சகல இனத்தையும் பிரதிபலித்தே தேசிய கீதம் அமையவேண்டும்! பௌத்த, சிங்கள அடிப்படைவாதிகளுக்கு இது புரியாது என்கிறார் மாவை எம்.பி.

 

2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின் இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளின் ஒரு படியாக சிங்களத்தில் இசைத்து வந்த தேசிய கீதம் தமிழிலும் பாடி இசைப்பதற்கு நடைமுறை வந்தது. மீண்டும் 1949 இல் சுதந்திரதினத்தில் சிங்களத்திலும் தமிழிலும் பாடப்பட்டது. அப்பொழுது திரு.நல்லதம்பி என்பவர் சிங்கள கீதத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் வந்த பின்னும் 1987 வரை இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோதபாய இராஜபக்ஷ வெற்றி பெற்றார். ஐ.தே.முன்னணி அரசுக்குப் பாராளுமன்றத்தில் பெரும்மைப்பலம் இருந்த பொழுதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து விலகினார். அதன் காரணமாக மஹிந்த இராஜபக்ஷ பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பொது நிர்வாக அமைச்சும் அரசும் “எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடவும் இசைக்கவும் வேண்டும்” என அறிவித்திருக்கிறது.

ஆனால் பல நாடுகளில் அந்நாட்டுத் தேசிய கீதம் பலமொழிகளிலும் பாடப்படுகின்றமையைக் குறிப்பிடலாம்.

2015 இன் பின் தேசிய கீதம் சுதந்திர தின விழாவிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் பாடசாலைகள், பொது நிகழ்ச்சிகளிலும் கூட தேசிய கீதம் சிங்களம் தமிழ் இரு மொழிகளிலும் பாடவும் இசைக்கவும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அரசியலமைப்பு விதிமுறையின்படியே இந்நிகழ்ச்சிகளிலும் இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந்த நல்லிணக்க நடவடிக்கை இன்று மீறப்பட்டுள்ளது. 1956 ஆனி 5 ஆம் திகதி அப்போது பிரதமராயிருந்த பண்டாரநாயக்காவினால் “நாட்டின் அரச கரும மொழி சிங்களம் மட்டும்” என்று பாராளுமன்றத்தில் பிரேரனை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்தும், தமிழுக்கும் சம உரிமையை வலியுறுத்தியும் தந்தை செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியினரால் பாராளுமன்றத்தின் முன் காலி முகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. ஏனைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் உயர் தகை சான்றோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தச் சத்தியாக்கிரகிகள் மீது சிங்களத் தீவிரவாதிகள் கருங்கற்களை வீசியும், மூங்கில் தடிகளால் தாக்குதல் நடத்தியும் கலவரத்தை உண்டாக்கினர். அந்த வன்முறைத் தாக்குதலினால் சத்தியாக்கிரகிகள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களில் வன்னியசிங்கம், அமிர்தலிங்கம்,நாகநாதன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அமிர்தலிங்கம் தலை பிளந்தது. காலிமுகத்திடல் இரத்தம் சிந்திய களமாகியிருந்தது. திரு.அமிர்தலிங்கம் தலையிலிருந்து கட்டுப்போட்டும் இரத்தம் சிந்திய படி பாராளுமன்றுள் சென்றார். உரையாற்றினார்.

தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து உரையாற்றிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும், இடதுசாரிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தும் வாக்களித்தனர்.

சமசமாஜக் கட்சித்த தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா பாராளுமன்றத்தில் பேசும் பொழுது, “ஒரு மொழி (சிங்களம்) என்றால் இரண்டு நாடு; இரண்டு மொழிகள் (சிங்களமும் தமிழும்) என்றால் ஒரு நாடு” என்று கூறினார். இன்று வரை இந்த நிலமை மாறவில்லை. இரத்தக்களரி மட்டுமல்ல இலட்சக்கணக்கான உயிர்களும் பலியிடப்பட்டுவிட்டன.

