட்டுச் சம்பவங்களும் நடந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இதேபோன்று ஆவா குழுவென்ற வாள்வெட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் தறுதலைகளாக இருப்பவர்களே இவ்வாறான வேலைகளைச் செய்கின்றனர்.

இதேபோன்று, மட்டக்களப்பிலும் இளைஞர்களை சிலர் தவறாக வழிக்கு இட்டுச்செல்லும் செயற்பாடுகளை மேற்கொள்வதைக் காணமுடிகின்றது. அவ்வாறானவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியை நாங்கள் வைக்கவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share the Post

You May Also Like