தந்தை செல்வநாயகம் பாராளுமன்றத்திலும் 1949 முதல் நடைபெற்ற மாநாடுகளிலும் “இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த போதும் தமிழருக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை ; ஐரோப்பியரிடம் இழந்த சுதந்திரத்தை மீட்கப் போராட வேண்டும்” என்று கூறினார். பல போராட்டங்கள் பல வடிவங்களில் இடம்பெற்று வந்திருக்கின்றன.

1956 இன் பின் இலங்கையில் தமிழ் மக்களின் மொழிப் போராட்டங்களின் போது இந்திய நாட்டின் “கவர்னர் ஜெனரலாய் (முதல் ஜனாதிபதி) விளங்கிய இராஜ கோபாலாச்சாரியார் தனது “சுவராஜ்” பத்திரிகையில் குறிப்பிட்டார், இலங்கையில் “இரண்டு இணங்களுக்கிடையில் நடைபெறும் போட்டியின் வெளி அறிகுறியே மொழிப்பிரச்சனை. இது மொழிகளுக்கிடையிலோ, பண்பாடுகளுக்கிடையிலோ நடைபெறும் போராட்டமல்ல. இரண்டு சமூகங்களுக்கிடையில் நடைபெறும் போராட்டமாகும். தமிழ்ப் பேசும் மக்கள் சமத்துவமாக நடத்தப்படப் போகிறார்களா? அல்லவா? என்பதே கேள்வி என எழுதினார்.

உலகின் பல நாடுகளில் அந்த நாடுகளின் மொழிகளில் தேசிய கீதங்கள் பாடப்படுகின்றன. அந்நாடுகளின் மக்களின் மொழிகளில், இயற்கை அமைவுகளின், பிரதேசங்களின் அடையாளங்கள், பண்பாடுகள் பற்றி சுதந்திரத்தின் தாகம் பற்றிக் குறிப்பிடுகின்ற தேசிய கீதங்களைக் பார்க்கின்றோம்.

அண்மையில் ஒரு அமைச்சர் இந்தியாவில் ஒரு மொழியிலே தான் தேசிய கீதம் பாடப்படுகிறது. இலங்கையில் சிங்களமொழியில் தேசிய கீதம் பாடுவதில் என்ன தவறு என்று அறிவற்றுப் பேசினார்.

இந்திய நாடு சுதந்திரம் பெற்று உருவாக்கிய அரசியலமைப்பு இன்று பூரணமான ஒரு கூட்டாட்சி, “Federal Constitution” கூட்டாட்சி அரசியலமைப்பைக் கொண்டுள்ள நாடு. பல பிராந்திய,பல மொழிகளில் மொழி மாநிலங்கள், பூரண அதிகார ஆட்சி முறைகளைக் கொண்டுள்ளன. மாநிலங்களுக்குள்ளும் சமூகங்கள் பிரதேசங்கள் மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்வதற்கும் இடமுண்டு. பகிரப்பட்டுள்ளன. அற்புதமான இந்திய தேசிய கீதத்தில், இதயங்களில் எழுச்சி கொள்ளும் வகையில் பஞ்சாப், சிந்து, குஜராத் மற்றும் மராட்டியா அத்துடன் திராவிட (தமிழர்) ஒடிசா, வங்கம் மற்றும் விந்திய ஹிமாலய மலைகள்,யமுனை, கங்கா நதிகள் என்று இதயங்ககளை கொள்ளை கொள்கிறது. அந்த நாட்டின் தேசிய கீத இந்தி மொழியில் இல்லை. இரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியிலே உருவாக்கிய தேசிய கீதம் வங்க மொழியில் தான் பாடப்படுகிறது. இந்திய நாட்டின் இனங்கள் மொழிகள், மொழி பிராந்தியங்கள், மாநில அரசுகளின் பெயர்கள், நதிகளின் மலைகளின் பெயர்கள் தேசிய கீதத்திலே குறிப்பிடப்படுகின்றன. இவற்றையெல்லாம் இலங்கை நாட்டின் பௌத்த, சிங்கள பெரும்பான்மைத்துவ அடிப்படைவாதிகளுக்கு புலப்படாது.

Share the Post

You May Also Like